கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

திங்கள், 5 அக்டோபர், 2026

Royal Rajasthan Heritage tour

அற்புதமான இராஜஸ்தான் கோட்டை அருங்காட்சியக மரபு நடை

      எண்திசை வரலாற்று மரபு நடை நடத்திய Royal Rajasthan மரபு நடை கடந்த 26-09-2026 முதல் 01-10-2026 வரை ஆறு நாட்கள் நடைபெற்றது. 

     முதல் நாள் 26-09-2026 அன்று உதய்பூரில் 400 ஆண்டுகள் பழமையான ஜெகதீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். உதய்பூர் நகரமானது ஆரவல்லி மலைத்தொடரின் அமைந்துள்ள ஒரு நகரமாகும் மகாராண உதய்சிங் ஏற்படுத்தியதால் அவர் பெயரில் நகரம் உள்ளது. இந்நகரை ஏரிகளின் நகரம் என்றும் அழைக்கின்றனர்


பின்னர் மேவார் அரண்மனை மற்றும் அருங்காட்சியகம் பார்த்தோம். இந்த அரண்மனையை மகாராண உதய் சிங் 1559 ஆம் ஆண்டு கட்டினார். இந்த அரண்மனைக்குள் மோர் மகால், மானக் மகால், கிருஷ்ண விலாஸ், பாரி மகால்,  மோத்தி மகால், செனான மஹால், என அழகான வேலைப்பாடுகளுடன் உள்ளன. படை ஆயுதங்கள் வைக்கப்பட்ட அறையில் அம்பு, துப்பாக்கிகள், கை துப்பாக்கிகள், ஈட்டிகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மற்றொரு அறை முழுவதும் கண்ணாடி மற்றும் வண்ண கண்ணாடிகளால் பதியப்பட்டுள்ளன.


அரண்மனைக்குப் பின்புறம் பிச்சோலா என்ற ஏரி உள்ளது, ஏரியின் நடுவில் இரண்டு தீவுகளான ஜெக் நிவாஸ் என்ற தாஜ் சொகுசு விடுதியும் மற்றும் செக் மந்திர் என்ற இரு தீவுளும் உள்ளன. இவைகளைப் பார்த்த பின் இரவு பைரவ்கர் என்று சொகுசு விடுதியில் இரவு தங்கினோம்

     27-09-2026 இரண்டாம் நாள் உதய்ப்பூரிலிருந்து 115 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சித்தோர்கர் கோட்டைக்கு சென்றோம். 700 ஏக்கர் பரப்பு அளவில் 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளது.

     மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை பல அரசர்கள் இந்த கோட்டையை கட்டி உள்ளனர். குறிப்பாக பப்பாராவால் மகாராண சங்கா, மகாராணா கும்பா ஆகியோர் நிர்மாணித்துள்ளனர். கோட்டையினுள் 5000 மக்கள் வசிக்கின்றனர், முகலாய அரசர்களான அலாவுதீன் கில்ஜி, அக்பர் போன்றவர்கள் இக்கோட்டையை கைப்பற்ற அரசர்களுக்கு எதிராக போரிட்டு வென்றனர். இதில் குறிப்பாக அலாவுதீன் கில்ஜி ராணி பத்மினியை பார்க்க வந்த போது நடந்த நிகழ்வுகளும் அதன்பின் முகலாயர்களிடம் சரணடையாமல் இருப்பதற்காக உடன் கட்டை ஏறுவது(சதி) என்ற ஜோகர் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பேர் ராணியுடன் சிதையில் இறங்கியதாகவும், இதன் பிறகு மேலும் இரண்டு முறை பல்வேறு போர் நடவடிக்கைகளில் ஜோகர் நடந்ததாக கூறுகின்றனர்.


கோட்டையினுள் பல்வேறு கோயில்களும் முக்கிய இடங்களும் உள்ளன. இதில் குறிப்பாக விஜயஸ்தம்பம் என்ற மிகப்பெரிய 122 அடி உயர 9 நிலைகள் உள்ள கட்டிடம் மகாராண கும்பாவல் 1448 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மால்வா சுல்தான் முகமது கில்ஜியையும் குஜராத் குதுப்தீனையும் வென்றதற்காக வெற்றி தூண் என்ற கட்டிடத்தை சிற்பக்கலை வேலைப்பாடுகளுடன் கட்டி உள்ளார்.


கோட்டையின் அடுத்த பகுதியில் போஜ்ராஜை மணந்த மீராபாய் கட்டிய கிருஷ்ணர் கோயில் உள்ளது. இதன் அருகில் சமதீஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்றும்  உள்ளது.





இக்கோட்டையை பார்த்த பிறகு அடுத்த இடம் கும்பல்கர் செல்லும் வழியில் ஹல்த்திகாட்டி என்ற இடத்தில் பெரும் படையுடன் அக்பர் மற்றும் மான்சிங் இருவரும், குறைந்த அளவு படையுடன் மகாராண பிரதாப் சிங்கிற்கும் நடந்த போரில் சேத்தக் என்ற குதிரை வீரமாக போர்களத்தில் மகாராணா பிரதாப் சிங்கை காப்பாற்றியதற்காக நினைவிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.


      28-09-2026 மூன்றாம் நாள் கும்பல்கர்க் கோட்டைக்கு சென்றோம், ஆசியாவின் மிக நீண்ட கோட்டை சுவர் கொண்டது


1443-1458 ஆண்டுகளில் மகாராணா கும்பா என்ற அரசனால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோட்டையில் கும்பா மஹால் ஒன்பது கோட்டை நுழைவாயில்கள் இந்து, சமணக் கோயில்கள் என பல கட்டிங்களுடன் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 
அடுத்து ஜோத்பூர் செல்லும் வழியில் ரானக்பூரில் 1406 ஆம் ஆண்டு சமணத் தீர்த்தங்கரர் ஆதிநாதருக்காக மேவார் அரசர் கும்பராணாவின் முதலமைச்சராக இருந்த தாரணாஷா என்பவர்  இதை கட்ட நிதியளித்தார். இதை கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆனது என்றனர், முழுவதும் வெள்ளை சலவை கற்களால் கட்டப்பட்டுள்ளது இதன் நான்கு திசைகளிலும் மிக உயரமான மண்டபம் அதன் கூரையின் கீழே மிக அழகிய உன்னிப்பான, சிற்ப வேலைப்பாடுகள் பார்ப்பதற்கு வியப்பு ஊட்டுகின்றன.


இந்த கோயிலில் 1444 தூண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஒரே மாதிரி இல்லாமல் பல அரிய சிற்பங்கள் நுணுக்கமாக செதுக்கியுள்ளது காண்பதற்கு மிகவும் வியப்பாக உள்ளது. மேலும் இந்த கோயிலின் கருவறை ஆதி நாதரின் உருவம்உட்கார்ந்த நிலையில் நான்கு திசைகளிலும் சென்று பார்ப்பது போல் அமைத்துள்ளனர். இந்த கோயிலில் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு நுணுக்கமான அதிசியமான சிற்பங்களை காண முடிகிறது.
    29-09-2026 அன்று ஜோத்பூர் சென்று முதலில் உமைத்பவன் அரண்மனை மற்றும் அருங்காட்சியகத்தை காண சென்றோம். ராவ் ஜோதா என்ற அரசரால் 1459 ஆம் ஆண்டு இந்த நகரத்தை நிர்மாணித்துள்ளார. அவரின் பெயராலே ஜோத்பூர் என்று விளங்குகிறது. உமைத்பவன் அரண்மனை மார்வார் அரச பரம்பரையில்  மகாராஜா உமைத்சிங் காலத்தில் இந்த மாபெரும் அரண்மனை 1929 முதல் 1948 ஆண்டு வரை கட்டப்பட்டது. அரண்மனையின் ஒரு பகுதி 1978 ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டலுக்கும், ஒரு பகுதியில் அரச பரம்பரையினரும் மற்றொரு பகுதி அருங்காட்சியகமாகவும் உள்ளது. 
உமைத்சிங் விமானங்களையும் வைத்திருந்தார். விலையுர்ந்த கார்களையும், பல அதிசயமான கடிகாரம் அணிகலன்கள் பல்வேறு பொருட்களையும் அருங்காட்சியகத்தில் வைத்திருப்பதை பார்க்கலாம். இவரால் ஜோத்பூர் போலோ என்ற குதிரையின் மீது போலோ விளையாட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
அடுத்ததாக மேகரன்கர் கோட்டைக்கு சென்றோம் மிகவும் உயரமான ஒரு குன்றின் மீது உயர்ந்த சுவர்களின் வலுவான முறையில் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்கு மின்தூக்கியில் சென்று ஒவ்வொரு அறையிலும் வைக்கப்பட்டுள்ள மிக சிறிய அளவிலான ஓவியங்கள், ஆடை அணிகலன்கள், முழுவதும் கண்ணாடியலான அறை மற்றும் படைக்கலன்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு அடுத்து ஜோத்பூரில் இருந்து பாலைவன மாவட்டமான ஜெய்சல்மேர் நோக்கி பயணம் செய்தோம்  அங்கு Desert Tulip இரவு தங்கினோம். 
30-09-2026 அன்று காலையில் அரச பரம்பயினருக்காக அமைக்கப்பட்டுள்ள படாபக் என்ற வேலைப்பாடுகளுடன் அமைந்த கல்லறைக்கு சென்று பார்த்தோம்.
அடுத்ததாக ஜெய்சல்மேர் நகரத்தில் உள்ள பட்வா ஹவேலி என்ற மிக செல்வந்தர்களின் மாளிகையை பார்க்கச் சென்றோம்
 அடுத்ததாக ஜெய்சல்மேர் கோட்டைக்கு சென்றோம் 1156 ஆம் ஆண்டு ராஜபுத்த அரசர் ஜெய்சாலா என்பவரால் கட்டப்பட்டது மற்ற அரண்மனை அருங்காட்சியங்களில் உள்ளது போல் எங்கும் பல்வேறு பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர் 
பின்னர் பாலைவன விடுதிக்கு செல்லும் வழியில் குல்தாரா என்ற மக்கள் வசிக்காத கிராமத்திற்கு சென்று பார்த்தோம். இந்த கிராமத்தில் 1350 ஆம் ஆண்டு பாலிவால் பிராமணர்கள் 84 கிராமங்களில் வாழ்ந்து வந்தனர், என்ன காரணம் என்று தெரியவில்லை 18ஆம் நூற்றாண்டில் கிராம மக்கள் அனைவரும் ஒரு இரவில் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்ததாக தெரிவிக்கின்றனர். அம்மக்கள் வாழ்ந்த சிதைந்து போன வீடுகள் இன்றும் காட்சியளிக்கின்றன,  இதை பேய் கிராமம் என்றும் அழைக்கின்றனர். 

இதன் பின்னர் Desert Valley resort சென்று தங்கி மாலை ஜீப்பில் ஆறு பேர் கொண்ட குழுவாக பாலைவன மணல் மேடு பள்ளங்களிலும் ஒட்டகங்களின் மீதும் ஏறிய அமர்ந்து பயணித்தனர்.
இறுதியாக ஜெய்சல்மாரில் 01-10-2026 அன்று காலை ராஜஸ்தான் மரபுநடை பயணம் முடிந்து ஜோத்பூர் வந்து பின்னர் ஆகமதாபாத் வழியாக அவரவர் சொந்த ஊருக்கு சென்று சேர்ந்தோம்

2 கருத்துகள்:

Royal Rajasthan Heritage tour

அற்புதமான இராஜஸ்தான் கோட்டை அருங்காட்சியக மரபு நடை       எண்திசை வரலாற்று மரபு நடை நடத்திய Royal Rajasthan மரபு நடை கடந்த 26-09-2026 முதல் 0...