கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

வியாழன், 15 மே, 2025

இலங்கை சுற்றலா (ஈழத்தில் சோழம்) பகுதி - 1 (முதல் மூன்று நாட்கள்)

     எண்திசை வரலாற்று மரபு நடை குழு ஏற்பாடு செய்திருந்த ஈழத்தில் சோழம் என்ற இலங்கை பயணம் 02-05-2025 முதல் 10-05-2025 ஆகிய நாட்களில் சென்ற இடங்களும் அதன் வரலாற்று சிறப்பும், படங்களும்.

02-05-2025 முதல் நாள்

1. அநுராதபுரம் - மகா போதி மரம் உள்ள இடம் பார்க்கச் சென்றோம். மிகவும் பழமையான கி.மு.4 ஆம் நூற்றாண்டில் நிறுவபட்டு 1300 ஆண்டுகளாக தலநகரமாக திகழ்ந்தது. முதலாம் ராஜ ராஜ சோழன் கி.பி.993 முதல் 1070 வரை அநுராதபுரத்தை தலைநகராக கொண்டு வட பகுதியை ஆட்சி செய்துள்ளனர். பின்னர் விஜயபாகு மன்னர் இலங்கையை மீட்டு பொலன்னறுவையை தலைநகரமாக மாற்றினார். தேவநாம்பிய திச என்ற இலங்கை மன்னரின் (கி.மு.250-210) வேண்டுகோளுக்கு இணங்க அசோகரின் மகள் சங்கமித்திரா மற்றும் சகோதரர் மகிந்தாவுடன் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் ஒரு கிளையை எடுத்து வந்து அநுராதபுரத்தில் நட்டுள்ளனர். இதன் பிறகு புத்த பிக்குகளுக்காக விகாரையும், தியான மண்டபங்களும், பிக்குகள் தங்குமிடமும் கட்டி புத்த மதத்தை போற்றி வளர்த்துள்ளனர்.

 


மாக போதி மரம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வளர்க்கப்பட்டு அதனை சுற்றி சுவர் எழுப்பி புத்த வழிபாட்டுத் தலங்களை அமைத்துள்ளனர். இந்த நான்கு பக்க சிறு மண்டபம் மேலே ஏற அடியில் கீழே அரை சந்திர வட்ட கள் வைக்கப்பட்டுள்ளது இச் சந்திர வட்ட கல் அனைத்து புத்தர் மண்டபங்கள், ஸ்தூபிகள் ஏறும் முதல் படியில் வைக்கப்பட்டுள்ளன. மரக் கிளைகளை தாங்கி நிற்க தங்க மூலாம் பூசப்பட்ட கழிகளை நட்டுள்ளனர்இந்த மரத்திலிருந்து  சற்று தொலைவில் மிகப் பெரிய ரத்னமாலி ஸ்தூபா என்ற 338 அடிகள்  கொண்ட ஸ்தூபம் உள்ளது. இதனை துட்டகாமனி என்ற சிங்கள அரசன் இரண்டாம் நூற்றாண்டில் கட்டியதாக தெரிகிறது, பின்னர் சோழ மன்னர்களின் படையெடுப்பில் இடிக்கப்பட்டு, அதன் பின்னர் 12ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாகு என்ற அரசனால் பழைய நிலைக்கே கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.











2. இரண்டாவது இடமாக அநுராதபுரத்தில் உள்ள இசுருமுனிய புத்தர் கோயிலுக்குச் சென்றோம். தேவநாம்பிய திச என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த கோயில் பாறை குகையுடன் ஒரு விகாரையும், மேலே ஒரு பாறையில் புத்தர் சிலையும் உள்ளது. கீழேயுள்ள கோயிலுக்குள் படுத்த நிலையில் புத்தர், விஷ்ணு சிற்பங்களும், ஓவியங்களும் உள்ளன. மேலே ஒள்ள பாறை மண்டபத்திலும் புத்தர் சிலையும் ஓவியமும் காணப்படுகிறது. இதன் அருகே பாறையில் வெட்டப்பட்டுள்ள குளத்தில் யானை சிற்பம் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் பெயர் கொண்ட இசுருமுனியா காதலர் சிற்பமும் அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் அரசன் துட்டகாமனின் மகன் சாலியா மற்றும் அசோகமாலா என்ற பெண் என கூறப்படுகிறது.


 







அநுராதபுரத்திலிருந்து மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு யாழ்பாணத்திறகு இரவு 9 மணியளவில் சென்றடைந்தோம். யாழ்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள North Gate என்ற சொகுசு விடுதியில் தங்கினோம். 


03-05-2025 இரண்டாம் நாள்

3. யாழ்பாணம்நயினாத் தீவு நாகபூஷணி அம்மன் கோயில்

இலங்கையின் வடபகுதி யாழ்பாண பிரதேசத்தில் 22 கிலோ மீட்டர் தூரத்தில் 40 நிமிடம் படகு பயணத்தின் மூலம் இத்தீவை அடையலாம். நயினாத் தீவு அருகில் புங்குடு தீவு உள்ளது. நயினாத்தீவில் அக்காலத்தில் இருந்த அம்மன் சிலைக்கு நாகம் பூ எடுத்து வந்து வைத்ததாகவும் அதனால் நாகபூஷணி அம்மன் என பெயர் வழங்கபட்டதாகவும் கூறப்படுகிறது. இத்தீவு சிலப்பதிகாரத்தில் கூறப்படும் மணிபல்லவத் தீவு எனவும் பலர் அடையாளப்படுத்தியுள்ளனர். கோயில் தமிழ் ஈழப் போரில் இடிந்து போனதால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இத்தீவில் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும் கூறினர்.









4. கீரிமலை தீர்த்தக் கேணி (நன்னீர் கேணி)

அடுத்ததாக யாழ்பாண பிரதேசத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ள கீரிமலை என்ற ஊருக்கு சென்றோம், இவ்வூரில் கடற்கரையை ஒட்டி நன்னீர் குளம் ஒன்று உள்ளது, கடலின் உப்புத் தன்மை முற்றிலும் நீக்கப்பட்டு கடற்கரை ஒட்டியே இந்த தீரத்த கேணி அமைந்துள்ளது. அதன் அருகே இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக மண்டபம் உள்ளது. இறந்தவர்களுக்கு சடங்குகளை செய்ய இங்கு வந்து  நன்னீர் குளத்தில் குளிக்கின்றனர். இந்த மண்டபம் அருகே நல்லூர் ஆறுமுக நாவலரின் சிலை ஒன்று உள்ளது.

கடற்கரைக்கு வெளியே சற்று தூரத்தில் நகலேஸ்வர சுவாமி கோயில் பழமையான இக்கோயில் கீரி முகமுடைய யமதக்கனி முனிவர் இப்புனித தீர்த்ததில் நீராடி நகுலேஸ்வர பெருமானை வணங்கி சாப விமோசனத்தை பெற்றதாக கோயில் புராண வரலாறு கூறுகிறது.







(படத்துக்கு நன்றி - திரு சிவசங்கர்பாபு)

5. யாழ்பாண டச்சுக் கோட்டை

     அடுத்த இடமாக யாழ்பாணக் கோட்டையை காணச் சென்றோம். இக்கோட்டை கி.பி.1619 ஆண்டு போர்ச்சுகீசியரால் நாற்சதுர வடிவில் 62 ஏக்கர் பரப்பளவில் நான்கு பக்கமும் கொத்தளங்கள், காவற் கோபுரங்கள், பீரங்கிதளங்கள் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. 1659 ஆண்டு ஒல்லாந்தர் என்ற டச்சுக்காரர்கள் கைப்பற்றி சுண்ணாம்பு காரையால் ஐங்கோண வடிவமாக மாற்றியமைத்துள்ளனர். கொத்தளங்கள், தேவலாயம், ஆயுதக்களஞ்சியம், சிறைச்சாலை, இராணிமாளிகை, நிர்வாக மையங்கள் மற்றும் 21 கிணறுகளுடன் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. கோட்டையின் முகப்புகளில் அகழியும் உள்ளது. கோட்டையின் நடுவே பின்னர் வந்த அரசர்கள் உயரமான கோபுர மண்டபம் அமைத்து அங்கு கடும் தண்டனையான தூக்குத் தண்டனை மக்களுக்கு தெரியபடுத்துதற்காக அந்த கோபுரத்தில் அளித்ததாக தெரிவித்தனர்.









6. யாழ்பாணம் பொது நூலகம்

இதற்கடுத்து யாழ்பாண நகரின் மையமாக விளங்கும் பொது நூலகத்திற்கு சென்றோம். இந்நூலகம் 1939 ஆண்டு தொடங்கப்பட்டு பெரிய நூலகமாக திகழ்ந்து வருகிறது. இங்கு தனித்தனியாக பல பிரிவுகளில் நூலகம் இயங்கி வருகிறது சிறுவர் பகுதி. ஆவணவாக்கம், உசாத்துணை பகுதி, விழிப்புரற்றோர் பகுதி, கணனிப் பிரிவு, இந்தியப் பிரிவு, இளையோர் பகுதி, தனிப்பட்ட சேகரிப்புகள், கேட்போர் கூடம், பயிற்சி பட்டறைகள், நடமாடும் நூலகம், பருவ இதழ் பகுதி, புத்தகம் கட்டும் பகுதி, படி எடுக்கும் பகுதி என பல பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. தமிழ் ஈழ போரில் எரிக்கபட்டு அழிவுக்குள்ளான இந்நூலகம் தற்போது பலரின் நன்கொடைகளால் மீண்டும் புத்தொளி பெற்று இயங்கி வருகிறது.     







7. நல்லூர் கந்தசாமி கோயில்

முதல் நாளின் இறுதியாக யாழ்பாண நகரில் அமைந்துள்ள இப்பழமையான முருகன் கோயிலுக்கு சென்றோம். இக்கோயில் போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர், பிரிட்டிஷார் காலங்களில் இடிக்கப்பட்டது. அவ்வப்போது மீண்டும் கட்டப்பட்டு இறுதியாக தமிழ் ஈழப் போரிலும் சிதலமடைந்து 2010 ஆண்டுக்குப் பிறகு தற்போது மீண்டும் நான்காவது முறையாக புதிப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவராக வேல் வைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும். யாழ்பாணம் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களால் திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பழமை குறித்த ஆதாரங்களை காண முடியவில்லை.


 



04-05-2025 மூன்றாவது நாள்

7. திருகேத்திசுவரம் சிவன் கோயில்

இரண்டாவது நாளின் முதல் இடமாக திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடிய பாடல் பெற்ற தலமான திருக்கேத்திசுவரம் சென்றோம். இக்கோயில் சோழர் காலத்திலிருந்து புகழ் பெற்று விளங்கியுள்ளது. முன்னர் மாந்தை, மாதோட்டம் என்ற அழைக்கப்பட்ட நகரில் இக்கோயில் அமைக்கப்பட்டிருந்தது. கேதுவிற்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோயில் மண்டோதரி வழிபட்டதாக கோயில் அர்ச்சகர் தெரிவித்தார். இக்கோயில் போர்ச்சுகீசியரால் பல விலையுர்ந்த பொருட்கள் திருடபட்டு, இடித்துள்ளனர், நீண்ட காலமாக காடு போல் இருந்த இடத்தை அறுமுக நாவலர் பழைய பாடல்கள் மற்றும் இடத்தை அடையாளம் காட்டி இலங்கை தமிழர்களால் புனரமைக்கப்பட்டு 1903 ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. புதிய கற்களை வைத்து கற்கோயிலாக இந்திய பிரதமரின் உதவியோடு மறு கட்டுமானம் செய்யப்பட்டு 2022 ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளதை இப்போதுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலின் முன்பகுதியில் சோழர்கால நந்தி ஒன்றே இதன் பழமையை காட்டும் சான்றாக உள்ளது. இக்கோயிலை இடித்து அழித்த போது அங்கிருந்த கல்வெட்டு ஓன்று பாதுகாக்கப்பட்டு கொழும்பு தேசிய நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது



8. கன்யாகுள வெந்நீர் ஊற்று

திருகேத்தீசுவரத்திலிருந்து 160 கி.மி தூரத்தில் உள்ள திருகோணமலை செல்லும் வழியில் கன்யாகுள வெந்நீர் ஊற்று உள்ள இடத்திற்கு சென்றோம். இங்கு 7 வெந்நீர் ஊற்றுகள் உள்ள. தொடரந்து எந்நேரமும் வெந்நீர் ஊற்றெடுத்துக் கொண்டே உள்ளது. பலர் அந்த ஊற்று நீரில் குளித்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.




9. திருகோணமலை

வெந்நீர் ஊற்றுகளை பார்த்த பின்னர் இலங்கையின் கிழக்கு கடற்கரையின் இயற்கை துறைமுகமாக விளங்கும் திருகோணமலைக்குச் சென்றோம். இந்நகரம் மிகவும் பழமை வாய்ந்த கோயில் நகரமாகும். இங்கு உள்ள திருக்கோணேசுவர கோயில் ஒல்லாந்தர்களால் கட்டப்பட்ட பிரடரிக் கோட்டையின் குன்றின் மேல் அமைந்துள்ளது. போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என காலனிய ஆட்சியில் மிகவும் பாழ்படுத்தபட்டு பின்னர் புனரமைக்கப்பட்ட கோயிலாகும். திருஞானசம்பந்தர் இக்கோயிலைப் பற்றி ஒரு பதிகம் பாடியுள்ளார், திருநாவுக்கரசர், சுந்தரரும் மற்றும் அருணகிரிநாதரும் திருப்புகழில் புகழ்ந்து பாடியுள்ளார். இரவாணன் வழிபட்ட கோயிலாகவும் கூறப்படுகிறது. போர்ச்சுகீசியர் இக்கோயிலை இடித்து அழித்த போது அங்கிருந்த கல்வெட்டு ஓன்று பாதுகாக்கப்பட்டு இப்போது கொழும்பு தேசிய நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.









10. பத்ரகாளி அம்மன் கோயில்

நாளின் இறுதியாக திருகோணமலையில் புதியதாக கட்டபட்ட இந்த பத்ரகாளியம்மன் கோயிலை பார்க்கச் சென்றோம். இக்கோயில் காலையில் 5 மணிமுதல் 8 மணிவரையிலும், மாலையில் இதேபோல் 5 மணி முதல் 7 மணிவரையில் மட்டும் திறந்திருக்கும். நாங்கள் மாலை 6.30 மணியளவில் சென்றதால் கருவறையை மூடிக் கொண்டிருந்தனர், கோயிலின் முன் மண்டபத்தை மட்டும் பார்த்தோம். கோயிலின் கூரையில் மேல் பிரமிப்பூட்டும் வகையில் அம்மனின் சிலைகளும், பல புராண சிற்பங்களும் வடிவமைத்துள்ளதை காணும் போது வியப்பாக இருந்தது. 

பின்னர் திருகோணமலை உப்புவேளி என்ற கடற்கரையோர விடுதியில் இரவு தங்கினோம்.    








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Research Article -3 - Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796)

  Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796) (Monograph in Tamil by Jayaseela Stephen, Pondicherry, 1...