புதுக்கோட்டை மரபு நடை – 2018, சூலை 7 மற்றும் 8
(காரி, ஞாயிறு)
யாதும் ஊரே யாவரும் கேளிர் (யாஊயாகே) என்ற முகநூல் நண்பர்கள் திருச்சி பார்த்தி, முருகன், வேள் குமரன் மற்றும் எடிசன் ஆகியோர் புதுக்கோட்டை மரபு நடையை 2018 சூலை திங்கள் 7 மற்றும் 8 காரி(சனி), ஞாயிறு இரு நாட்கள் 14 இடங்களை காண
கீரனூரில் உள்ள ஆனந்த மகால் என்ற திருமண மண்டபத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தினர். 150 பேர் வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அண்டை மாநில ஆர்வலர்களும் வந்திருந்தனர்.
1.
முதல்
நாள் காரியன்று (சனி) காலை 9 மணியளவில் ஆறு மூடுந்து(Van) மற்றும் மூன்று மகிழுந்துகளில்(Car) புறப்பட்டோம்.
2. இரண்டாவது வரலாற்று தளமாக மலையடிப்பட்டி சிவன் மற்றும் திருமாலுக்கு (விஷ்ணு) என இரண்டு குடைவரை கோயில்களை 10.45 மணிக்கு பார்க்க
சென்றோம். இக்கோயிலை கண் நிறந்த பெருமாள் என அழைக்கப்படுகிறது. இரண்டாம் தந்திவர்மனின்
ஆட்சி காலத்தில் பொ.ஆ 730 விடேல்விடுகு முத்திரையர் குவாவஞ் சாத்தன் திருவாலத்தூர் மலையை
குடைந்து வாகீசுவரர் என் பெயரிட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது.
3.
மூன்றாவதாக விசலூர் மார்க்கபுரீசுவரர் கோயிலுக்கு 11.40 மணிக்கு சென்றோம். இக்கோயில்
பொ.ஆ.9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால சோழர்கள் கட்டிய கோயிலாக திகழ்கிறது. முதலாம் குலோத்துங்க
சோழனின் இயற் பெயர் தாங்கிய இராசேந்திரன் என்ற கல்வெட்டு இங்கு உள்ளது. வீரத்தின்
அடையாளமான பழமையான கொற்றவை சிற்பமும், தாயின் அடையாளமான தவ்வை
சிற்பமும் இக்கோயிலில் உள்ளது. இதனை விசலிக்கோயில் என்றும் அழைக்கின்றனர். காலைப்பொழுது
சிற்றுண்டியாக மோரும், ஈரட்டி (Biscuit) ஏற்பட்டாளர்கள் கொடுத்தனர்.
4.
நான்காவதாக ஆளுருட்டி மலைக்கு நண்பகல்
12.30 மணிக்கு சென்றோம். பாண்டியர் காலத்தில்
இதை திருமான் மலையென்றும், பெரும் குற்றம் செய்தோர் மரண தண்டனை நிறைவேற்ற மலை மேலிருந்து
உருட்டி விட்டதால் ஆளுருட்டி மலை என வழங்கப்பட்டதாக செவி வழி செய்தி சொல்கிறது. மலை பக்கவாட்டில்
உள்ள குகையின் மேலே இரு சமண தீர்த்தரங்கரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குகையினுள்
கற்படுக்கைகளும், மருந்து அறைக்கும் குழியும் பாறை சுவர்களில் வானியியல் ஒவியங்களும்
உள்ளன. சுந்தர பாண்டியன் காலத்தில் பள்ளி சந்தமாய் நிலம் அளித்த செய்தி
கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. மலையை பார்த்துவிட்டு சாலைக்கு அருகே இயற்கையாக உள்ள சுனை நீர
குடித்து கொண்டிருக்கிறோம் என அங்கிருந்த ஒரு பெண் கூறினார், உடன் மரபு
நடைக்கு வந்த பெரும்பான்மையானோர் அந்நீரை பருகி அச்சுவையை உணர்ந்தனர்.
5.
இதன்பின் கீரனூர் ஆனந்த் மகாலுக்கு 1.30 மணியளவில்
வந்தடைந்து பிற்பகல் உணவருந்தினோம். 3.45 மணியளவில் சித்தன்னவாசல் சென்றடைந்தோம். அன்னவாசலுக்கு
அருகே இருப்பதால் இது அக்காலத்தில் சிற்றண்ணவாயில் என அழைக்கப்பட்டது. இங்குள்ள அறிவர்
கோயில் 7ஆம் நூற்றாண்டில் குடையப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதைப்பற்றி
பெரும்பாலும் அனைவரும் அறிந்தேயிருப்பர். இங்குள்ள முற்காலத்திய 2500 ஆண்டுகள் பழைமை
வாய்ந்த கல் வட்டங்கள், கல்லறைகள், முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி என்ற
தமிழி கல்வெட்டுகள், அழகான இயற்கை ஓவியங்கள் ஆகியவை சிற்றண்ணவாயிலுக்கு பெருமை சேர்ப்பதாக
உள்ளது. இந்த குடைவரை கோயிலின் வரலாற்றை ஓவியங்களை அழகுற எடுத்துச்சொல்லும்
தொல்லியல் துறையின் ஊழியர் திரு.பரமசிவம் மகிவும் பாரட்டுக்குரியவர். அருகில் உள்ள
ஏழடிபட்டம் சமணப்படுக்கைகள் மற்றும் பழமையான கல்வெட்டை பார்க்க நேரமில்லாததால் நார்த்தாமலைக்கு
கிளம்பினோம்.
6.
அடுத்து நார்த்தாமலைக்கு சென்றோம். ஒன்பது குன்றுகளை (மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கனை மலை, ஆளுருட்டி
மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை) உடையது, இங்கிருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு கற்கள் எடுத்து சென்றதாக
கூறப்படுகிறது. நீண்டு செல்லும் மேலமலையில் பழியிலி ஈசுவரம், பதினெண்பூமி
விண்ணகரம் என்ற குடைவரைகளும் விசயாலய சோழீசுவரம் என்ற கற்றளியும் உள்ளன. பழியிலி ஈசுவரம்
என்ற குடைவரை மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் (பொ..ஆ.826-849)
குறுநில மன்னன் விடேல் விடுகு முத்தரையன் சாத்தன் பழியிலி செய்ததாகவும் கல்வெட்டு
தெரிவிக்கிறது. பதினெண்பூமி விண்ணகரம் என்ற இந்த குடைவரை முற்காலத்தில் சமணக்கோயிலாக
இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. முதலாம் மாறவர்மன்
சுந்தர பாண்டியன் காலத்தில் (பொ..ஆ.1228) வைணவக்கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. பன்னிரண்டு
திருமால் சிற்பங்கள் இருபுறங்களிலில் ஆறு ஆறு சிற்பங்களாக ஒத்த அளவுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குகை முன்மண்டப
மேடையின் சுற்றி வரிசையாக யாளி, யானை, காமதேனு மற்றும் மனித உருவத்துடன் விலங்குடன் அமைந்த எகிப்தில்
உள்ள Spinx உருவ போன்ற
சிற்பமும் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. இக்குடைவரைக்கு எதிரே
அமைக்கப்பட்டுள்ள விசயாலய சோழீசுவரம் என்ற கற்றளி தமிழக கோயில் கட்டிட கலையில் சிறப்பு
பெற்றதாக விளங்குகிறது. சதுர வடிவில் கீழ்த்தளம், வட்ட வடிவத்தில்
அமைந்த கோபுரம் (விமானம்), வட்ட வடிவ கருவறை, கருவறையில் தஞ்சை போன்று
சுற்றி வர சிறு சுற்று வழி, ஆறு தூண்களை கொண்ட முன் மண்டபம், மண்டப சுவர்களில்
வரையப்பட்ட சோழர்கால ஓவியம் பல்லவர் கால வாயிற் காப்போன் மற்றும் கோயிலை சுற்றி பரிவார
தேவதை கோயில்கள் என பழங்கால அமைப்பை பறைசாற்றுகின்றன. பார்த்து முடித்தவுடன்
தேநீரும், சம்சாவும் கொடுத்தனர். இதன்பின் ‘புதுக்கோட்ட
மாவட்ட வரலாற்றுத் திரவியங்களின் கையேடு’ என்ற நூலை வெளியிட்டு
மரபுநடை உறுப்பினர் அனவருக்கும் கொடுத்தனர். ஏற்பாட்டாளர்கள்
மரபு நடை ஆர்வலர்களுக்கு புலனத்தில் (Whats app) வினாடி வினா போட்டி அனுப்புவதாகவும் அதில் கலந்து கொண்டு நாளைக்குள்
விடையளிக்குமாறும் சரியாக பதலிளிப்பவர்களுக்கு மூன்று பரசுகள் வழங்கப்படும் என கூறினர். பின்னர் சற்று
இருட்டிய நேரத்தில் 6.50 மணிக்கு நார்த்தாமலை கடம்பர் கோயிலை பார்க்க சென்றோம். திருக்கடம்ப
நாயனார் கோவில் என்றழைக்கபடுகின்ற இக்கோவிலில் மலையின் சரிவில் அமைக்கப்பட்டு பல கல்வெட்டுகள்
சோழ அரசர்கள் வழங்கிய கொடைகளும், நகரத்தார் என்கிற வணிக குழுவினர் அளித்த கொடை குறித்த கல்வெட்டுகளும்
உள்ளன. இக்கடம்பர் கோயிலோடு முதல் நாள் மரபு நடை முடித்து 8.00 மணியளவில்
கீரனூர் மண்டபம் வந்தடைந்தோம்.
7. இரண்டாம் நாளில் (08-07-2018 ஞாயிறு) காலையில்
அனைவருக்கும் முன் பக்கம் யாஊயாகே இலச்சினை மற்றும் பின் பக்கம் “நீரின்றி அமையா யாக்கைக்கு
எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற புறம் – 18” வரிகளை தாங்கிய T சட்டை
அனைவருக்கும் வழங்கப்பட்டது, பின்னர் தங்கியிருந்த மண்டபத்தை
காலி செய்து விட்டு முதல் இடமாக காலை 9.25 மணிக்கு திருவேங்கை வாசல் வியாக்ரபுரீசுரர் (வியாக்கரம் – புலி) என்ற புராணத்தொடர்புடைய
கோயிலுக்கு சென்றோம். இதன். பழைய பெயர் திருவேங்கைநாதர் கோயில். பிற்காலத்தில்
மரப்பெயரை விலங்கு பெயராக மாற்றி புராணத்தோடு தொடர்புடையதாக ஆக்கியுள்ளதாக தெரிகிறது.
குறிப்பு : வேங்கை மூன்று
வகையான பொருள் கொண்டது மீன், மரம் மற்றும் புலி.
(பழங்காலத்தில்
வேங்கை மரங்கள் நிறைந்த பகுதியில் அமைந்திருக்கலாம். எடுத்து காட்டாக
காஞ்சி – ஆற்று பூவரச மரம், திருப்பாதிரிப்புலியூர் – பாதிரி ஒரு
மரம்)
சோழர்காலத்திற்குப்
பின் பாண்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் பல ஆண்டுகளாக சாந்தி கூத்து
என்பது நடைபெற்றதாக கல்வெட்டுகளில் மூலம் தெரிகிறது. இராசராசன், இராசேந்திரன், விக்கரம சோழன்
சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலில்
உள்ள முன்மண்டப வாயிலில் அழகான எழுத்து பொறிப்புக்கொண்ட சோழர்கால கல்வெட்டு உள்ளது.
8.
அடுத்து திருகற்றளி என்ற திருகட்டளை கோயிலுக்கு சென்று
பார்வையிட்டோம். முற்கால சோழர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இவ்வூர் கார்குறிச்சி
திருகற்றளி என்றும் இறைவனை கார்குறிச்சி கற்றளிப் பெருமானடிகள் என்று கல்வெட்டுகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகும் (பொ.ஆ.871-907)
கோயிலை சுற்றி ஏழு பரிவார தேவதைகளுக்கான சிறு கோயில்கள் உள்ளன. வெளிச்சுவற்றில்
தெற்கு மாடத்தில் வில்லையும் அம்பையும் ஏந்தியுள்ள திரிபுராந்தகர் சிற்பம் மற்ற கோயில்களிலிருந்து
ஒப்பு நோக்கினால் தனித்து காட்டுகிறது. சோழர், பாண்டியர், விசயநகர கால
கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.
9.
இரண்டாம் நாளில் மூன்றாம் இடமாக திருமெய்யம் என்ற திருமய(ம்)த்திற்கு 12.05 மணிக்கு சென்றோம். இங்கு சிவனுக்கும், திருமாலுக்கும்
என தனித்தனியாக குடைவரை கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன. 8 – 9 நூற்றாண்டில்
எடுக்கப்பட்ட பாண்டியர் காலத்து சிற்றரசர்கள் முத்திரையர் எடுப்பித்தாக கருதப்படுகிறது. சத்தியகீரசுரர்
மற்றும் சத்தியமூர்த்தி பெருமாள் என்று இப்போது அழைக்கப்படுகிற கோயில்கள் தெற்கு சரிவில்
அர்த்த மண்டபமும், கிழக்கு நோக்கிய கருவறையும் வாயிற் காவலர் சிற்பங்களும், மண்டப சுவர்களிலும், மேற்கூரையிலும்
பழங்கால ஓவியம் தீட்டப்பட்ட அடையாளங்களும் காணப்படுகிறது. குடைவரையின்
தென்புறச்சுவற்றில் இசைக்கல்வெட்டு இருந்ததாகச் கருதப்படுகிறது. 13 ஆம் நூற்றண்டில்
இக்கல்வெட்டு அழிக்கப்பட்டு அதன் மீது சுந்தர பாண்டியனின் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சிதைந்த கல்வெட்டின்
சில எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகிறது. கோயில் நிர்வாக குழுவில்
ஏற்பட்ட பிணக்கு தீர்வு காணப்பட்டதை தெரிவிக்கிறது. வைணவக்கோயில்
சிவன் கோயிலின் கிழக்கே சுவரால் பிரிக்கப்பட்டு பள்ளி கொண்ட பெருமாளாக குடைந்து பல
சிற்ப தொகுதியுடன் செய்யப்பட்டுள்ளது. விடேல் விடுகு விழுப்பேரரையன்
என்னும் முத்திரைய சிற்றரசனின் தாயார் பெரும் பிடுகுப் பெருந்தேவி புதுப்பித்தாக கல்வெட்டு
காணப்படுகிறது. முன் மண்டபத்தில் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் விசயநகர காலத்தவையாகும். இவை மிக துல்லியமாக
காலணிகள், நரம்பு, நளிமான தோற்றம், பெண்டிர்களின் ஆடை
அணிகலன், கோபமான பார்வை, கம்பீரம் போன்ற அழகான
சிற்பங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
திருமயத்தின்
குன்றின் மீது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டிய
கோட்டை உள்ளது. 12.45 மணியானதால் இதை பார்க்கவில்லை. தேநீர் அருந்திவிட்டு, பிற்பகல் உணவிற்கு
அன்னவாசல் சமுதாய கூடத்திற்கு பயணித்தோம்.
10.
பிற்பகல் உணவில் பாயசம், முக்கனிகளான
மா, பலா மற்றும் வாழையுடன் பரிமாறப்பட்டது. சமுதாய கூடத்திற்கு
முன் இருந்த இளவட்டக்கலை சில இளவட்டங்கள் தூக்கி பார்த்து மகழ்ச்சியடைந்தனர். அருகில் இருந்த
குளத்தருகே சிறிது நேர மரத்தடி திண்டு ஓய்விற்கு பிறகு குடுமியான் மலைக்கு புறப்பட்டோம். வழியில் யாஊயாகே
சென்ற ஆண்டு வயோலகத்தில் பாழடைந்த
சோழர்கால கோயில் புதர்களாலும், செடி கொடிகளாலும் அண்டி போயிருந்ததை சுத்தம் செய்து புனரமைத்தனர். அங்கு சென்று
பார்த்த போது மீண்டும் செடி கொடிகள் வளர்ந்துள்ளது.
11.
பின்னர் குடுமியான்மலைக்கு 3.45 மணிக்கு சென்றடைந்தோம். திருநலகுன்றம்
என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட இக்கோயில் இப்போது சிகாகிரீசுவரர் என்று அழைக்கப்படுகிறது. (சிகா – குடுமி, குடுமியுள்ள
சிவன்) இந்த பெயர் வந்ததற்கான காரணம் குறித்து ஒரு தல புராணம் உள்ளது. இங்குள்ள மேலக்கோயிலில்
மலையின் கிழக்கு சரிவில் குடைவரை உள்ளது. இதற்கு தெற்கே உயர்ந்த
பாறையில் புகழ் பெற்ற இசை கல்வெட்டொன்று உள்ளது. குகையினை மேலே 64 நாயன்மார்களின்
சிற்ப தொகுதியும் உள்ளது. .8 ஆம் நூற்றண்டிலிருந்து இதன் வரலாற்று சான்றுகள் கல்வெட்டுகள்
மூலம் அறியப்படுகிறது. முகப்பு கோபுரத்தின் உள்ளே இரு புறங்களிலும் ஆயிரங்கால் மண்டபம்
கட்டப்பட்டுள்ளது. வாயிலின் வசந்த மண்டபத்தில் இரு புறத்தில் உள்ள தூண்களில் நாயக்கர்
கால 24 சிலைகள் மிக அழகானதாக பிரம்மாண்டமாக கலையழகு மிக்கதாய் வியக்கதக்க
வகையில் காட்சியளிக்கின்றன. நரசிம்ம அவதாரம், மன்மதன், ரதி, இராவணன், பனிரண்டு கைகளுடன்
ஆறுமுகன், விநாயகர், வீரபத்ரர், குதிரைப்படை வீரர், காலட்படை வீரர், கருடன் மீதமர்ந்த
திருமால் என காண்போரை வியக்க வைக்கும் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிக்கின்றன. வடித்த சிற்பியின்
திறனை மெச்ச வைக்கின்றன. மேலும் இங்குள்ள 120 மேற்பட்ட கல்வெட்டுகள்
பல வரலாற்று செய்திகளை தருகின்றன.
இரண்டு நாட்களாக
அனைத்து வரலாற்று கோயில்களுக்கும் வந்து நல்ல விளக்கமளித்த முதுபெரும் கல்வெட்டாய்வாளர், வரலாற்றிஞர், நல்லாசிரியர்
திரு கரு.இராசேந்திரன் அவர்கள் விடைபெற்று செல்வதால் குடுமியான் கோயில்
மண்டபத்திலேயே அவருக்கு பாராட்டுத் தெரிவித்து நினைவுப்பரிசு வழங்கி கொடும்பாளூர் நோக்கி
பயணமானோம்.

12.
இறுதியாக கொடும்பாளூர் மூவர் கோயிலுக்கு சென்றோம். சங்க கால சிலப்பதிகாரத்தில்
குறிப்பிடப்படுகின்ற இவ்வூர் இன்றும் 2000 ஆண்டு கால பழைமையான
பெயரை தாங்கியுள்ளது. பண்டைய சோழர்கள் தலைநகரான உறையூருக்கும், பாண்டியர்
தலைநகரான மதுரைக்கும் இடையே பெருவழியில் சிறப்பு பெற்ற ஊராகும். இரண்டு கோயில்களே
எஞ்சியுள்ளது. அதுவும் முகமண்டபம் இடிந்து கருவறையும் கோபுரமும் மட்டும் உள்ளது. சுற்றிலும்
மதில் சுவருடன் பல சிறிய கோயில்கள் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. சிற்றரசர்களான
வேளிர்களின் தலைநகராக விளங்கியுள்ளது. இராணி மங்கம்மாள் ஆட்சியில்
தளவாயாக இருந்த இலட்சுமி நரசிம்மயா என்பவருக்கு மானியமாக கொடுத்த மங்கம்மாள் சத்திரம்
என்ற இவ்வூருக்கு அருகே கொடும்பாளூர் சத்திரம் என்ற பெயர் தாங்கிய ஊராக இன்றும் உள்ளது. பல போர்களை
கண்ட இந்த கொடும்பாளுர் 10 நூற்றாண்டை சேர்ந்த வேளிர் அரசர் பூதி விக்கிரம கேசரி இக்கோயிலை
கட்டியதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. ஒன்பது தலைமுறையினரைப்பற்றி
கூறி இரு கோயில்களை மனைவியருக்கும், தன் பெயரில் ஒன்றும்
கட்டி, சைவ சமய பிரிவினரான காளாமுகருக்கு மடம் ஒன்று கட்டி உணவளிப்பதற்காக
சிற்றூர்களை (கிராமங்களை) கொடையாக வழங்கிய செய்தி
இக்கல்வெட்டு எடுத்து இயம்புகிறது. தமிழக கோயில் கட்டிட
கலைக்கு முன்னோடியாக திகழும் இக்கோயிலின் கருவறை சுற்றியும், கோபுரத்தை
நான்கு பக்கங்களிலும் சிவனின் பல புராணக்கதைக்கேற்ப சிற்பங்களை அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
கடைசியாக புலனத்தில் (Whats app) நேற்று கேட்கப்பட்ட
கேள்விகளுக்கு சரியாக விடையளித்த மூவருக்கு பரிசுகளும், புதுக்கோட்டை
மரபு நடையை ஏற்பாடு செய்திருந்த அனைவருக்கும் நினைவு பரிசுகளும், ஒவ்வொரு வரலாற்று
இடத்திற்கும் வந்து விளக்கம் அளித்த சசிதரன், மாணிக்கம்
அவர்களுக்கும் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி இனிதே புதுக்கோட்டை மரபு நடை நிறைவுப்பெற்றது.. வந்திருந்த
அனைவரும் மிக மகிழ்ச்சியான நீங்கா நினைவுகளுடன் நன்றி கூறி விடைபெற்று அவரவர் இல்லம்
திரும்பினர்.
அடிகுறிப்பு
: தரவுகள் 1. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு – முனைவர் ஜெ.ராஜாமுகமது, நான்காம் பதிப்பு 2004.
2. யாதும் ஊரே யாவரும் கேளிர் வெளியிட்ட புதுக்கோட்ட
மாவட்ட வரலாற்றுத் திரவியங்களின் கையேடு – சூலை 2018.
3. புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கோயில்களும் கடவுள்களும் – கி.இரா.சங்கரன், NCBH, Chennai, டிசம்பர், 2014.
ஆக்கம் – கி.இளங்கோவன், புதுச்சேரி.
Super sir
பதிலளிநீக்குமிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமையான செய்தி தொகுப்பு
பதிலளிநீக்கு