முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை அவர்களின் 18ஆம் நூற்றாண்டு சமூக நிகழ்வுகளும் நாட்குறிப்பு தகவல்களும்
முன்னுரை:
முத்து விஜய திருவேங்கடம்
பிள்ளை, புதுச்சேரியின் 18ஆம் நூற்றாண்டு நாட்குறிப்பு வேந்தர், பிரஞ்சு அரசின் துபாஷி
ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் தம்பி ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையின் மகனாவார். முத்து
விஜய திருவேங்கடம் பிள்ளையை ஆனந்தரங்கப்பிள்ளை அவர்கள் வளர்த்தார், மேலும் தன்னுடைய
மகன்களை காட்டிலும் மூத்தவராக இருந்ததால் தன் தந்தை ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளைக்குப்பிறகு
பிரஞ்சு அரசால் துபாஷியாகவும் நியமிக்கப்பட்டார்.
வெங்கடேசம் என்று அழைக்கப்பட்ட முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை கி.பி.1777 இல் பிறந்தார். பாரீசில் உள்ள ஆவணங்களில் வசதராய முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேய படைகள் பாண்டிச்சேரியை முற்றுகையிட்ட போது, பிரஞ்சு ஆளுநர் தெம்பிரான், அவர் தந்தை ரங்கப்ப திருவேங்கடத்திற்கு பிறகு தமிழ்த்தலைவராக 01-03-1791 அன்று நியமித்தார். ஆளுநருக்கு ஆதரவளித்து பாதுகாப்பாகவும் இருந்தார். 1801 ஆம் ஆண்டு இறந்தார்1 .
இந்நாட்குறிப்பின் கையெழுத்துப் படியின் நகல்கள் பிரான்சில் உள்ள தேசிய நூலகத்திலும், புதுச்சேரியில் உள்ள மத்திய ஆவண காப்பகத்திலும், புதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்திலும் உள்ளது. இவற்றை முனைவர் ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் 1999 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
மேற்காட்டப்பட்டுள்ள ஆவணங்களின் படி புதுச்சேரியில் அக்கால கட்டத்தில்
புதுச்சேரியில் நிலவிய சமூக நிகழ்வுகளும் அவற்றின் சூழல்களையும் இக்கட்டுரை விளக்க
முற்படுகிறது.
புதுச்சேரியில்
நாட்குறிப்புகள்:
புதுச்சேரியில்
ஐந்து நாட்குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனந்தரங்கப்பிள்ளைக்கு பிறகு அவரது குடும்பத்தினர்
(மகனும் பெயரனும்) துபாஷிகளாக இருந்து நாட்குறிப்புகள் எழுதியுள்ளனர். அவற்றின் விவரங்கள்
கீழே தரப்பட்டுள்ளன :
வரிசை எண் |
நாட்குறிப்பாளரின் பெயர்
மற்றும் வாழ்நாள் |
நாட்குறிப்பின் காலம் மற்றும்
வெளியிடப்பட்ட காலம் |
1 |
ஆனந்தரங்கப்பிள்ளை (30-03-1709 முதல் 12-01-1791 வரை) |
06-09-1736 முதல்
12-01-1761 வரை |
2 |
ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளை (15-02-1737 முதல் 07-02-1791 வரை) |
01-04-1761 முதல்
15-04-1781 வரை |
3 |
முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) |
11-08-1794 முதல்
15-01-1796 வரை |
4 |
இரண்டாம் வீரா நாயக்கர்
(1755 – 1827) |
10-05-1779 முதல்
17-07-1792 வரை |
5 |
குருவப்ப பிள்ளை |
தெரியவில்லை |
புதுச்சேரியில் மிகவும் புகழ் பெற்ற
மூத்த வணிகரோ, தமிழ்-பிரெஞ்சு தெரிந்த நன்கு விபரம் அறிந்த குறிப்பிட்ட இன, சாதித்
தலைவரை பிரஞ்சு அரசு நியமித்து துபாஷி என்றும், முதலியார் என்றும் குடுத்தியார்
(Courtier) என்றும் பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனியால் அழைக்கப்பட்டனர். மேலும் நியமிக்கப்பட்ட
மூத்த தமிழ் ஊழியரை மலபாரின் முதல்வர் (Chef de malabars) என்றும் பிரஞ்சு கிழக்கிந்திய
கம்பெனி பதவியளித்துள்ளது2.
துபாஷிகள்:
துபாஷி, துபாஷ் என்பது இரண்டு
மொழிகள் தெரிந்தவர் எனப் பொருள்படும். 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் நம் நாட்டில்
ஆரம்ப காலத்தில் வணிகம் செய்த போது இங்குள்ள மொழி தெரியாததால் உள்ளூர் மக்களுடன் பேச,
தொடர்பு கொள்ள இந்த துபாஷிகள் தேவைப்பட்டனர். இவர்கள் மொழி பெயர்ப்பாளர்களாகவும், முகவராகவும்
இடைத்தரகராகவும் மேற்பார்வையாளராகவும், மற்றும் ஐரோப்பியர்களுக்கு அலுவல் முறையாகவும்,
தனிப்பட்ட முறையிலும் உதவியாளராகவும், வர்த்தகம் மற்றும் தொழில் முதாலாளியாகவும், பண
பரிவர்த்தனை செய்யவும், முதலீடு செய்பவராகவும், கணக்காளாராகவும், வங்கியாளராகவும் இந்த
துபாஷிகள் செயல்பட்டுள்ளனர் என்பது பல ஆவணங்களின் மூலம் தெரிகிறது. மேலும் ஐரோப்பியர்களான
பார்த்தலோமியா சீகன்பால்கு, இராபர்ட் டி நோபிலி, பெஸ்கி, பிரடரிக் ஷல்ட்சு ஆகியோர்
துபாஷிகளாக பணியாற்றியுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது3.
தென்னிந்தியவிலும் பிரஞ்சு இந்தியாவிலும்
ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் மிக முதன்மையான பங்கு மற்றும் அவரின் நாட்குறிப்பு தென்னிந்திய
வரலாற்றை துல்லியமாக மெருகூட்டச்செய்து தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியது அவரின் துபாஷிப்பணியே
ஆகும்.
ஆங்கிலேய ஆட்சியில் முதன்மையான துபாஷிகளாக
இருந்தவர்கள் அவதானம் பாப்பய்யா, பச்சையப்ப முதலியார், நெய்தவாயல் நாராயண பிள்ளை, முனியப்பிள்ளை,
கனகப்ப பிள்ளை, மணலி முத்துகிருஷ்ண முதலியார், தோட்டிகலை கேசவ முதலியார், வயலூர் குழந்தைவீர
பெருமாள் பிள்ளை ஆகியோர்களும் வேறு பலரும் இருந்துள்ளனர்4.
நாட்குறிப்பில்
காணப்படும் துபாஷிகளும் அவர்களது பணிகளும்:
முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை அவர்களின் நாட்குறிப்பின் வழி
அக்காலகட்டத்தில் நிறைய துபாஷிகள் இருந்துள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள்,
ஐரோப்பிய கவர்னருக்கு மட்டுமல்லாது, அலுவலர்கள், வணிகர்கள், படை மற்றம் காவல் அதிகாரிகள்,
ஐரோப்பிய எஜமானர்கள் அதாவது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உயர் அதிகாரிகள், ஐரோப்பிய
கவர்னர் மற்றும் அதிகாரிகளின் மனைவிகள் போன்றவர்களுக்கும் மொழி பெயர்ப்பாளர்களாகவும்,
முகவராகவும் இடைத்தரகராகவும் மேற்பார்வையாளர், முதலீடு செய்பவராகவும், கணக்காளாராகவும்,
வங்கியாளராகவும் செயல்பட்டுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலரது விவரம் பின் வருமாறு
:
வரிசை எண் |
எஜமானர்/அதிகாரி/முதலாளியின்
பெயர் |
துபாஷியாக இருந்தவர்
பெயர் |
1 |
நிக்சன் |
தெய்வப்பெருமாள் பிள்ளை
மற்றும் வெங்கடேச முதலி |
2 |
மேஸ்தர் மோல் |
நமனப்ப முதலியார் |
3 |
மோர்சின் |
அண்ணா பிள்ளை |
4 |
கிலாட் |
தெய்வப்பெருமாள் பிள்ளை
மற்றும் வெங்கடேச முதலி |
5 |
கொலோன் |
அண்ணா பிள்ளை |
6 |
மிஸ்ஸியே லாங்கரான் |
முத்துகுமரப்ப பிள்ளை |
7 |
Josias Dupre’
Porcher தற்சுபி |
சென்ன கேசவ அய்யர். |
8 |
பொதேர் |
எட்டியா பிள்ளை |
இது போன்று பலரிடம் பலர் துபாஷிகளாக இருந்துள்ளனர். இரண்டு மூன்று
ஐரோப்பியர்களுக்கு ஒருவரோ அல்லது இரண்டு பேரோ துபாஷிகளாகவும் இருந்துள்ளனர்.
நாட்குறிப்பின்
உள்ளடக்கம்:
இந்நாட்குறிப்பின் மொழி நடை பிரஞ்சு, ஆங்கிலம், போர்த்துகீசு,
சமஸ்கிருதம், அரபி, பெர்சியன் மற்றும் இந்துஸ்தானி ஆகிய மொழி கலந்து பேச்சு மொழியுடனும்
எழுதப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு அம்சமாகும். மொழி வளர்ச்சி, மொழி மாற்றம், எப்படி
18 ஆம் நூற்றண்டில் அடைந்துள்ளது என்பதனை இந்நாட்குறிப்பைப் படிப்பதன் வழி தெரிந்து
கொள்ளலாம். இதன் மூலம் 18 ஆம் நூற்றாண்டின் தமிழில் பிற மொழிக் கலப்பு அதிகம் உள்ளதையும்
அறிய முடிகிறது.
இந்நாட்குறிப்பு 11-08-1794 முதல்
15-01-1796 வரை 402 நாட்களில் எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து நாள் வரிசையாக இல்லாமல்
சில நாட்கள் விடுபட்டும் எழுதப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட காலம் மூன்றாம் மைசூர்
போருக்கு (1790-92) பிறகான காலப்பகுதியாகும். கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேயர்கள்
புதுச்சேரியை இரண்டாவது முறையாக கைப்பற்றி (23-08-1793 முதல் 18-06-1817 வரை) 23 ஆண்டுகள்
ஆட்சி செய்தனர். இக்காலப் பகுதியில் வாழ்ந்த முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை இரண்டு
ஆண்டுகள் மட்டுமே தமது நாட்குறிப்பைப் பதிவு செய்திருப்பதால் ஆங்கிலேய நிர்வாகம் பற்றி
அதிகம் தெரிந்து கொள்ள இயலவில்லை. அக்காலத்தில் நகரின் பல கட்டிடங்களை இடித்து, அழித்ததால்
மக்கள் புதுச்சேரியிலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றனர் என்பதையும்
அறிய முடிகிறது.
நாட்குறிப்பின் அனைத்து நாட்களும்
தமிழிலேயே “பிரபவ வருடம் சதயளகூரு ஆனி மாதம் 25ஆம் நாள் சூன் மாதம் 18ந்தேதி சோமவாரம்”
என எழுதப்பட்டுள்ளது. ஒரு நாள் குறிப்பிலிருந்து;
“ஆனந்த (™) வருடம் மார்கழி (š) மாதம் சா உ புத்வாரம்: சதஎளகூயச ஆண்டு.
திசேம்புறு (š) மாதம் யஎ உ இந்தனாளும் திருவேங்கடபுரத்தில்
தானே யிருந்தோம். அம்மாளவர்களும், குழந்தையும் மாத்திரம் சாயந்திரம் வீட்டுக்கு போய்விட்டார்கள்.
வேறே விந்தையானதொன்றும் கேழ்க்கப்படயில்லை.” என்னும் குறிப்பு காணப்படுவதிலிருந்து இதனை
அறியலாம்.
நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் சில தகவல்கள்:
நீதி மன்றத் தீர்ப்புகளின் விரிவான
தகவல், சாவடி நீதி மன்ற உத்தரவுகள், பொது அறிவிப்புகள், புதுச்சேரியின் குண்டு கிராமங்களை
கடலூர் ஆட்சியர் கைப்பற்றியது; பரம்பரையாக அனுபவித்து வந்த சேதராப்பட்டு கிராம வருவாய்க்காக
வரி செலுத்தியது; புதுச்சேரி நகரத்தில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி பெறுவது தொடர்பான
அறிவிப்பு; விஜய நகர அரசரின் இறப்பு; வலங்கை, இடங்கை சாதிப்பிரிவினடையே ஏற்பட்ட மோதல்கள்;
புதுச்சேரியில் கடன்கள் திரும்ப கட்டப்படாததால் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் வீடுகள்
ஏலம் விடப்பட்டது; தஞ்சாவூர் மன்னர் அமர்சிங் காசிக்கு புனித யாத்திரை சென்றது மற்றும்
முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை அவர்கள் தனக்கு ஆங்கிலம் கற்றுத்தர ஒரு ஆங்கிலேயரை
15-09-1794 அன்று நியமித்தது பின்னர் பணிச்சுமையால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாமல்
போனது போன்றவைப் எழுதியுள்ளார்.
வரி வசூல் செய்தல், நீதித்துறைத்
தண்டனைகள், பறை அடித்து அறிவிப்புகள் செய்யும் முறை ஆகியவை பற்றியும் விரிவான தகவல்கள்
காணப்படுகின்றன.
முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை அவர்கள் பிரெஞ்சில் இருந்து
தமிழ், தமிழிலிருந்து அரபி மற்றும் தமிழிலிருந்து ஆங்கிலம் என மொழி பெயர்த்து இருக்கிறார்
என்பது 06-01-1795 அன்றைய பதிவிலிருந்து தெரிகிறது. 23-09-1795 ஆம் நாளைய பதிவில் இலங்கை
கண்டியிலிருந்து வக்கீல் ஒருவர் புதுச்சேரிக்கு வருகை புரிந்த போது அவரைப் பல்லக்கில்
மேளதாளத்துடன், தாசிகளின் நடனம் மற்றும் எக்காளத்துடன் வரவேற்கபட்டார் என உள்ளது. குடியாத்தத்தில்
உள்ள துபாஷி சுப்பராய முதலி அவர்களிடமிருந்து வந்த கடிதத்தில் 24-12-1795 அன்று ஆற்காடு,
குடியாத்தம், சேத்துபட்டு மற்றும் சித்தூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில்
ஏராளமான வீடுகள், மரங்கள் மற்றும் கால்நடைகள் அடித்து செல்லபட்டுப் பெரும் சேதம் நேர்ந்ததையும்
விரிவாகப் பதிவு செய்துள்ளார். 28-10-1794 அன்று நிசாம் அகமது கான் இறந்த செய்தி,
13-10-1795 அன்று கர்நாடக நவாப் முகமது அலி கானின் இறப்பு; காவல் துறை தலைவரான பிம்ரோன்,
அரசின் தண்டத்தொகையை காவல் அதிகாரியை கொடுக்கச் சொல்லி கேட்ட போது பணம் செவழிந்துவிட்டதால்
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொடுக்க முடியாததால் இரு குழல் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு
தற்கொலை செய்து கொண்டது; 10-01-1796 அன்று நிகழ்ந்த சூரிய கிரகணம்; கோகுலாஷ்டமி; உரியடி;
கோலாட்டம்; தீமிதித்திருவிழா; போகி; பொங்கல்; புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றை செய்திகளும்
நாட்குறிப்பில் காணப்படுகின்றன.
முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை அவர்களால் சில முக்கிய நிகழ்ச்சிகள்,
செய்திகள் மற்றும் தான் கேட்டது, பார்த்தது ஆகியவற்றை நாள் வாரியாகப் பதிவு செய்துள்ளார்.
அவற்றிலிருந்து சில செய்திகளைச் சுருக்கமாக பார்க்கலாம்.
27-08-1794 அன்று பிரெஞ்சுக்காரருடைய பீரங்கிகளை நவாபு மகமதல்லிகானுக்கு
விற்று விட்டதாகவும், அவருடைய மிட்டாதாரர் (பெரும் வேளாளர்) அகமது சாய்பு மற்றும் அமுல்தாரர்
(வரி வசூல் செய்பவர்) பீரங்கிகளை வாங்கித் திடலில் சுட்டுப்பார்த்தாகவும் எழுதப்பட்டுள்ளது.
21 பீரங்கி மரியாதை:
05-09-1974 திருநெல்வேலி சுபேதார் (அரசியல் அதிகாரி – ராணுவ அதிகாரம்
இவரிடம் இருக்கும்) சாதிக் கான் என்பவர் புதுச்சேரி வந்ததாகவும் அதற்கு 21 பீரங்கிகளை
முழங்கி மரியாதை செய்ததாகவும் பதிவாகியுள்ளது.
தீ விபத்து:
08-09-1794 அன்றைய பதிவில் ‘ஒரு
சிப்பாய் துப்பாக்கி சரி பார்த்த போது குண்டு சுட்டு அருகில் இருந்த வெடிமருந்தில்
பற்றிக்கொண்டு குடிசைபற்றிக்கொண்டு காயம்பட்டு சிப்பாய்க்கும், இரண்டொருத்தருக்கு காயம்
பட்டதாகவும் அவர்கள் யிசுப்பித்தாலுக்கு கொண்டு போயிருக்கிறதாய் சொன்னார்கள்’
என எழுதியுள்ளார்.
வலங்கை இடங்கைப் பிரவினர் வழக்கின் தீர்ப்பு:
18-10-1794 அன்றைய நாளில் வலங்கை இடங்கை பிரவினரிடையே ஏற்பட்ட
வழக்கில் தீர்ப்பை பதிவு செய்து இனி வலங்கைப் பிரிவினர் வெள்ளைக்கொடி விருது வலங்கைச்
சாதியாருக்கு மட்டும் செல்லும் எனவும், இடங்கைச் சாதியினர் தங்கள் திருவிழாக்களில்
சிகப்பு, நீலம், பச்சை, மஞ்சள் பயன்படுத்தலாம் எனவும் சுத்தமான வெள்ளையை இடங்கையினர்
பயன்படுத்தலாகாது எனவும் இதை மீறினால் தண்டனை கிடைக்கும் என உத்தரவிடபட்டிருந்தது என
எழுதியுள்ளார்.
கப்பல் தரைத்தட்டியது:
31-10-1794 அன்று கூனிமேட்டு துறைமுகத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு
முன் மழைக்காற்றில் ஓரு கப்பல் உடைந்து கரைதட்டிப் போனதாகவும் அதிலிருந்த சரக்குகள்,
பணம் மற்றும் பலகைகளைச் சிலர் எடுத்துக்கொண்டு சென்றதை கேள்விப்பட்டதாகக் நாட்குறிப்பில்
குறிப்பிடபட்டு உள்ளது.
ஆடு, மாடு கறி விருந்து படைத்தல்:
23-12-1794 அன்று வேலூரில் ஒரு படைத் தளபதி (Colonel) தன்னுடைய
சமையல்காரரிடம் நாளை இருபது பேருக்கு விருந்து வைக்கவேண்டும்; அதற்கு கன்றுக்குட்டியின்
தலை வாங்கிச் சமைக்கும் படி சொன்னதாகவும், மறுநாள் விருந்தில் ஆட்டுக்கறி சமைத்து வைத்திருந்ததாகவும்,
வந்திருந்த விருந்தினர் கன்றுகுட்டியின் தலைக்கறியில்லையா எனக் கேட்டதற்கு இதோ கொண்டு
வருகிறேன் என்று சமையல்காரரை உள்ளே அழைத்தச்சென்று கழுத்தை வெட்டிக்கொண்டு போய் உணவு
மேசையின் வைத்ததாகவும், உடன் விருந்தினர் எழுந்து கலைந்து சென்றதாகவும், இதன் பின்
அந்த படைத்தளபதியை கைது செய்து சொத்து பத்துகளை ஜப்தி செய்து தண்டனை வழங்கியதாகவும்
குறிப்பிடப்பட்டு உள்ளது.
31-12-1794 நிக்சன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி கடலூர் புறப்பட்டு
செல்லும் போது 18 பீரங்கி வேட்டு போட்டதாகவும்
காலாப்பட்டு பகுதியில் பயிரிட்டு வாழும் கிராம உழவர் சோலை என்கிறிவன் தொல்லை செய்வதாக
புகார் கடிதம் எழுதி நிக்சனிடம் கொடுத்ததாகவும் அதை ஒரு பொருட்டாக கருதாமல் சாரட்டு
வண்டியில் ஏறி சென்றுவிட்டதாகவும் பதிவாகியுள்ளது.
நகரத்தூய்மை
தொடர்பான அறிவிப்பு:
04-01-1795 அன்றைய பதிவில் நகரத்தில் தண்டோரா (தமுக்கு) போட்டு
கவர்னர் உத்தரவுப்படி அலுவல் வேலை காரணமாக அவரைக் காணப் பத்து மணி முதல் பனிரெண்டு
வரை பார்க்கலாம் எனவும், நகரவாசிகள் எந்த சாதியாக இருந்தாலும் புதிய வீடு கட்டிக்கொண்டு
இருந்தாலும், கட்டப்போவதாக இருந்தாலும் தங்கள் பெயரைக் காவல் தலைவரிடம் பதிவு செய்ய
வேண்டும் எனவும் இந்த உத்தரவு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை பொருந்தும் எனவும்,
மேலும் வெள்ளைக்காரத் தெருக்களில் வசிப்பவர்கள் தினமும் அவரவர் வீட்டுக்கெதிரே கூட்டி
பெருக்கிக் குப்பைகளைச் சேர்த்து வைக்க வேண்டும் எனவும், இது உடல் நலத்திற்கும், சுத்தமாக
இருப்பதற்கும் அவசியம் எனவும், இதை கண்காணிக்க சாலை சேவுகருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்,
இதை மீறுபவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.
கட்டிடங்கள் இடிப்பு:
05-01-1795 அன்று புதுச்சேரி நகரத்தில் பிரஞ்சு கம்பெனிக்கு சொந்தமான
கவர்னர் தங்குமிடம், நாணயம் அச்சடிக்கும் இடம், படைவீரர் மற்றும் காவல்காரர் தங்குமிடங்களையும்,
சாவடி நியாயசபை இடம், வில்லியனூர் வாசிலில் இருந்த கட்டிடம் ஆகியவற்றை இடித்துத் தள்ளியதாக
பதிவிட்டுள்ளார்.
11-01-1795 அன்று ஆங்கிலேயர் புதுச்சேரியை
முற்றுகையிட்டபின் பொங்கல் பண்டிகை கொண்டாடும் பழக்கத்தை விட்டுவிட்டதாகவும், சித்தாத்தூர்
(சிறுவந்தாடு) அக்கிறாரத்துக்கு சென்று பெண்ணையாற்றில் நீராடுவதாகவும் இதற்கு பல்லக்கில்
வளவனூர், காவணிப்பாக்கம், சிறுவந்தாடு, கூடப்பாக்கம் ஆகிய ஊர்கள் வழியாக 7 நாட்கள் கழித்து 17-01-1795 அன்று புதுச்சேரி
திரும்பி வந்தாகவும் எழுதியுள்ளார்.
18-01-1795 அன்று தன் தந்தை ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையும் தானும்
அரும்பாத்தை பொன்னையா பிள்ளைக்கு கொடுத்த 1200 ரூபாய் கடனை 3½% வட்டியுடன் தவணையாகத்
திருப்பிச் செலுத்தியதற்கு உடன்படிக்கை ரசீதை எழுதிக் கையெழுத்திட்டு வைத்துக்கொண்டதாகவும்,
முழு உடன்படிக்கையின் வாசகமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஜியாருக்கு வெற்றிலைப் பாக்கு மரியாதை:
22-01-1795 அன்று சென்னை காஜியார் (முஸ்ஸீம் மதத்தலைவர்) புதுச்சேரி
வந்தபோது முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை வீட்டுக்கு தன்னுடைய பெர்சிய மொழி ஆசிரியரிடம்
காஜியாரை தன் வீட்டுக்கு அழைத்து வரச்சொன்னதாகவும் அவர் வந்த போது வீட்டைச் சுற்றிப்
பார்த்துவிட்டுச் செல்லும் போது பாக்கு வெற்றிலை கொடுத்து மரியாதை செய்ததாகவும் உள்ளது.
சிவில் நீதிமன்றத்தின் தலைவர் பொதோருக்காக ஏற்பாடு செய்திருந்தக் கூண்டுப் பல்லக்கிற்கு
வண்ணம் அடிப்பதை பார்த்துவிட்டு போனதாகவும் எழுதியுள்ளார்.
நினைவு
நாள் அனுசரித்தல்(திதி):
25-01-1795 தன் பெரிய தந்தையாகிய ஆனந்த ரங்கபிள்ளையின் நினைவுநாள்
(திதி) அன்று 8 பேருக்கு ஒரு ரூபாய் தட்சணையும் வேட்டித்துண்டும் பெரியவர்கள், பிராமணர்,
பிச்சைகாரர் ஆகிய 200 பேருக்கு உணவளித்தாகவும் பதிவு செய்துள்ளார். முத்து விஜய திருவேங்கடம்
பிள்ளை தன்னுடைய பணம், கொடுக்கல் வாங்கல் கடன் சம்பந்தமான வழக்குகளை சிவில் நீதிபதி
பொதேர் கவனித்து வந்தார், அவர் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்கு அடிக்கடி
நீதிபதியை சந்தித்து முறையிட்டு வந்துள்ளார். பிரஞ்சு கம்பெனி கொடுக்க வேண்டிய பணத்துக்கு
ஏலத்தில் வாங்கியிருந்த பொன், வெள்ளி சரிகை துணி ஆகியவற்றிலிருந்து ஒன்று எடுத்து கொடுத்ததாகவும்
பதிவு செய்துள்ளார்.
குண்டு கிராம வரி வசூல் உடன் படிக்கைப் பத்திரம்:
31-01-1795 அன்றைய பதிவில் ஆங்கிலேய கம்பெனி உத்தரவுப்படி கடலூர்
கலெக்டர் அவர்களிடம் புதுச்சேரியை சேர்ந்த குண்டு கிராமங்களான சாரம், பாக்கமுடையான்பட்டு,
உழந்தை, புதுப்பாளையம் ஆகிய கிராமங்களை வரி வசூல் செய்ய ஐந்து ஆண்டு குத்தகை உடன்படிக்கை
வாசகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாட்டு முதலி, பெருமாள் பிள்ளை, எல்லாசி
பிள்ளை, நமச்சிவாய பிள்ளை, உழந்தை முருகப்ப முதலியார், சாமி முதலியார், புதுப்பாளையம்
வெங்கடாசல பிள்ளை, பொட்டு போட்ட அருணாசல பிள்ளை, பழனி முதலியார், திருப்பள்ளி நாயக்கர்,
கிருஷ்ணபிள்ளை ஆகியோர் அனைவரும் எழுதிக் கொடுத்த உடன்படிக்கைச் சீட்டு எனவும் இதில்
கையெழுத்து இட்டவர்கள் பெயர்களும் உள்ளன. ஒழுகரைக்குத் தனியாக உடன்படிக்கை சீட்டும்
ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.
பல்லக்கு வழங்குதல்:
01-02-1795 அன்றைய பதிவில் சிவில் நீதிபதி பொதேர் பல நாட்களாய்
பல்லக்குக் கேட்டக்கொண்டிருந்ததாகவும் தன்னிடம் இருந்த தண்டு பல்லக்கை இலவசமாக கொடுத்துவிட்டதாகவும்
எழுதியுள்ளார்.
கையூட்டு (லஞ்சம்) கொடுப்பது:
19-03-1795 அன்று பொதேர் வீட்டில் அவருடைய துபாசி எட்டியா பிள்ளையுடன்
முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை அவர்கள் நீதிபதி பொதேர் வீட்டிற்குச் சென்று இரண்டு
மூன்று வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், இரண்டொருத்தர் பணம் தர வேண்டியிருப்பதாலும்
பொதேர் இருக்கிற வரை தனக்கு சாதகமாகத் தீர்ப்பு எழுத வேண்டும் எனவும், இதற்கு பல்லக்கு,
பொருள் வகை போக இனாமாக மேலும் இருநூறு ரூபாய் தருவதாகவும் இதை முடித்துத்தரும்படி கேட்டுக்
கொண்டதாக ரகசியமாக கூறினார் என்றும், அதற்கு பொதேர் அப்படியே செய்தாகவும், மேலும் அதற்கு
பொதேர் வேறு ஒருவரிடம் நூறு வராகன் கடன் பட்டிருப்பதாகவும் அந்த நூறு வராகனையும் சேர்த்துக்
கொடுத்து விட்டால் எதுவும் கேட்காமல் உங்கள் கோரிக்கை படி தீர்த்து வைப்பதாகவும் நாட்குறிப்பில்
குறிப்பிட்டப்பட்டு உள்ளது.
பிறப்பு இறப்பு சாதகம்:
25-03-1795 அன்று முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை அவர்களின் அத்தை
(தந்தையின் சகோதரி) இராசராசேஸ்வரி என்ற குழந்தையம்மாள் இறந்தார் எனவும் அவருடைய பிறப்பு
இறப்பு சாதகம் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
வீடு விற்றுப் பதிவு செய்தல்:
06-04-1795 அன்று செட்டித்தெருவில் இருந்த புதுமனையை வழுதாவூர்
நாட்டு சின்னத்தம்பி என்பவருக்கு 450 பூவிராகனுக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டதாகவும்
சின்னத்தம்பியின் தம்பி ஆதிரெட்டி சில உதவிகள் செய்தபடியால் இந்த விலைக்கு கொடுத்ததாகவும்,
அடுத்த நாள் கிரயம் செய்தப் பத்திரத்தை சாவடி நீதிமன்றத்தில் பதிவு செய்ததாகவும், சாலை
விசாரணைக்காரரிடம் கையெழுத்து வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தண்டனை வழங்குதல்:
10-04-1795 அன்று Colonel Nixon-னுடைய துபாசி தெய்வப்பெருமாள்
பிள்ளை, வெங்கடேச முதலியார் ஆகிய இருவரும் வலங்கையார் கோயில் காரியங்களில் விரோதமாக
நடந்து கொண்டபடியால் வருகிற திங்கட்கிழமை 13-04-1795 அன்று கவர்னர் மாளிகை எதிரே உள்ள
மைதானத்தில் கட்டி வைத்து அடிக்கப் போகிறதாய் காவல் தலைவர் பிம்ரோன் ஆணைப்படி தமுக்கு
அடித்தார்கள் எனவும், அந்த ஆணையின் நகல் பிரஞ்சு மொழியில் நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் தலைவர் தற்கொலை:
13-04-1795 கோட்டைக்குப்பத்திற்கு ஒரு தலைக்கட்டு நிகழ்ச்சிக்கு
(இறந்தவருக்கு கருமாதி செய்வது) சென்ற போது வெங்கடாம் பேட்டை அம்பலாவாண பிள்ளை என்பவர்
மூலம் கேட்டச் செய்தியை பதிவு செய்துள்ளார். காவல் தலைவர் பிம்றோம் இரட்டைக்குழல் துப்பாக்கியால்
சுட்டுக்கொண்டு இறந்து போனதாகவும், துபாசி தெய்வப்பெருமாள் பிள்ளை, வெங்கடேச முதலியார்
ஆகியோரை மைதானத்தில் கட்டி வைத்து அடிக்கவில்லை எனவும், பறையர் அங்கங்கே கும்பல் கூடி
நாசக்காரியம் செய்ததாகவும் இந்தச் சமயத்தில் திரும்பி வீட்டுக்கு வரவேண்டாம் என அம்பலவாணப்பிள்ள
கூறியதால், திரும்பி அக்கிறகாரம் சென்றதாகவும், சில வழிப்பயணிகள் மூலம் சின்னக்கடை
தெருவில் ஏழெட்டு கடைகள் கொள்ளயடிக்கப்பட்டதாக கேள்விப்பட்டதையும் நாட்குறிப்பில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
14-04-1795 அன்று செட்டிகள் இருவரிடம் பெற்ற அபராதத்தொகை 1200ஐ
காவல் தலைவர் பிம்றோம் வைத்திருந்ததாகவும், அந்த பணத்தை உயர் அதிகாரி ஒருவர் இரண்டு
மணி நேரத்திற்குள் திருப்பித் தரும் படி கேட்டு அனுப்பிய போது அந்தப் பணத்தை செலவழிந்துவிட்டதால்
திருப்பித் தர முடியாமல் இரட்டைக்குழல் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்ததாகவும்,
மேலும் துபாசி தெய்வப்பெருமாள் பிள்ளை, வெங்கடேச முதலியார் ஆகியோரை மைதானத்தில் கட்டி
வைத்து 24 அடி அடித்ததாகவும் பதிவு செய்துள்ளார்.
சேதுபதி கைது:
25-04-1795 இராமநாதபுரம் மதுரை சேதுபதிகள் கிருத்துவப் பாதிரியார்களின்
மயக்கத்தில் (மத மாற்றம்) அகப்பட்டுக் கொண்டு கிருத்துவ மதச் சம்பிரதாயங்களைக் கடைபிடித்து
வருவதாகவும், இதனால் சேதுபதியின் உறவினர், அதிகாரிகள் சேதுபதியை கையில் விலங்கு போட்டுக்
கைது செய்து திருச்சிராப்பள்ளியில் காவல் போட்டதாக கேள்விப்பட்டச் செய்தியை பதிவு செய்யப்பட்டு
உள்ளது.
கடன் தொகை திரும்பப் பெறல்:
27-04-1795 காவல் தலைவர் பிம்றோம்
சொத்துக்கள் ஏலம் விடப்போவதாகவும், திருவேங்கடம் பிள்ளைக்கு 38 ரூபாய் பிம்றோம் கடன்
பாக்கித் தர வேண்டி இருந்ததால் அந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு இறந்து போன பிம்றோமின்
ஏலம் விடும் பணத்திலிருந்து தனக்கு தர வேண்டி, காவல் அலுவலகத்தில் கடிதம் கொடுத்ததாகவும்
பதிவு உள்ளது.
28-04-1795 பிம்றோமுடைய தட்டுமுட்டுகள் ஏலம் போட்ட போது தன் கோரிக்கையின்
படி ஏலத்தின் கிடைத்த கடன் பாக்கி 240 ரூபாயை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்ததாகவும்
நாட்குறிப்பில் பதிவு உள்ளது.
01-05-1795
ஒரு படைவீரன் கடலில் குளித்து கொண்டிருக்கையில் சுறா மீன் தாக்கி கை, கால் பலத்த காயம்
பட்டு வீழ்ந்து போனதை பார்த்தாய் பதிவிட்டுள்ளார்.
மேரி டூசாட் மெழுகு பொம்மைக் கண்காட்சி:
11-05-1795 அன்று பெனுவா என்ற வெள்ளைக்காரர் வீட்டில் சில பொருட்களை
அலங்காரம் செய்து வைத்திருந்தான் எனவும், அந்தப் பொருட்களைப் பார்க்க தமிழர்களுக்கு
ஒரு ரூபாய் கட்டணமாக வசூலித்து காண்பித்ததாகவும் அந்த காட்சி அறையில் பிரஞ்சு அரசர்;
அவர் குடும்பத்தார், அண்ணன், தம்பி முதலானவர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது போலவும் இந்தக்
காட்சி நேரில் பார்ப்பது போல் சிலைகள் செய்து வைத்திருந்ததாகவும்; ஐரோப்பிய தேசப் வரைபடங்களையும்;
ஒருவனை காவலில் வைத்திருப்பது போலவும்; கலவரத்தில் ஒருவரின் தலையை வெட்டி தட்டில் வைத்திருப்பது
போலவும்; இந்த கண்காட்சியை பலர் ஒரு ரூபாய் கொடுத்துப் பார்த்ததாகவும், முத்து விஜய
திருவேங்கடம் பிள்ளையும் நேரில் சென்றுப் பார்த்து இக்கண்காட்சியைப் பற்றி நாட்குறிப்பில்
பதிவு செய்துள்ளார்.
குறிப்பு: ஆகஸ்டு,
1794 அன்றுச் சென்னை அமீர்பாக், நவாப் வாலாஜா அரண்மனையில் ஒரு கண்காட்சி நடந்ததாகவும்
அதற்கு 3 நட்சத்திர பகோடாக்கள் நுழைவு கட்டணமாக வசூலித்ததாகவும், இந்த கண்காட்சி பிரபல
மெழுகு பொம்மை செய்யும் மேரி டூசாட் பல நகரங்களுக்குச் சென்று காட்சிப்படுத்தியாதாகவும்
திருமதி நிவேதிதா லூயிஸ் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்5.
இந்த குறிப்பிலிருந்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் புதுச்சேரி இருந்த
போது இந்த கண்காட்சி நடந்துள்ளது என்பது உறுதியாக தெரிய வருகிறது.
புத்தங்கள் வாங்கிச் செல்லுதல்:
17-05-1795 அன்று முசியே (Monsier-Mister) லெத்தானணனிடமிருந்து
Dictonarieyo la academy என்றப் புத்தகம் இருந்தது எனவும் அதை தனக்கு வேண்டும் என கேட்டதற்கு
10 ரூபாய் விலை கொடுத்து விட்டு எடுத்து செல்லுங்கள் என்று முசியே கொடுத்ததாகவும்,
பின்னர் நான்கைந்து புத்தகங்கள் சிலவும், குதிரை மேல் வைக்கிற ஒற்றை குழல் துப்பாக்கியும்
கொடுத்தார் எனவும் பதிவு செய்து உள்ளார்.
முடிவுரை:
இந்நாட்குறிப்பிலிருந்து
18ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் பிரஞ்சு அதிகாரிகள்
இருந்தனர் என்பதையும், வழக்கம் போல் முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை தன் துபாஷி பணிகளை
செய்து வந்தார் என்பதையும் தன் மூதாதையர் பணச்சிக்கல் தொடர்பாக வழக்குகளை நடத்தி வந்தார்
என்பதையும் அந்நாளின் வழக்குகள், நீதி மன்ற நடைமுறை ஆகியவைப்பற்றியும் அறிய முடிகிறது.
அடி குறிப்புகள்
(End
Notes):
1. பக்கம்-17,
முத்து விஜய திருவேங்கடம் நாட்குறிப்பு(1794-1796),. எஸ்.ஜெயசீல ஸ்டிபன், 1999. இந்திய-ஐரோப்பியவியல்
ஆராய்ச்சி நிறுவனம்.
2. An
uneasy Alliance: Traders, Missionaries and Tamil intermediaries in the 18th
Century French India by Danna Agmon. Ph.D Desserattion in the University of
Michigan – 2011.
3. Christianity
in India – Robert Eric Fry Kenberg – 2008, Oxford University Press.
4.The Dubashes of Madras – Susan M.Neild, Modern Asian Studies Vol.18, No.1, 1984, page 1-31, Cambridge University Press and Trade and finance in the Coromandel Coast 1757-1833, Lalitha Iyer, Ph.d Desseration, University of Hyderabad, 1992.
Facebook story by Nivedita Louis on 24-10-2019
https://facebook.com/nivedita.louis/posts/10218870005277626
இக்கட்டுரை 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற 40 வது ஆண்டு தென்னிந்திய வரலாற்று பேரவையின் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு அவ்வரலாற்று பேரவையின் இதழில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு
5
5.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக