எகிப்து வரலாற்று மரபு நடை
எண்திசை வரலாற்று மரபுநடைக் குழு சென்ற ஆண்டு 2023 அக்டோபர் மாதம் கம்போடியாவின் ஆங்கோர்வாட் மரபுநடைக்கு பிறகு ஏற்பாடு செய்திருந்த எகிப்து மரபுநடை நைல் நதியோரம் 03-01-2024 அன்று புலனக் குழுவில் (Whats app) செப்டம்பர், 2024 மாதம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 21-01-2024 அன்று 21-09-2024 முதல் 28-09-2024 வரை மரபு நடை செல்ல இருப்பதாக இதன் விபரங்களை வெளியிட்டனர். கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக இதன் ஏற்பாடுகள் Grand Royal Tour நிறுவனம் மூலம் செய்யப்பட்டது 30 பேருடன் எகிப்திய கனவுப் பயணம் ஆரம்பமானது.
இந்த வரலாற்றுப் பயணத்தின் விளக்கத்தையும், நாங்கள் பெற்ற நீங்கா நினைவுகளையும் கூறுவதற்கு முன் எகிப்து நாடு, அதன் பண்டைய வரலாற்று தகவல்களை சுருக்கமாக பார்க்கலாம்.
ஆப்ரிக்க கண்டத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள எகிப்து, 10 லட்சம் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நாடு, வடக்கே மத்திய தரைக்கடல், கிழக்கே செங்கடல் மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்டது. எகிப்தின் உயிர்நாடியாக நைல் ஆறு திகழ்கிறது. நைல் ஆறு பாயும் இரு கரைகளில் சில கி.மீ தூரம் வரை செழிப்பாகவும் மீதி பகுதிகள் அனைத்தும் பாலைவனமாக உள்ளது. இந்நாட்டின் பண்டைய வரலாறு 6000 வருடங்களுக்கு முன் ஆரம்பமாகிறது. 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசர்களால் ஆட்சி செலுத்தப்பட்டு பண்டைய நாகரிக வளர்ச்சி பெற ஆரம்பித்தது. கி.மு.3150 ஆண்டு முதல் அரச பரம்பரை மன்னர் நார்மர், எகிப்தின் கீழ் மற்றும் மேல் பகுதிகளை இணைத்து ஒன்றுபடுத்தி ஆட்சி செலுத்தினார். இதிலிருந்து தொடங்கி பல எகிப்திய அரச வம்சங்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். இதன் நீண்ட கால பகுதியில் பண்டைய எகிப்தின் சமயம், எகிப்தியக் கோவில்கள், எகிப்திய மொழி படவெழுத்துகள் (Hieroglyphs), கலைகள் போன்றவை தனித்துவமான எகிப்தியப் பண்பாடாகவே செழுமைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது. பல அரச வம்சங்கள் தங்களை நிலை நிறுத்தி செழுமையான பண்பாட்டை வளர்த்து பல வரலாற்று சின்னங்கள், கோயில்கள், பிரமிடுகளை அடையாளங்களாக விட்டுச் சென்றுள்ளனர்.
எகிப்திய அரச வம்சங்களுக்குப் பிறகு கி.மு.332 அதாவது 2500 ஆண்டுக்கு முன்னர் கிரேக்க அரசர்களான பேரரசர் அலக்ஸாண்டர் (Alexander the Great), தாலமிகள் (Ptolomey) மற்றும் கிளியோபாட்டரா ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர்.
இதன் பிறகு கி.பி.30இல் கிருஸ்துவ வம்சமான ரோமானிய அரசர்கள் அகஸ்டஸ், கிளாடியஸ், டிராஜன் போன்றவர்கள் எகிப்தை ஆட்சி செய்து கிருஸ்துவத்தை பரப்பினர்.
அடுத்து அரபு முசுலிம்களின் ஆட்சி கி.பி.641 ஆண்டு ஆரம்பமானது இதில் ஒட்டமான் போன்றவர்களுடன் தற்போது வரை முசுலிம் நாடாக எகிப்து திகழ்கிறது. இந்நாட்டின் மொழி அரபு.
இனி எங்களின் இனிய பயண நினைவுகளில் களிப்போம் வாருங்கள்
எகிப்திய பயணம் முதல் நாளாக 21-09-2024 அன்று சென்னை விமான நிலையத்தில் காலை 5.30 மணியளவில் 30 பேரும் ஒன்று சேர்ந்தவுடன் பயண சீட்டு, அயல்நாட்டு நுழைவுச் சான்று மற்றும் ஒரு சர்வதேச மின் பல பகுதி ஒருங்கிணைப்பு பொறி (international adapter) ஆகியவற்றுடன் ஒரு பையில் கொடுக்கப்பட்டது. அனைவரும் விமான நிலைய பரிசோதனை, குடியேற்ற பரிசோதனை ஆகியவை முடிந்து ஒமன் விமானத்தின் மூலம் மஸ்கட் சென்று பின் மஸ்கட்டிலிருந்து கையிரோ மாலை 7.00 மணிக்கு சென்றடைந்தோம். எகிப்து நாட்டு வழிகாட்டி சமரா எங்களை அழைத்துக் கொண்டு மகாராஜா என்ற வட இந்திய உணவகத்திற்கு சென்றார். இரவு உணவு அருந்திவிட்டு ஜாஸ் தங்கும் விடுதிற்கு அழைத்துச் சென்றனர். இரவு தூங்கிய பின் நாளை காலை முதல் வரலாற்று சிறப்பு இடங்களை பார்வையிட உள்ளோம் .
22-09-2024
1. இரண்டாம் நாள் காலை ஜாஸ் தங்கும் விடுதியில் உணவருந்திவிட்டு முதல் இடமாக செக்கிரா (Seqqura) என்ற ஊரில் உள்ள படிகட்டு பிரமிடு (Step Pyramid) பார்க்க சென்றோம். இப்பிரமிடுகளை ஜோசர் (Djsor) என்ற அரசன் கி.மு.2668-2649 ஆண்டு ஆட்சி செய்யும் போது கட்டி பாடம் செய்த அவ்வரசனின் சவப்பெட்டியை வைக்கப்பட்டது. பிரமிடுக்கு முன் ஒரு நீண்ட மண்டபமும் அதன் அருகில் ஷேசெட் இடுட் (Seshsesht Idut) என்ற அரசரின் கல்லைறயும் உள்ளது. இந்த கல்லறையில் செதுக்கு வண்ண சிற்பங்கள் மட்டுமே காணப்படுகிறது. இதன் உயரம் 203 அடி. கிசா என்ற உயரமான நேர்த்தியான, கூர்முனை பிரமிடுகளை கட்டுவதற்கு முன் இந்த படிகட்டு பிரமிடு கட்டப்பட்டதாகும்.






2. முதல் நாள் இரண்டாவது இடமாக கிசா பிரமிடு (Giza pyramid) என்ற உலகின் 7 அதிசியங்களின் ஒன்றான மிக உயரமான பெரிய பிரமிடை பார்த்தோம். அந்த இடத்தை மிகப் பெரும் கியோப்ஸ் பிரமிட் (The Great Pyramid of Cheops) என அழைக்கப்படுகிறது. 3800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இரண்டு பிரமிடுகள் அருகிலேயே உள்ளன. கூஃபு (Khufu) பிரமிடு மட்டும் மிக உயரமானது இது ஆரம்பத்தில் 146 மீட்டர் (481 அடி) உயரமாக இருந்து இப்போது 137 மீட்டர் (449 அடி) உயரமாக உள்ளது. இதன் கீழ் பரப்பு ஒவ்வொரு பகுதியிலும் 230 மீட்டர் (755 அடி) நீளம் கொண்டது. கிட்டத்தட்ட 20,30,000 கண கற்களைக் கொண்டு அருகில் உள்ள கற்சுரங்கம் அல்லது மலையிலிருந்து (கையிரோவிலிருந்து 895 கி.மீ தூரத்தில் உள்ள ஆஸ்வான் மலையிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும் ஒரு தகவல்) கொண்டு வந்து கட்டியுள்ளனர்.
இந்த பிரமிடுக்குள் மூன்று உள் அறைகள் உள்ளன. ஒரு அறையில் அரசர் கடினப்பாறை சவப்பெட்டி உள்ளது. இந்த அறைக்குள் செல்ல முறையான வழி இருந்தாலும் அது கடினமானது, அதனால் அக்காலத்திலேயே கொள்ளையர்கள் வேறு வழியாக கற்களை தோண்டி சென்று அரசர் சவப் பெட்டியில் வைத்த அனைத்தையும் திருடிவிட்டனர். இப்போது வெறும் அறையும் கற்பெட்டி மட்டுமே உள்ளது. பிரமிடு சென்று இப்போது சுற்றலா பயணிகள் பார்ப்பதற்கு சரி செய்து உள்ளனர். இதற்கென்று தனி நுழைவுச் சீட்டு வாங்கிச் சென்று பாரக்க முடியும்.
இதன் அருகிலேயே ஸ்பின்க்ஸ் (Spinx) என்ற சிங்க உடல்
மனித தலைக் கொண்ட சிலையை போகும் வழியில் சாலையில் இருந்து பார்த்தோம்.
3. அடுத்த இடமாக வாசனை திரவிய தயாரிப்பு கூடத்திற்கு சென்றோம். (Pretty Queen castle) அங்கு வாசனை திரவியங்களின் வகைகளையும் அதன் பயன்பாடுகளையும், மருத்துவ குணங்கள் குறித்தும் எடுத்து கூறியபின் சிலர் அவர்களுக்கு தேவைப்பட செறிவுட்டப்பட்ட (concentrated perfumes, flower essence, aromatherapy oil extract and oil) நறுமண சிகிச்சையளிக்கும் திரவம் மற்றும் இதர திரவியங்களை வாங்கினர்.
4. பப்பையரஸ் தொழிற்கூடத்திற்கு (Papyrus Institute) சென்றோம். நைல் ஆற்றுக் கரையில் வளரும் ஒரு நாணல் புல் வகையிலிருந்து தண்டை எடுத்து அதை வெட்டி நீரில் ஊற வைத்து பதப்படுத்தி தாள் செய்து அதில் வண்ண ஓவியங்கள் வரைந்து இந்த தொழிற் கூடத்தில் விற்கப்படுகின்றன. இந்த தாள் அக்காலத்தில் 5000 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும் என தெரிவித்தனர். இந்த பப்பையரஸ், ஐரோகிலிப்ஸ் (Hieroglyphs) என்ற பழங்கால எகிப்திய பட எழுத்துக் கொண்ட நீண்ட தாள் ஆவணங்கள் எகிப்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் பின் இரவு கையிரோ விமான நிலயத்திலிருந்து விமானத்தில் 700 கி.மீ தூரத்தில் பயணம் செய்து ஆஸ்வான் நகருக்கு சென்றோம்.
23-09-2024
5. மூன்றாவது நாளாக ஆஸ்வானிலிருந்து நைல் ஆற்றின் குறுக்கே உயரமான அணை (High Dam) சென்று பார்த்தோம் இந்த அணை வெள்ள தடுப்பு, மின்சாரம் மற்றும் வேளாண்மைக்கு பயிர் செய்யவதற்காக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது
6. அடுத்த இடம், நைல் ஆற்றின் நடுவே மறு கட்டுமானம் செய்யப்பட்ட பிலே கோயில் (Philae temple) படகில் சென்று பார்வையிட்டோம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பெண் தெய்வமான ஐசிஸிற்கும் (Isis) தன் கணவர் ஓசாரிஸ் (Osaris) மற்றும் மகன் ஹோரஸுக்கும் (Horus) கட்டபட்டதாகும். வரலாற்று ரீதியாக எகிப்திய பண்டைய கோயிலில்களில் கடைசி கோயிலாகும். கிருஸ்துவ ஆக்ரமிப்பான ரோம பேரரசின் ஆட்சியில் இதில் உள்ள சிலைகள் சிதைக்கப்பட்டு இக்கோயிலின் சுவற்றில் கிருஸ்துவ சிலுவை பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் 14 பிரமாண்ட கற்தூண்கள் உள்ளன. தூண்களின் தளம் தாங்கும் மேல் பகுதியில் பல வகையான பூக்களின் வடிவங்கள் கொண்டு அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: எகிப்தில் கோயில் என்பது பண்டைய காலத்தில் அரசர்கள் தான் கடவுள் மற்றும் தெய்வமாக வழிபட கருவறையிலும் கோயிலின் செதுக்குச் சிற்பங்களிலும், ஒவியங்களிலும், ஐரோகிலிப்ஸ் என்ற படவெழுத்து (Heiroglyphics) எழுத்துகளிலும் குறிக்கப்பட்டுள்ளன.
7. பிலே கோயிலை பார்த்த பின் நைல் ஆற்றில் லா ஃபியன் (La Fayan) என்ற கப்பல் பயணத்திற்காக அனைவரும் அந்த கப்பலுக்கு சென்று பிற்பகல் பன்னாட்டு உணவு அருந்தினோம். சிறிது ஒய்விற்கு மாலை 4.30 மணியளவில் பிறகு கப்பலுக்கு அருகில் உள்ள நைல் ஆற்று பாய்மரப் படகில் அனைவரும் உலா (Felucca trip) அழைத்து செல்லப்பட்டோம். நைல் ஆற்றின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஒரு குன்றுப் பகுதியில் தன் உடல் நலக் குறைவை சரி செய்ய சிகிச்சை பெற இந்தியாவிலிருந்து வந்த ஆகா கான் இங்கு வந்து சென்றதாக தகவல் சொன்னார் வழிகாட்டி முகமது சமீர். பின் கப்பலுக்குச் சென்று தங்கினோம்.
24-09-2024
8. நான்காவது நாளாக காலை 4.30 மணிக்கே கப்பலிலிருந்து புறப்பட்டு பேருந்தில் ஆஸ்வானிலிருந்து 285 கி.மீ தூரம் உள்ள அபு சிம்பல் (Abu Simbel) என்ற இடத்திறல் உள்ள கோயிலை பார்க்க பாலைவன சாலை வழியாக 4 மணி நேரம் பயணம் செய்தோம். இக்கோயில் ராம்சேஸ்-2 என்ற மன்னர் கி.மு.1255 ஆண்டு கட்டி திறக்கப்பட்டதாக தெரிகிறது. இவர் நீண்ட காலமாக (66 ஆண்டுகள்) ஆட்சி புரிந்ததாகவும், எகிப்திய அரசர்களின் புகழ் பெற்றவர் இவர் எனவும் தெரிகிறது. இவர் காலத்தில் கட்டபட்ட இந்த கோயில் நைல் ஆற்றின் மீது உயர்ந்த அணை கட்டிய போது கோயில் முழ்கியதால் அதை ஆழ்ந்து எடுத்து அருகில் இருந்த உயரமான நிலப்பகுதியில் மறு கட்டுமானம் 1964-67 ஆண்டு செய்யப்பட்டுள்ளது. மிகப் பெரிய 70 அடி உயரம் கொண்ட நான்கு ராம்சேஸ்-2 உருவச் சிலைகள் உட்கார்ந்த நிலையில் கோயில் வாசலின் இருபுறமும் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே இருபுறமும் 4 ராம்சேஸின் நின்ற உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச் சுவரில் அவரின் படையெடுப்பு, வெற்றி பெற்றது அரசருக்கு பட்டம் சூட்டியது, காணிக்கை செலுத்தியது போன்ற சிற்ப தொகுதிகள் உள்ளன. கருவறையில் ராம்சேஸின் சிற்பம் உள்ளது. இந்தக் கோயில் மலைச்சரிவில் உள்ளது போல் காட்சியளிக்கிறது. இதன் அருகிலேயே ராம்சேஸின் மனைவி நெஃப்டாரரிக்கு (Nefartari) ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் முகப்பில் வாசலின் இருபுறமும் மூன்று சிலைகள் என மொத்தம் ஆறு சிலைகள் ராம்சேஸும், நெஃப்டாரரியும் உள்ளன. கோயிலின் உள்ளே ராம்சேஸ் கோயில் போன்றே உள் சுற்றச்சுவரில் சிற்ப தொகுதிகள் காணப்படுகின்றன.










9. அபு சிம்பல் பார்த்த பிறகு கப்பலுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு திரும்பியவுடன் கப்பல் ஆற்றில் பயணித்தது. நாங்கள் உணவு அருந்தி ஒய்வுக்குப் பின் மாலை 5 மணிக்கு கோம் ஓம்போ (Kom Ombo) கோயிலுக்கு சென்று பார்வையிட்டோம். தாலமி ஆட்சி காலத்தில் கி.பி.3 ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளளது. இது சோபக் (Sobek - முதலை) மற்றும் ஹோரஸ் (Horus - ராஜாளி கழுகு) ஆகிய இரண்டு கடவுளுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய முதலை கல்லறையும் இங்கு உள்ளது. இங்கு நைலோமீட்டர் என்ற நைல் ஆற்றின் நீர் உயரத்தை அளக்கும் இடமும் உள்ளது. இக்கோயிலின் கல்வெட்டுகளில் திருவிழாவிற்கான நாள்காட்டியும் முதலைகளை வெட்டி பாடம் செய்யும் அறுவை சிகிச்சை செய்யும் கருவிகளான கத்திகள் போன்றவை கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வளாகத்தில் முதலை அருங்காட்சியகத்தில் அதை எவ்வாறு வரலாற்று ரீதியாக பாதுகாத்து வழிபட்டு வந்துள்ளனர் என விளக்கப்பட்டுள்ளது. முதலைகளை பாடம் செய்தும் வைத்துள்ளனர்.




கோம் ஒம்போ கோயிலை பார்த்து முடித்ததும் இரவு உணவுக் கூடத்தில் எங்கள் குழு துடிப்பான, உற்சாக இளைஞர் சந்துருவிற்கு பிறந்த நாள் என்பதால் கப்பலில் கேக் வெட்ட மேள தாளத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். பின்னர் கெலபியா என்ற நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
25-09-2024
10. காலை 5.30 மணிக்கு கப்பலில் இருந்து புறப்பட்டு எட்ஃபு (Edfu) என்ற கோயிலை பார்க்க சென்றோம். தாலமி வம்ச ஆட்சியில் ஹோரஸ் (இராஜாளி கழுகு) கடவுளுக்காக கி.மு 237 முதல் 57 ஆண்டுகளில் கட்டப்பட்டது. எகிப்தில் உள்ள பழங்கால கோயில்களில் 90% நன்கு பாதுகாக்கப்பட்ட வண்ண ஒவியங்கள் மற்றும் கல்வெட்டு, சிலைகளுடன் இருக்கின்றன. பைலான்(Pylon) என்ற முன்பக்க சரிவான கோட்டைச் சுவர் (நம் ஊரில் உள்ள கோயில் வெளி கோட்டைச் சுவர் போன்ற அமைப்பு) முன் பக்கம் ஹோரஸ் (இராஜாளி கழுகு) கற்பாறை சிற்பம் அழகுற நின்று வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தவுடன் அனைவருக்கும் பிராம்மாண்டமான உயரமான தூண்களையும், கோயிலை சுற்றியுள்ள உள் அறைகளில் உள் செதுக்கிய சிற்பங்களும், தூண்களின் மேல் உள்ள பல்வேறு பூ வடிவங்களும் பார்க்க பார்க்க வியப்பாக இருந்தது. கோயிலின் உள் பகுதியின் முதல் திறந்த வெளியின் மூன்று திசைகளின் சுற்றுகளில் 32 தூண்கள் உள்ளன. கோயிலின் உள்ளே இரண்டு மண்டபங்களில் 12 தூண்கள் உள்ளன. கோயிலின் கருவறையை சுற்றி 10 உள் அறைகளும் உள்ளன. இக்கோயிலின் செதுக்கு படவெழுத்துகளில் (Heiroglyphics) 150 வகையான வாசனை திரவியங்கள் செய்வதற்கான விளக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதை பிரெஞ்சுகாரர்கள் நகல் எடுத்துக் கொண்டு அவர்கள் வாசனை திரவியங்களை தயாரித்து கொண்டு புகழ் பெற்றனர் என வழிகாட்டி கூறினார்.






11. எட்ஃபு கோயிலை பார்த்த பின் கப்பலுக்கு வந்தோம். கப்பல் பயணம் தொடர்ந்தது. நைல் ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் (Lock gate) என்ற அமைப்பின் வழியாக பயணம் தொடர்ந்தது. புதிய தடுப்பணை வழியே செல்லும் போது ஆற்றின் நீர் உயரமானதாக இருக்கும், எதிர் பக்கம் தாழ்ந்தும் இருந்ததால் இரும்பு கதவு வழியாக இரண்டு ஆற்றின் நீரின் நிலைகளும் சமமாக்கப்பட்டு கதவு திறந்து பின் கப்பல் சென்றது. இது பனாமா, சூயஸ் காலவாய் வழியாக செல்வது போல் இருந்தது.
12. மாலை 4.30 மணியளவில் கப்பல் பயணம் லக்சர் (Luxor) நகரின் கரையில் சென்று நின்றது. அனைவரும் கரை அருகிலேயே இருந்த லக்சர் கோயிலை பார்க்கச் சென்றோம். இந்தக் கோயில் அமுன் (Amun) என்ற கடவுளுக்கும் அமுன் மனைவி மட் (Mut) மற்றும் அவர் மகன் கோன்சு (Khonsu) கி.மு.1390 ஆண்டு ஆகியோருக்கு அர்பணிக்கப்பட்டது. கோயின் முன்புற பைலான் முகப்பு சாய்வு உயரமான சுவரில் ராம்சேஸ்-2 அரசனின் படையெடுப்பில் வென்ற காட்சிகள் உள்ளன. முகப்பு சுவரின் இருபக்கங்களிலும் 75 அடி உயர ஒபிலிக்ஸ் (Obelisk) என்ற வெற்றித் தூண் (ஜெயஸ்தம்பம்) இருந்துள்ளன, அதில் ஒன்று பிரெஞ்சியர் 1833 ஆண்டு வெட்டி எடுத்துச் சென்று பாரிஸ் நகரில் வைத்துள்ளனர். கர்நாக் கோயிலின் ஒரு பகுதியாக லக்ஸ்ர் கோயில் உள்ளது. துட்டகாமன், ராம்சேஸ்-2, துத்மோசிஸ்-3, அமன்ஹோடெட்-3 ஆகியோர் விரிவாக்கம் செய்து உள் கோயில்களை கட்டியுள்ளனர். கோயிலின் உள்ளே பல உயரமான தூண்கள் 70 அடி உயரம், 33 அடி சுற்றளவு கொண்டு 74 தூண்கள் உள்ளன. ஹாட்செட்புட் (Hatsheput) காலத்தில் (கி.மு.1498) 3 கி.மீ தூரத்திற்கு உள்ள கர்நாக் கோயில் வரை இரு புறமும் ஸ்பின்க்ஸ் ( சிங்க உடல் மனிதத் தலை) சிலை வரிசையாக மேடை மேல் வைத்து அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக அக்காலத்தில் விழா நடைபெறும் போது ஊர்வலம் சென்றதாக தெரிகிறது. இக்கோயின் இடதுபுற பின் பக்கத்தில் தொல்லியல் துறையால் 5000 ஆண்டு கால பல அரச வம்சங்களின் (பண்டைய எகிப்து வம்சம், கிரேக்கம், ரோமனியர்) கல்வெட்டு, பண்டைய எழுத்து, கற்சிலைகளின் அமைப்பு மாதிரிகள் திறந்தவெளியில் வரிசையாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் வளாகத்தில் முதலில் ஒரு கிருஸ்துவ தேவலாயமும் அந்த தேவலாயத்தின் மீதே பின்னர் முசுலிம் ஆட்சியில் மசுதியாகவும் மறு கட்டமைப்பு செய்து இயங்கி கொண்டு வருகிறது.





லக்சர் கோயில் பார்த்த பின்பு இரவு கப்பலில் பெல்லி நடனம் (Belly dance) என்ற பழங்கால நடனமும் வண்ண உடைகளும் அங்கார விளக்குகளும் உடலில் அணிந்து கொண்டு பெரிய வட்டமான நெகிழ்வான தட்டை கையில் சுழற்றிக் கொண்டு ஒரு நடன கலைஞரும் சுழன்று ஆடி மகிழ்வித்தனர். இதை பார்த்த பின்
13. இரவு 7.30 மணிக்கு கர்நாக் கோயிலில் (Karnak temple) ஒளி, ஒலி காட்சி பார்த்து வந்தோம் (Light and sound show).
26-09-2024
14. ஆறாம் நாள் காலை 5.00 மணிக்கு கப்பலில் இருந்து 24 பேர் மட்டும் நைல் ஆற்றின் கிழக்கு கரையிலிருந்து மேற்கு கரைக்கு படகில் சென்று அங்கிருந்து வெப்ப காற்று பலூனில் (Hot Air Balloon) பறந்து செல்லும் மைதானத்திற்கு சென்றோம். காலை விடியலுக்கு முன்னர் எங்களை அனைவரையும் பலூனில் கட்டப்பட்ட ஒரு பெரிய சதுரமான கூடையில் மேல் புறம் திறந்த பெட்டி போன்ற அமைப்பில், நடுவில் வெப்ப பலூனை இயக்கும் விமானியும் (Pilot), அவரின் இருபுறத்தின் பெட்டியின் நான்கு பிரிவில் 12 பேர் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர் பலூன் பறக்க ஆரம்பித்தது. அந்த மைதானம் சுற்றிலும் 30 பலூன்களில் சுற்றுலா பயணிகள் பறந்தனர். மேலே வானில் 44 நிமிடம் பறந்தபடி சுற்றியுள்ள நைல் ஆறு, லக்சர் நகரம், அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of Kings), லக்சர் கோயில் (Luxor temple), கர்நாக் கோயில் (Karmak temple) ஆகிய இடங்கள் மேலிருந்து பார்த்தோம். மேலும் கிழக்கு திசையில் விடியற் காலை கதிரவன் எழும் காட்சியும் பார்ப்பதற்கு அழகுற இருந்தது. கிழே பலூன் இறக்கப்பட்டு அருமையான நினைவுகளோடு அடுத்த இடமான அரசர்களின் பள்ளத்தாக்கிற்கு சென்றோம்.








15. அரசர்களின் பள்ளத்தாக்கு (Valley of Kings). நைல் ஆற்றின் மேற்கு பக்கம் உள்ள இந்த பிரமிடு போன்ற மலை பகுதியில் பாடம் செய்த அரசர்களின் உடல்களை மலையின் பாறைகளை குடைந்து குகைக்குள் அறைகள் செய்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். கி.மு.1580 முதல் 1085 ஆண்டு வரை துத்மோசிஸ் -1 (Tuthmosis-I) அரசர் முதலாக ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 64 கல்லறைகள் இருந்ததாகவும், தற்போது நாங்கள் சென்று பார்த்து போது 31 குடைவரை கல்லறைகள் பட்டியலிட்டு வைத்திருந்தாலும், பொதுவான கட்டண சீட்டில் 3 குடைவரை கல்லறைகளை மட்டுமே பார்க்க முடியும். மேலும் துட்டகாமன்(Tutankhamun), சேட்டி (Sety-I) ஆகியோரின் கல்லறைகளை பார்க்க தனி கட்டண நுழைவுச் சீட்டு வாங்கி சென்று பார்க்கும்படி வரையறுத்துள்ளனர். 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பிரமிடுகளில் பாடம் செய்து வைக்கப்பட்ட மம்மிகளும், பல அரிய பொருட்களும் அக்காலத்திலேயே திருடப்பட்டு அழிக்கப்பட்டதால் துத்மோசிஸ் -1 காலத்திலிருந்து இந்த மலை பள்ளத்தாக்கில் குடைந்து உடல்களை வைத்துள்ளனர்.
ஒவ்வொரு குடைவரை கல்லறைகளும் 100 முதல் 250 மீட்டர் கீழே இறங்கி சென்று நிலவறைகள் குடைந்துள்ளனர். கிழே செல்லும் வழியின் வலது. இடது மற்றும் மேலே அந்தந்த அரசர்களின் வெற்றி பிரதாபங்கள், படையெடுப்பு செய்தவை, காணிக்கை செலுத்தியது, வாழ்க்கை மற்றும் இன்ன பிற தகவல்களை சுவர் செதுக்கு வண்ண சிற்பங்களாகவும், பண்டைய படவெழுத்துகளாகவும் குவியும் விளக்குகளால் (focus lamp) காட்சி படுத்துப்பட்டுள்ளதால் தெளிவாகவும் நன்கு பார்வையிடும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளதை கண்டு உவகை அளித்தது. கீழே கடைசியாக ஒவ்வொரு அரசருக்கு தகுந்தவாறு அறைகள் அமைக்கப்பட்டு, பாடம் செய்து அடக்கம் செய்யப்பட்ட கல்பெட்டி அல்லது மரப்பெட்டி, அதை சுற்றி ஒவியங்கள், மற்றும் அரசர் பயன்படுத்திய விரும்பிய பொருட்கள், வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதில் துட்டகாமன் குடைவரை கல்லறையில் மட்டும் பாடம் செய்த உடல் பாதுகாப்பாக கண்ணாடி பேழையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் பார்த்த நான்கு குடைவரை கல்லறைகளும் மிக நேர்த்தியான வகையில் குடைந்து ஒவியங்கள், படவெழுத்துக்கள், செதுக்கு சிற்பங்கள் அழுகுற பாதுகாக்கப்பட்டு வருவதை கண்ணுறும் போது எங்களை வியப்பில் ஆழ்த்தியது.










16. அடுத்தது ஹாட்ஷெஸ்புட் (Hatshepsut) என்ற மூன்று அடுக்கு மாடி கோயிலுக்குச் சென்றோம். அனுபிஸ் (Anubis), ஹாதோர் (Hathor) கடவுளுக்கு ஹாட்ஷெஸ்புட் என்ற ஆண் வேடம் பூண்ட பெண் அரசி கி.மு.1498 முதல் 1483 ஆண்டில் கட்டியதாகும். மற்ற கோயில்களைவிட சற்று வித்தியாசமான வகையில் மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டு மலையின் சரிவான பகுதியில் கட்டப்பட்டுள்ளது. கிழ் அடுக்கின் இரண்டு உள்புறங்களிங் வண்ண ஒவியங்களான அமுன், அனுபிஸ், ஹாட்ஷெஸ்புட் மற்றும் காணிக்கை செலுத்தும் காட்சிகள் உள்ளன. இரண்டாவது அடுக்கின் இறுபறங்களிலும் கீழ் அடுக்கிலும் இதே போன்று ஓவியங்களும், படவெழுத்துகளும் உள்ளன. மேல் மூன்றாவது அடுக்கில் தூண்களில் ஹாட்ஷெஸ்புட் சிற்பமும் உள்ளது.








17. ஆறாம் நாளின் இறுதியாக அடுத்த ஒரு பிரம்மாண்டமான கர்நாக் கோயிலுக்குச் (Karnak temple) சென்றோம். இக்கோயில் அமுன்-ரா (Amun-Ra) என்ற காற்றுக் கடவுளுக்காக கட்டப்பட்டது. கிசா பிரமிடிற்கு அடுத்து எகிப்திய கோயில்களில் மிகப் பெரிய கோயில் இந்த கர்நாக் கோயிலாகும். ஏழு பைலான் (Pylon) என்ற உயரமான சாய்வு முகப்புச் சுவர் ஒவ்வொரு உள் கோயிலுக்குள் செல்லும் வழியிலும் உள்ளன. இக்கோயில் கி.மு.945 முதல் 715 ஆண்டில் கட்டப்பட்டத்தாக தெரிகிறது. முன் பக்கம் நுழையும் வலது, இடது இரு புறங்களிலும் 33 ஸ்பின்க்ஸ்கள் மேடையின் மீது வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்பின்க்ஸின் கால்களுக்கு இடையில் ராம்சேஸ்-2 சிலை உள்ளது. இந்த ஸ்பின்க்ஸ் சிலை வரிசை 2.5 கி.மி தூரம் உள்ள லக்சர் கோயில் வரை இருந்ததாக தெரிகிறது. கர்நாக் கோயிலின் உள்ளே மூன்று உள் மண்டபங்களும் உள்ளன. அவைகளின் கூரை இடிந்து திறந்தவெளியாக காட்சியளிக்கிறது.
முதல் உள் மண்டபத்தின் நடுவே வலது, இடது புறத்தில் 4 பெரிய தூண்கள் இருந்துள்ளது அவற்றில் ஒன்று மட்டும் மிக உயர்ந்து (70 அடி) நிற்கிறது. மீதி தூண்கள் பாதி அல்லது கால் பகுதி அறுத்து எடுத்த நிலையில் உள்ளது. இடது புறம் ராம்சேஸ்-3 கட்டிய அமுன் கோயிலும் முன் பக்கம் இரண்டு ராம்சேஸ்-3 சிலை நின்ற நிலையில் உள்ளன. இதற்கு அடுத்து உள்ள பெரிய கூடத்தில் வட்டமான மணற்பாறை தூண்கள் ஒன்றின் மேல் ஒன்று என முறையாக நேர்த்தியாக அடுக்ககாக 16 வரிசையில் 134 மிகப்பெரும் தூண்கள் வலது, இடது என இரு புறங்களிலும் கட்டப்பட்டு உள்ளதை அண்ணாந்து பார்க்கும் போது நம்மை மலைக்க வைக்கிறது. இந்தத் தூண்களில் செதுக்கு சிற்பங்களும், படவெழுத்துகளும் உள்ளன. செட்டி-1 அரசன் லிபயன்களுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற காட்சிகள், காணிக்கை செலுத்துவது, ராம்சேஸ்-2 அரசனின் வெற்றி சிற்பங்கள், அரச பட்டம் ஏற்பது போன்றவையும் உள்ளன. இவைகள் பல வண்ணங்களில் அழகுற இன்றும் காட்சியளிக்கிறது.
அடுத்த மண்டபம் பைலான் நுழைவாயில் உள்ளே 23 மீட்டர் உயரம் கொண்ட நான்கு ஒபிலிக்ஸ் (obelisk) (வெற்றித் தூண்கள்) கட்டும் போது இருந்துள்ளன, ஆனால் இப்போது இரண்டு மட்டுமே உள்ளன. அடுத்த கூடத்திற்கு நுழையும் முன் பைலான் என்ற முகுப்பு சாய்வு உயரமான சுவரை கடந்து சென்றால் டுத்மோசிஸ் (Tuthmosis-I) சிலைகள் உள்ளன. இடது மற்றும் வலது புறங்களில் அறைகளின் உள்ளே வரிசையாக 16 நூண்களும் கூரைகளின்றி காணப்படுகின்றன. இக்கோயிலின் வலது புறம் ஒரு நீண்ட கூடத்தின் நடுவே ஒரு உயரம் குறைந்த ஒபிலிக்ஸும் அதன் சற்று தூரத்தில் மேடையின் மீது அமைக்கப்பட்ட வண்டின் கற்சிலையும் உள்ளது. இந்த திறந்த கூடத்தின் மேற்புறம் சென்றால் அமன்ஹோடப்-3 (Amenhotep-III) உருவாக்கிய குளம் நிர் நிறைந்து இப்போதும் உள்ளது (சுமார் 3600 ஆண்டுகள்) இக்கோயிலின் அனைத்து தூண்கள் சுவர்களிலும் படவெழுத்துக்களில் விளக்கங்கள், பெயர்கள் மற்றும் பல தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன என வழிகாட்டி விளக்கிக் கூறினார்.
இதன் பின் மாலை ல்க்சர் நகரிலிருந்து விமானம் மூலம் கையிரோ சென்று விடுதியில் இரவு தங்கினோம்.
27-09-2024
18. காலை 7.30 கையிரோவிலிருந்து கிளம்பி எகிப்தின் வடதிசையில் அமைந்துள்ள 219 கி.மீ தூரமுள்ள மத்திய தரைக்கடற்கரை பழம் பெரும் நகரமான அலக்ஸாண்டிரியாவிற்கு (Alexandria) பேருந்தில் 2.30 மணி நேர பயணம் செய்து சென்றோம். இப்பழம் பெரும் நகரம் மத்திய தரைக்கடலின் (Mediterranean sea) கரையில் அமைந்துள்ளது. முதலில் கேட்டகோம்ப் (Catacomb) என்ற பூமிக்கு
கீழே அமைந்த மூன்று அடுக்கு புதைவிட அறைகள் காணச் சென்றோம். கீழிறங்கி சுழன்று செல்லும் படிகட்டுகள் வழியே கிரேக்க காலத்தில் 2 முதல் 4
ஆம் நூற்றாண்டில் இயங்கிய புதைவிடம் ஆகும். தரையிலிருந்து இறந்தவர்களின் உடலை கீழே
இறக்கி முதல் கீழ் கூடத்தில் இறந்தவர்களை கிடத்தி சடங்குகள் செய்து பிணங்களை
புதைக்கும் நீள் அறைகளில் வைத்து கல் வைத்து மூடி விடுவார்கள். இரண்டு மற்றும்
மூன்றாம் கீழ் அடுக்குகளில் சில பணக்கார குடும்பங்கள் தங்களுக்கென புதைவிட அறைகள்
தோண்டச் செய்து புதைத்து வைத்துள்ளனர் எனவும், வேறோரு அறைகளில் வசதியற்றவர்கள் சிறு சிறு நீள்
அறைகளில் வைத்து ஏழு மாதங்களுக்குப் பின் வேறொருவரின் உடலை வைப்பதாகவும் வழிகாட்டி
தெரிவித்தார். இந்த நிலவறை புதைவடத்தில் இது வரை ஆய்வில் மனித எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஆனால் குதிரைகளின் எலும்புகள் கிடைத்ததை பாதுகாத்து வைத்துள்ளனர். அதை பார்த்தோம்.








19. அலக்ஸாண்டிரியாவில் அடுத்து பாம்ப்பே தூண் (Pompey's pillar) உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டோம் இது டயகிளிஷின் (Diocletian) என்ற ரோமானிய அரசரின் போர் வெற்றியின் புகழ் பரப்ப கி.பி 298 முதல் 302 ஆண்டில் எழுப்பபட்டது. 89 அடி உயரத்தில் ஒரே கல்லால் செதுக்கி தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இது ஆரம்பத்தில் 135 ஆடி இருந்தது என தெரிகிறது.
அலக்ஸாண்டிரியா பழம்பெறும் நகரம் பேரரசர் அலக்ஸாண்டரால் கி.மு.331 ஆண்டு உருவாக்கப்பட்டதால் அவரின் பெயரிலியே இந்நகரம் அழைக்கப்படுகிறது. இந்நகரம் நம் கொல்கத்தா நகரம் போல் காட்சியிளிக்கிறது, டிராம் என்ற சிறு நகர ரயில் வண்டி ஒடுகிறது. மேலும் மத்திய தரைக்கடலின் துறைமுக நகரமாகவும் விளங்குகிறது. இந்நகரத்தின் புகழ் பெற்ற உணவகமான மீன் அங்காடி (Fish Market) என்ற உணவகத்தில் பிற்பகல் உணவு அருந்தினோம்.
20. பிற்பகல் உணவிற்கு பின் மத்திய தரைக்கடல் கரையில் அமைந்த கொய்ட்பே கோட்டையை (Qait bay's fort) பார்த்தோம். இந்த கோட்டை கி.பி.1477 முதல் 1479 ஆண்டுகளில் தற்காப்புக்காக அல் அஹ்ரப் செய் அல் கொய்ட்பே (Al Ashraf sayf al-din) என்ற முசுலிம் அரசரால் கட்டப்பட்டது. இக்கோட்டை புனரமைப்பு செய்யப்பட்டு வருவதால் பார்வைக்கு தற்போது அனுமதி இல்லை. பின்னர் கடற்கரை சாலை வழியாக சென்று ஒரு பெரிய பழைய சித்தி மோர்சி அபு அல் மசுதியை (Sidi Morsi Abu-Al) பார்த்துவிட்டு அலக்ஸாண்டிரியாவின்
பழம்பெரும் நூலகம் இப்போது மறு கட்டமைப்பு செய்யப்பட்டு உள்ளதை வரும் வழியில் மட்டும் பார்த்து கையிரோவிற்ககு திரும்பினோம்.
28-09-2024
21. இறுதி நாளில் ஜாஸ் தங்கும் விடுதியிலிருந்து அனைவரும் காலி செய்துவிட்டு 9.00 மணியளவில் பழைய கையிரோ நகரில் உள்ள காப்டிக் கிருஸ்துவ தேவலாயத்திற்கு (Coptic church) பார்க்கச் சென்றோம். இத்தேவலாயம் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது. ஒரு பழைய கோட்டையின் அடிச்சுவடுகளும் இத்தேவலாயத்தின் முகப்பில் காணப்படுகிறது. இத்தேவலாயம் புனித குடும்பமான குழந்தை யேசு, ஜோசப் மற்றும் மேரி ஆகியோர் எகிப்திற்கு வந்து சென்றதாகவும், இத்தேவலாயத்தில் அவர்கள் மூன்று மாதம் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது. இத்தேவாலாயம் தொங்கும் ஆலயம் எனவும் சொல்லப்படுகிறது. பழைய தேவாலாய சுவடுகளும் இங்கு காணப்படுகிறது. புனித குடும்பம் வந்து தங்கி சென்றதற்கான அடையாளங்களாக அவர்கள் பயன்படுத்திய கிணறு, அறை மற்றும் பாறை தேவலாயத்தின் கீழே பாதுகாக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் புனிதர்களின் நினைவுச் சின்னங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.







22. கடைசியாக எகிப்தின் முக்கியமான பழைய கையிரோ அருங்காட்சியகத்திற்கு (Cairo Museum) சென்றோம். 123 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அருங்காட்சியிகம் 1897 ஆண்டு கட்ட ஆரம்பித்து 1901 ஆண்டு முடிக்கப்பட்டது. நுழைவுச்சீட்டு அனுமதியுடன் எங்கள் குழுவிற்கென வழிகாட்டி, அனைவருக்கும் செவிப் பொறியும் (ear phone) மற்றும் அவர் பேசுவதற்கென ஒரு குறுகிய தூரம் தகவல் அளிக்கும் கம்பியில்லா ஒலிவாங்கி வழிகாட்டும் அமைப்பின் (Wireless audio guide system - Whisper mini) மூலம் எங்களை அருங்காட்சியகத்தின் முக்கியமான காட்சிப் பொருட்களை விளக்கமாக கூறி அழைத்துச் சென்றார். சுமார் மூன்று மணி நேரம் பார்வையிட்டோம். முழுமையாக பார்ப்பதற்கு நேரம் போதவில்லை.
அருங்காட்சியகம் இரண்டு தளங்கள் கொண்டது, இதில் முதல் மாடியில் ஒரு பகுதி முழுவதும் துட்டகாமன் குடைவரை கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட 5000 பொருட்களின் முக்கியமானவையான தலைக் கீரிடம், அரச சின்னங்கள், அடையாளங்கள், மார்பு கவசம், வண்டு சின்னம் பொரித்த கை வளையல், நாகம் பொரித்த கழுத்துப் பட்டை, கணுக்கால் வளையம், ஒப்பனை பெட்டி, தங்க முகமூடி, உள் பெட்டியுடன் பேழை, இரண்டாவது பொன் சவப்பெட்டி, சிறிய சவப்பெட்டி, தங்க கத்தியும் உரையும், சிறிய வளையங்கள், நண்டு வடிவ வளையம், 23 மோதிரங்கள், கம்மல், காது அடைப்புகள், வளையங்கள், மாணிக்கம், சூதுபவளம் போன்ற விலையுர்ந்த கற்கள் கொண்ட பல பொருட்கள் போன்றவை மிக அழகாக உள்ளன இவை தனி அறையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன இப்பொருட்களை படம் எடுக்க அனுமதியில்லை. மொத்தம் ஐந்து பெட்டிக்குள் பெட்டியாக துட்டகாமனின் பாடம் செய்த உடல் வைக்கப்பட்டுள்ளது. நான்காவது உள் சவபெட்டி முழுவதும் திடமான தங்கத்தால் (115 கிலோ) செய்யப்பட்டுள்ளது துட்டகாமனின் குடைவரை கல்லறையை 1922 ஆண்டு கண்டுபிடித்த ஹோவர்ட் கார்ப்பர் (Howard Carper) மற்றும் அதன் வரலாற்றையும் மிக விரிவாக விளக்கி காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இதோடு மட்டமல்லாது வேறு மூன்று பாடம் செய்யப்பட்ட உடல்களும் சவபெட்டியுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளள.
எகிப்தில் பண்டைய நாகரிகத்தின் தொல்லியல் அகழாய்வு மற்றும் ஆய்வுகளில் கண்டெடுத்த 1800க்கும் மேற்பட்ட சிலைகள், சவப்பெட்டிகள், விலங்குகளின் பாடம் செய்த பொருட்கள், வளைதடி, வில், அம்பு, தீக்கோல், வேளாண்மை உழு கருவிகள், தலையணை (Head rest), ஒப்பனை பொருட்களான சீப்பு, வாசனை திரவியம் தயாரிக்கும் பொருட்கள், ஒப்பனை பெட்டிகள், பண்டைய அரசர்களின் பல்வேறு வகைகளின் கற்களில் செதுக்கப்பட்ட சிலைகள், மரச்சிலைகள் (5000 ஆண்டு பழைமையானது), பண்டைய படவெழுத்துகளின் கல்வெட்டு (Heiroglyphs), ஸ்பின்க்ஸ், பெப்பையர்ஸ் தாளில் எழுதப்பட்ட படவெழுத்து, ஜாடிகள், முகம் பார்க்கும் கைப்படிக் கொண்ட கண்ணாடிகள், தந்தம், மரம் மற்றும் எலும்பில் செய்யப்பட்ட தாளக் கருவிகள், கைப்பிடி கொண்டு தாள இசைக் கருவிகள், கிலுகிலுப்பை, புல்லாங்குழல், கம்பி இசைக் கருவிகள், வெட்டுக் கத்திகள், விளக்குகள், கட்டிட கட்டுமான அளவிடும் கருவிகள், நுகத்தடி, எடையளக்கும் கற்கள், வளறி, சீப்புகள், தட்டுகள், கை விசிறிகள், மெல்லிய வகை துணி (linen, muslin cloth), தோல் செருப்புகள், வெண்கல விவசாய கருவிகள், வெண்கல காசுகள், பூ வேலை செய்யப்பட்ட சவப்பெட்டிகள், சில்லு கத்திகள், சிறிய அளவிலான அரசர்களின் சிலைகள் என எண்ணற்ற பழங்கால எகிப்திய நாகரிக பொருட்களை காணும் போது நம் தமிழக நாகரிகத்தோடு பல பொருட்கள் ஒப்பிட்டு மகிழ்ச்சியடைய வைத்தது.

















தற்போது எகிப்தில் இந்த பழைய அருங்காட்சியகத்தோடு, எகிப்து தேசிய நாகரிக அருங்காட்சியகமும் உள்ளது, இதை நாங்கள் பார்க்கவில்லை. இப்போது ஒரு புது அருங்காட்சியகமும் கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியத்தின் மிக வளமான, செல்வ செழிப்பாக இருந்த, மிகுதியான, வியப்பைத் தரும் கலைச் செல்வங்களை கண்டு களித்து தாயகம் திரும்ப மனம் திளைப்பில் ஆழ்ந்தது. பின்னர் மகாராஜா என்ற வட இந்திய உணவகத்தில் உணவருந்திவிட்டு மாலை 4 மணியளவில் கையிரோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு சென்று மீண்டும் ஒமன் விமானத்தில் மஸ்கட் வந்து பின் சென்னை 29-09-2024 காலை 7.20 மணிக்கு நீங்கா நினைவுகளுடன் நலமுடன் திரும்பி வந்தோம்.
𓅂𓅞𓇏𓎞
🙏🙏🙏