செங்கம் நடுகற்கள் மரபு நடை
திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம்
ஏற்பாடு செய்திருந்த ஐந்து இடங்களுகான இரண்டாம் செங்கம் நடுகற்கள் மரபு நடை 28-10-2018 அன்று திருவண்ணாமலை தமிழ்நாடு ஓட்டலிலிருந்து
காலை மூன்று மூடுந்துகளில் 60 பேர்
கால் 8.30 மணியளவில்
புறப்பட்டது.
1. முதலில் செங்கம்
சாலையில் திருவண்ணாமலையிலிருந்து 7 கிலோ
மீட்டர் தூரத்தில் பெரிய கோளப்பாடி
என்ற
கிராமத்தில்
இருந்த நான்கு நடுகற்களை பார்க்க சென்றோம். இது
முதலாம்
மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி.601 இல்
வட்டெழுத்தில்
பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு
வாசகம்:
கோவியைய
மயேந்திரபருமற்கு
யாண்டு
பதினொன்றாவது கீழ்வேணாட்
டுத்
துடரி மேல் விலக்குமிறை
யார்
வந்த ஞான்று பெரும்பா
ண்ணரையர்
மருமக்கள் அம்மகோ
ட்டையார்
சேவகன் சாக்கை ப
றையனார்
இளமகன் ஏறன்
எறிந்து
பட்டான்
முதலாம் மகேந்திர பல்லவன் 11 ஆட்சியாண்டில்
இரு குறு மன்னர்களிடையே நடந்த உள்ளூர் போரில் சாக்கை பறையனார் மகன் ஏறன் என்ற வீரர்
ஒருவர் இறந்ததற்காக எடுக்கப்பட்ட கல். திரு.ர.பூங்குன்றன் ஐயா அவர்கள் சொன்ன நடுகல்லின்
பொது விளக்கம் வருமாறு:
குன்று சூழ்இருக்கை நாடு என்ற செங்கம் பகுதியை சங்க இலக்கியத்தில்
சொல்லப்படுகிறது, ஆநிரை என்ற கால்நடை வளர்ப்பு விலங்குகளை குறிப்பாக மாடுகளை கவர்ந்து
செல்லுதலும், மீட்டலுமான கரந்தை, வெட்சி வீரர்களுக்கு நடுகல் எழுப்பும் வழக்கம் பற்றி
குறிப்புகள் உள்ளன. இந்நடுகல்லில் ஆரம்பகாலங்களில் எழுத்து பொறிப்புகள் இல்லாமலும்
பின் 6 நூற்றாண்டுக்கு
பிறகு எழுத்தும் சேர்க்கப்பட்டன. தென் மாவட்டங்களிலிருந்து வந்த வணிகர்களின் மூலம்
இவ்வெழுத்து பரவியதாக கருதப்படுகிறது. பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் நீர் நிலைகளை
ஏற்படுத்தினார்கள், நடுகல்லும் அதிகம், இது பின்னர் சோழர் காலத்தில் குறைந்து வேளாண்மை
அதிகமாகியது. பலி கொடுப்பது என்பது போரில் ஆட்கள் குறைவதால் ரத்தம் சிந்தினால் ஆள்
எண்ணிக்கை பெருகும் என்ற நம்பிக்கையில் ஏற்பட்டது. இது காலப்போக்கில் அரசர்கள் தங்கள்
நன்மைகளுக்கு செய்ய அதிகமாகியது. இவை உடல் நலத்திற்கு, போரில் வெற்றி பெற, வெற்றியடைந்த
பின், மனித இன விருத்திக்கு, செல்வம் கொழிக்க என மாறியது (நவகண்டம், அரிகண்டம் போன்றவை)
ரத்த உறவு கொண்ட பங்காளிகளே கல் எடுக்கும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது.
பெரிய கோளப்பாடியிலேயே
காலை சிற்றுண்டி அருந்திவிட்டு 10.40
மணியளவில் அடுத்து
2. மேல் புஞ்சை கிராமத்தில் இருந்த கி.பி.7ஆம் நூற்றாண்டு நடுகல்லை பார்க்கச்சென்றோம். இக்கல்லில் மாந்தவர்மர்
என்ற பட்டம் இங்குள்ள உள்ளூர் தலைவனுக்கு சூட்டிக்கொண்டனர் என்றும் சங்கமங்கலம் என்ற
ஊரில் நடந்த போரில் சிரிகங்கரைசர், கொங்கரைசர் என்ற இரு சிற்றரசர்களுக்குயிடையே நடைபெற்ற
போரில் இறந்ததற்கு எடுக்கப்பட்ட நடுகல் விளக்கம் கூறினார் திரு பூங்குன்றன் ஐயா அவர்கள்.
இந்நடுகல் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது இதன் கல்வெட்டு வாசகம்:
(மா)ந்தபருமற்குப்
பதி
னொன்றாவது
கொங்க
ணி அரைசரு
படை ஓடு சிரி
கங்கரைசரு
சங்கமலத்
தெறிந்த
ஞான்று சிரிகங்கரைசரு
சேவகர்
ஓடு கனாய
ர் எறிந்து
பட்ட கல்
இக்கல்
இங்குள்ள வேடியப்பன் கோயிலில் உள்ளது, இங்கும், அருகில் உள்ள கடலாடியில் உள்ள நடுகல்
வழிபாட்டிலும் உயிர்ப்பலி கொடுப்பதில்லை, சமணம் சைவம் பரவிய பின், மாறி இருக்க வாய்ப்பு
உண்டு என கருதப்படுகிறது. இவ்வேடியப்பன் கோயிலில் எட்டி மரம்(ஸ்தல விருட்சம்) வைக்கப்பட்டுள்ளது.
3. இதற்கடுத்து
நரசிங்கநல்லூர் அருகேயுள்ள படி அக்கிரகாரம்
கிராமத்திற்கு 11.45 மணியளவில்
ஒரு கிலோ மீட்டர் நடந்து சேயாற்றை கடந்து சென்றோம். இவ்விடத்தில் இரண்டு நடுகல் ஒன்றாய்
அருகருகே வைக்கப்பட்டுள்ளது இதன் காலம் கி.பி.587 சிம்ம விஷ்ணு பல்லவர் ஆட்சியாண்டு 33ல் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:
1.கோவியைய
சிங்கவிண்ணபருமற்கு முப்பத்து
2.மூன்றாவது
கங்கதி அரைசரு மக்கள் மேன்விண்ணன்னா
3.ர்
சேவகர் தொப்புரவருப்பாடி ஆ(ள்கி)ன்ற பசிரப்
4.பண்ணன்
குறட்டாதன்…வரமு கொண்ட ஞான்
5.றெறிந் 9.னாதியார்
6.து
பட்டா 10.மகன் க
7.ன்
கந்த 11.ல்
8.பருபேன்
மற்றோரு
நடுகல்லின் வாசகம்:
கோவியைய
சிங்கவிண்ண
பரு….யாண்டு
முப்பத்து.மூன்றாவது
சேவகர்
மகனார் முக….சேவகர்
…பட்ட
சரையர்
ஆன்
தொறு
எறிந்து
பட்டா
ருகல்
இதுவும்
உள்ளூர் போரில் இறந்துபட்டமைக்காக எழுப்பபட்டக்கல்.
4. அடுத்ததாக
தொரப்பாடி கிராமத்தில் இருந்த இரண்டு
நடுகல்லை 12.30 மணிக்குச்
சென்று பார்த்தோம். கி.பி.642 இல்
முதலாம் நரசிம்ம பல்லவர் 12 ஆட்சியாண்டில்
எடுக்கப்பட்டக்கல். இதன் வாசகம்:
கோவிசையஅ
நரசிங்க பருமற்கு யாண்டு (பன்)
னிரண்டாவது
கொங்கணி அரைசர் மகன் வ
ச்சன்
மேற்சென்று சிரிகங்கைரசர் சே
வோர்
எறிந்த ஞான்று பட்டார சிரிகங்கரைசர் சேவ
கர்
கொற்றவிணற்ற குன்றனார் கல்
இக்கல்வெட்டு
எழுத்து தொல்காப்பிய இலக்கண விதிப்படி வெட்டப்பட்டதாக திரு.பூங்குன்றன் ஐயா தெரிவித்தார்.
பல கல்வெட்டுகள் எழுத்துப்பிழைகள் இருக்கும் இக்கல்வெட்டு படித்த ஒருவர் சொல்லி வெட்டப்பட்டிருக்க
கூடும் எனவும் கூறினார். அடுத்த கல்வெட்டு பொறிப்பு:
1.கோவிசைய
மயேந்திர 6.எறிந்த ஞான்று கங்க
2.பருமற்கு(பத்து)
ஆவதுக 7.ரைசரு சேவகரு எறிந்து
3.ங்கரைசரோடு
புறத்து கங் 8.பட்டாரு ராராற்றூ ஆண்ட
4.கரைசரு
மக்கள் பொன் 9,குன்றக்கண்ணியார்
5.னந்தியாரு
பெருமுகை 10.கல்
இவ்வூரில் கல்வெட்டை சுத்தம் செய்து விழுப்புரம் தொல்லியல் அறிஞர் திரு.வீரராகவன்
அவர்கள் படித்து காட்டினார். இரண்டாவது நடுகல் எழுத்துப் பொறிப்பை சுத்தம் செய்து படிக்க
ஆரம்பித்தவுடன் அந்த ஊர் பெண் ஒருவருக்கும், முதியவர் ஒருவருக்கும் சாமி ஏறி ஆடி இத்தெய்வமான
கல்லை தீங்கு செய்ய வந்திருப்பதாக கருதி சபிக்கும் சொற்களை உதிர்த்தனர் அதனால் மேற்கொண்டு
சிக்கல் எழாமல் இருக்க உடன் கடைசி இடமான மேல் செங்கம் புறப்பட்டு சென்றோம்.
5. இறுதியாக
மேல்செங்கம் அரசு வனத்துறையின்
நீலகிரி தைல மர சமூக காட்டின் உள்ளே அமைந்த ஐயனார் கோயில் மரத்தடியில் பிற்பகல் 2.00 மணியளவில் உணவு (ஊண் சுவை அடிசில்) அருந்திவிட்டு அங்கிருந்து
ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த நடுகல்லை பார்தோம். இந்நடுகல் இராச சிம்ம பல்லவன்
காலத்தில் கி.பி 7 ஆம்
நூற்றாண்டில் எடுக்கப்பட்டது. இக்கல்லில் காமிண்டன் என்ற சொல் அக்காலத்தில் வலிமையானவன்
என்ற அர்த்ததில் உள்ளது, பின்னர் தேவாரத்தில் இச்சொல் காமுண்டன் என்றால் ரவுடி என்ற
அர்த்ததில் மாறியுள்ளது என்றும் மேலும் ‘மல்செங்கை’ என்ற வார்த்தை மேல்செங்கை எனவும் அதைவிட ‘மல்’ என்பது
வலிமை என்ற பொருளில் வழங்கபட்டதாக கருத இடமுள்ளது எனவும் சொன்னார் திரு பூங்குன்றன்
அவர்கள். மாமுடைய பாரதாயர் ஐகன் என்ற வார்த்தை பாரம் என்ற பெரிய குடும்பத்தில் பிறந்தவன்
என்றும் இப்பகுதியில் இந்த குடிகளை சேர்ந்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனவும். ஐகன்,
ஐயன், ஐயனார் என மருவி வந்துள்ளதையும், மாடுகளை மீட்பதற்காக நடந்த சண்டையில் இறந்தவருக்கு
எடுக்கப்பட்ட நடுகல் என திரு.பூங்குன்றன் விளக்கமளித்தார். இதன் கல்வெட்டு வாசகம் ‘நடுகல் கல்வெட்டுகள்’ நூலில் கிடைக்கததால் இப்பதிவில் எழுத முடியவில்லை.
இதன்
பின்னர் நடுகற்களை பற்றி மேலும் சில விளக்கங்கள் வந்திருந்த மாணவர்கள், ஆய்வாளர்கள்,
ஆர்வலர்கள் கேட்ட கேள்விகளுக்கு திரு ர.பூங்குன்றன் அவர்கள் விளக்கம் அளித்தார். அதன் சாராம்சம் வருமாறு:
Ø உள்ளூர்
செல்வத்தை பாதுகாக்க நடுகல் நடப்பட்டது, நந்திவர்மன் காலத்தில் தமிழ் எழுத்துகள் வருகின்றன,
அரசுப்புலவர்கள் அதிகாரத்தை கல்வெட்டில் புகுத்த ஆரம்பிக்கின்றனர்.
Ø வீர
துக்க காணம் என்ற வரி அக்காலத்தில் நடுகல் வைக்க வாங்கப்பட்டதாக ஒரு கல்வெட்டின் மூலம்
தெரிய வருகிறது.
Ø பல்லவ
அரசர்கள் பிராமணர்களை காடு ஒட்டிய பகுதிகளில் நாடாக பெருக வேண்டும் என்ற நோக்கத்தில்
குடியமர்த்தி பிரமதேயங்கள் உருவாக்கினர்.
Ø ஆஸ்திரிலேயாவில்
இன்றும் பழங்குடி மக்கள் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள முறைகளின் படியே இறந்தவர்களுக்கு
நடுகல் வைக்கின்றனர். Durkeim என்ற
மேனாட்டு அறிஞர் இதை வளமை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நடுகல் வழிபாடு உள்ளது
என தெரிவித்துள்ளார்.
Ø தமிழ்ச்சமூகம்
கி.பி 6 முதல்
9 ஆம் நூற்றாண்டுகளில்
எப்படி வளர்ந்தது என்பதை தெரிந்து கொள்ள எடுத்துகாட்டாக இருக்கிறது. 8 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு சாதாரண மக்கள் எப்படி வாழ்ந்தனர்
என்பதை அறிய இந்த நடுகல் உதவுகிறது. ஆயுதம் பயன்படுத்தியது, வரிகள், வேளாண்மை போன்றவற்றை
பற்றி அறிந்து கொள்ளமுடியும். இப்போது இந்தப்பகுதியில் என்ன வகையான வழிபாடு நடக்கிறது
என பார்த்தால் பழைய மரபு தொடர்ச்சி தெரியவரும்.
Ø சந்தி
வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஒரு கால கட்டத்தில் நடுகல் வழிபாடுடன் சேர்த்து
இதையும் ஒன்றாகப்பார்க்கப்பட்டது. Hastings அறிஞர்
வழியில் போய் வழிபாடு செய்தால் பாவங்கள் வழியிலேயே போய்விடும் என்ற நம்பிக்கை இருந்தது
என்று கூறுகிறார், இன்றும் இப்பகுதியில் சந்தி வழிபாடு நடைபெறுகிறது. சங்க இலக்கியத்தில்
அணங்கிடை நெடுமுடி என்ற சொல் வருகிறது. அணங்கு என்றால் தீண்டும் தெய்வம், வருத்துகிற
தெய்வம். நடுகல் வழிபாடும் ஒருவகையான அணங்குதான்.
Ø சமண
முனிவர்கள் மலைக்குகைகளில் வந்து தங்குவதற்கு முன்பே நம் முன்னோர்கள் வழிபட்ட இடங்களான
அரிட்டாபட்டி, திருமலை(ராமநாதபுரம்), பறையன்பட்டு ஆகிய இடங்களில் சமணப்படுக்கைகளுக்கு
மேலே வீரர்களின் ஒவியம் உள்ளது. ஏற்கனவே வழிபட்ட இடங்களில் சென்று தங்கி பிரச்சாரம்
செய்தால் நல்லது என்றே தங்கியுள்ளனர் சமணர். உயிர்விட்டப்பிறகு தான் சமணப்படுக்கைச்
செய்யப்பட்டுள்ளது.
Ø பள்ளி
என்பது சமணத்தொடர்பான சொல் அல்ல, வடதமிழகத்தில் பள்ளி, நரிப்பள்ளி, புதுப்பள்ளி ஆகிய
ஊர்ப்பெயர்கள் உள்ளன. ஆடு மாடு தங்கும் இடம் பாயல் கொள்ளும் இடம் என நற்றிணையில் வருகிறது,
இச்சொல் நினைவுச்சின்னம், உறங்குவதற்கும் என்ற சொல்லாகிவிட்டது. தாதகப்பட்டியில் பாகல்
என்ற பலா மரத்தின் அடியில் வீரர்களை புதைத்து வழிபட்டு இருக்கிறார்கள். மரத்திற்கு
அடியில் தாழியில் வைத்து புதைக்கப்பட்டச்செய்தி பதிற்றுப்பத்தில் வருகிறது. கல்வட்டம்
வைத்த நடுகல்லும் இருக்கிறது. பெருங்கல் சின்னத்தைதான் பாழி, பள்ளி என்று அழைக்கின்றனர்.
உயிர் விட்ட இடத்தில் முன்னோர் தங்கியுள்ளனர் என்ற அர்த்ததில் பாழி பள்ளி என்ற சொல்
உள்ளது. அதனால் தான் இங்குள்ள ஊர்களுக்கு பள்ளி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாடு
மேய்ப்பவர்களின் பள்ளி என்ற சொல் நடுகல் வழிபாடு செய்த மக்களிடம் இருந்து சமணர்களிடம்
சென்றுள்ளது. வடக்கிருத்தல் கூட நம்மிடமிருந்துதான் சமணரிடம் சென்றுள்ளது. அறிஞர்கள்
சொன்னதால் கேள்வி கேட்காமல் அதையே சொல்லிக்கொண்டுள்ளனர். ஆய்வுகள், செய்திகள் சொல்வது
வீரர்கள் இறந்தவர்களின் நினைவாக வைக்கப்பட்ட இடம் பள்ளி இது நடுகல் தொகுதியில் இருந்து
சமணர் எடுத்துக்கொண்டனர்.
Ø பெண்களுக்கு
நடுகல் அதிகம் இங்கு இல்லை காரணம் அவர்கள் இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டதுதான். கர்நாடாகாவில்
அதிகம் உள்ளது. இது சதிக்கல், மாசதிக்கல் என அழைக்கப்படுகிறது. சமீபத்தில் செஞ்சி அருகே
பென்னாகரத்தில் பெண் உருவம் உள்ள நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Ø இக்கால
மாணவர்களுக்கு நடுகல் தொடர்பான ஆய்வுகள் செய்ய வாய்ப்புள்ளவை - உருவத்தைப்பற்றி, சங்க
காலம் முதல் வந்துள்ள மொழி அமைப்பு, அரசியல் (வர்மர், அரைசர், சேவகர்), நாட்டுப்பிரிவு,
ஊர்ப்பெயர் ஆந்தைபாடி, பெருச்சானூர் (வன்னியரில் ஒரு பிரிவினர் பெருச்சாளியை தெய்வமாக
வணங்கும் ஊர்), ஆட்ப்பெயர் (ஏரன்-ஏர்-எருது-குடி-குலச்சின்னத்தைக்கொண்ட குடியின் பெயர்).
Ø வருங்கால
சந்தததியினருக்கு வரலாறு, முன்னோர் பற்றிய தகவல்கள், தொல்லியல் குறித்த ஈடுபாடு குறித்து
இஸ்ரேல் நாட்டினரின் வரலாற்று தொல்லியல் பற்றைப்போல் இருக்க வேண்டும் என்ற ஒரு உண்மை
தகவலோடு விளக்கி கூறினார்.
இறுதியாக திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் இணைச்செயலர் திரு.பிரேம்குமார்
அவர்கள் சென்ற மரபு நடை கோயில், சிற்பம், ஒவியம், கல்வெட்டு, குகை ஆகியவற்றைப் பார்த்தோம்.
இம்முறை செங்கம் பகுதியானது மலைகள், காடுகள், புதர் காடுகள் நிறைந்தவை, புதர் காடுகள்,
மழைய தருவிக்கும் தன்மை கொண்டவை, மேய்ச்சல் நிலமும் உள்ளவை, ஆகையால் மாடு வளரப்பு,
மாட்டுச்சந்தை அந்தியூர், திருக்கடையூர், திருவண்ணாமலையில் போன்ற பகுதிகளில் ஆயிரகணக்கான
ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தருமபுரி, கிருட்டிணகிரி, மலைத்தொடர்களின் கணவாய் பகுதியாக
உள்ளதால் மாடுகளை வெகுதூரத்திலிருந்து பழங்காலத்தில் மாதக்கணக்காக கொண்டு வந்து விற்பனை
செய்து, வாங்கி சென்றுள்ளனர். மந்தையாக இருந்ததால் கவர்தல், மீட்டல் நடைபெற்று இருக்கிறது
இது தொடர்பான நடுகல்லும் அதிகம் உள்ளன ஆகையால் இதன் பழம் வரலாற்றை தெரிந்து கொள்ள இங்கு
ஏற்பாடு செய்தோம், என்றும் பூங்குன்றன் ஐயா அவர்கள் சங்க இலக்கியம் அதிகம் பயன்படுத்துகிறார்,
இவை கற்பனையல்ல, வாழ்வியல் சாரந்த இலக்கியம். பண்பாடு, அரசியல், பொருளாதாரம், வணிகம்
ஆகியவற்றைப்பற்றி நிறைய சொல்கின்றன என்று பேசி அனைவருக்கும் நன்றி கூறி அடுத்த மரபு
நடை அடுத்த மாதம் நவம்பர் 25 அன்று
பழங்கால பாறை ஒவியங்களை காண கீழ்வாலை, செத்தவரை மற்றும் பனமலை செல்லவிருப்பதாக அறிவித்து
இனிதே நிறைவு செய்தார்.
* * * * * *
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக