கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

திங்கள், 2 அக்டோபர், 2017


கல்வராயன் மலை மரபுநடை 

சேலம் வரலாற்று ஆய்வு மையம் ஏற்பாடு செய்த கல்வராயன் மலை மரபு நடை கடந்த 01-10-2017 ஞாயிறன்று நடைபெற்றது. நடைக்கு பதிவு செய்தவர்களை காலை 8.00 மணிக்கு வாழப்பாடி பேருந்து நிலையத்திற்கு வர சொல்லியிருந்தனர். சற்று காலந்தாழ்ந்து 8.30க்கு மூன்று மூடு வண்டிகளில் (Van) கருமந்துறையில் ஒன்று சேர்ந்து முதலில் சேம்பூர் என்ற ஊருக்கு போய் சேர்ந்தோம். அங்கு முதலில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கல்வராயன் மலை ஒரு வரலாற்று பார்வை என்ற நூலை மருத்துவர்
திரு.பொன்னம்பலம் வெளியிட திரு.வீரராகவன்  பெற்றுக்கொண்டார்.  அதன் பின் ஊர் மக்களால் வணங்கப்படுகின்ற பிள்ளையார் கோவில் என்ற சிறிய கல்திட்டையால் அமையப்பெற்ற பழமையான இடத்தை பார்த்தோம். அந்த கல்திட்டையின் உள்ளே சில (ஐந்து அல்லது ஆறு) சிறிய கற்கால கருவிகளை வைத்து வணங்குவதையும், இந்த கற்கால கருவிகள் கற்காலத்தில் மிகவும் பழங்காலத்தில் பண்ட மாற்று முறைக்கு பணமாக பயன்பட்டுள்ளது என்பதையும் அவற்றில் சிலவற்றை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அவரிடமிருந்து வாங்கிச்சென்று அதை தங்களுடைய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளதாகவும், இதற்காக அவரிடம் பற்றுகை சீட்டு கொடுத்துள்ளனர் எனவும் திரு.வீரராகவன்  அவர்கள் எடுத்து கூறினார். இக்கல்திட்டை கோவில் எதிரே ஒரு கோமாரிக்கல் இருந்தது. பின் அதே பகுதியில் மலை மேல் நான்கு கல்திட்டைகளும், அதற்கு மேல் பகுதியில் கல்குவைகள் இருப்பதையும் பார்த்து வந்தோம். கல்குவைகள் காலபோக்கில் விழுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் அடுக்கி வைத்துள்ளதாகவும் திரு பொன்.வெங்கடேசன் தெரிவித்தார். மலைப்பகுதியில் கடுக்காய், பலா மரங்களை காண முடிந்தது.

அடுத்து குன்னூரில் ஆசிரியர் திரு பெருமாள் அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கு அழைத்துச்சென்று பார்வையிட்டப்பின் தேநீர் அளித்தனர். அவ்வூரில் சாலையின் ஓரத்தில் இருந்து கோமாரிக்கல் மக்களும், வளர்ப்பு விலங்குகளுக்கு கொள்ளை நோய் (காலரா, டெங்கு, அம்மை போன்ற பரவும் நோய்கள்) வராமல் இருக்க கடவுளை வேண்டி நடப்படுகின்ற கல்வெட்டு ஒன்றை திரு நாகராசன் அவர்கள் படித்து காண்பித்தார். பின்னர் அங்கிருந்த ஊர்க்காரர்களிடம் உரையாடிய போது திரு.இராமசாமி என்பவர் ஊர் கணியானாக இருப்பவர் (கணியன் – திருமணசடங்கு செய்யும் ஊர் பெரியவர்), மலைமக்களின் வாழ்க்கை முறைகளையும், சடங்கு, சகுனம் பார்த்தல், திருமணம், இறப்பு, பொங்கல் விழா முதலியவற்றை விளக்கி கூறினார். இங்கு வாழ்பவர்களை மலையாளிகள் என்றும் தங்களை பெரியண்ணன் பிரிவை சாரந்தவர்கள் எனவும் தெரிவித்தார். கேட்டதற்கு மிக வியப்பாக இருந்தது, மலை வாழ் மக்களின் வாழ்வியல் பாரம்பரியம் வழிவழியாக தொடர்ந்து வருவதை காண முடிந்தது. இயற்கையோடு எப்படி இணைந்து வாழ்கின்றனர் என்பதையும் இதன் மூலம் நேரிடையாக உணர முடிந்தது. 1976 வரை கல்வராயன் மலைப்பகுதி சாகீர்தாரிடம்       [Jagirdar என்பவர் மன்னர் ஆட்சியில் இருந்த ஓரு பகுதியின், மாவட்டத்தின் வரி வசூலீப்பவர், அதிகாரம் படைத்த தலைவர்] இருந்ததாகவும் இதன் பின்னர் தான் சாலை வசதி, பள்ளி, மருத்துவம் மற்றும் இன்ன பிற வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைந்ததாகவும்












தெரிவித்தனர்.
குன்னூருக்கு அடுத்து கரியகோவிலில் பிற்பகல் உணவை முடித்துக்கொண்டு, அங்கிருந்த கரியராமர் கோவிலையும் 18ஆம் நூற்றண்டு கொடை கல்வெட்டைப்பார்த்து விட்டு பின்னர் சின்னமாங்கோடு என்ற ஊரின் மேல் பகுதியில் இருந்த சோழ அரசன் முதலாம் இராசேந்திரனின் கி.பி.1027 ஆம் ஆண்டை சேர்ந்த செக்கு கல்வெட்டை கண்ணுற்றோம்.

அடுத்து அருணா என்ற சிற்றூரில் காட்டுப்பன்றி குத்துப்பட்டான் சதிக்கல் பார்த்தோம்.  பின்னர் ஏழுபுளி என்ற சிற்றூரில் பல்லவர் கால நடுகல்லும், சோழர் கால நடுகல்லும் பார்த்துவிட்டு இறுதியாக ஏழுபுளியில் ஈசுவரன் கோவிலில் இருந்த கல்வெட்டுகளை பார்த்துவிட்டு வாழப்பாடியில் இறங்கி மிக வியப்பான அரிய செய்திகள், தகவல்கள், வரலாற்று எச்சங்கள் மற்றும் புதிய நட்புகளின் மகிழ்வான நிகழ்வுகளோடு திரும்பினோம்.  

Research Article -3 - Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796)

  Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796) (Monograph in Tamil by Jayaseela Stephen, Pondicherry, 1...