வேலூர் மரபு நடை(18-11-2018)
வேலூர் கோட்டை நாணயம்
மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு முகமது அஷ்ரப் அலி, இச்சங்கத்தின்
நிறுவனர் மற்றும் செயலாளர் திரு சி.தமிழ்வாணன், திரு சரவணன் ராஜா மற்றும் மருத்துவர்
திரு.குமரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இம் மரபு நடை சிறப்பாக இருந்தது. காலை
8.10 மணிக்கு வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது
1. முதலில்
வள்ளிமலை சமணர் படுக்கை, கற்பதுக்கை (பாறையில் செதுக்கப்பட்ட சமணர் சிலைகள்), குகைப்பள்ளிகள்,
மடம் ஆகியவை மலை மீது உள்ளன, இதை பார்க்க சென்றோம். இவ்வூர் இதற்கு முன்னர் சமணப்பள்ளி
இருந்ததால் பள்ளிமலை என வழங்கியதாகவும், பின்னர் முருகன் கோயில் எழுப்பப்பட்டதால் வள்ளிமலை
என மருவியதாக தெரிகிறது. இங்குள்ள பாறை புடைப்பு சிற்பங்களில் வர்த்தமான மகாவீரர் மற்றும்
பொன் இலக்கியர் என்ற பெண் துறவியர் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. வேலூர் சுற்றியுள்ள மலைகள் லட்சகணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலை குழம்பினால் உருவாகியவை என்பதற்கான ஆதாரங்கள் மலை அமைப்பில காணப்படும் பாறை அமைப்புகள் மற்றும் கிடைக்கும் இரும்பு, தாது பொருட்கள் மூலம் அறியப்படுகிறது என திரு முகமது அஷ்ரப் அலி கூறினார்.
2. இதன்
பின்னர் வள்ளிமலை முருகன் அடிவாரக்கோயில் அருகே தொல்லியில் துறையால் பரமாரிக்கப்படும்
திறந்த வெளி குடைவரை, சமணப்படுக்கைகள், சமண புடைப்புச்சிற்பங்கள், சுனை மற்றும் கல்வெட்டு
உள்ளதை பார்த்தோம். இங்கு அனைவரும் அமர்ந்து குழுப்படம் எடுத்தனர்.
3. அடுத்து
எருக்கம்பட்டு ரங்கநாதர் கோயிலுக்குச்சென்றோம். சிறிய கோயிலானாலும், கலை அம்சத்துடன்
மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. கோயில் பூட்டப்பட்டு இருந்தது. திறந்து வைக்க ஏற்பாடு
செய்திருந்தாலும் முடியாமல் போய் விட்டது. இதன் அருகில் அமைந்துள்ள ஏரியால் சிதைந்த
இந்த கோயிலை மறுகட்டுமானம் செய்யப்பட்டதாக கூறினர். மேலும் இங்குள்ள மூலவர் சிலை படுத்த
மேனியாய் ரங்கநாதர் இருப்பார் என தெரிவித்தனர். இச்சிலை பின்னமாகிவிட்டதால்(சிறிய உடைப்பு,
பழுது) வழிபாடில்லாமல் சமீபமாக வழிபடப்படுவதாகவும் தெரிவித்தனர். மூலவரை ஏற்கனவே பார்த்த
நண்பர்கள் படங்களை மற்றவருக்கு பகிர்ந்து கொண்டனர். இவ்வூர் தொண்டை மண்டல எல்லைப்பகுதியில்
அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
4. இதற்கடுத்து
மேல்பாடி சோமநாத ஈசுவரன் கோயிலுக்கு சென்றோம். இக்கோயிலில் சோழ அரசர்களின் பல்வேறு
கல்வெட்டுகள் உள்ளன. கோயிலுக்கு முன் அரச மரத்தின் அருகே ஒரு நடுகல் உள்ளது. இந்நடுகல்
யானையைக்கொன்ற வீரனுக்கோ அல்லது போரில் மரணமடைந்தவர்க்கோ எழுப்ப பட்டு இருக்கலாம் என
சொன்னார்கள். 1100 ஆண்டுகள் பழமையான இக்கோயில்
கோபுர கலசம் பச்சைக்கல்லால் செய்து திருகு வகையான முறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
முற்காலத்தில் இத்திருகு கலசத்தை எடுத்து சூரிய ஒளி படும்படி அமைத்து வழிப்பட்டதாகவும்
தகவல் சொன்னார் திரு சரவணன் அவர்கள். இக்கோயிலுக்கு எதிரே அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை
கோயில் கட்டப்பட்டுள்ளது. இதிலும் பல அரிய கல்வெட்டுகள் உள்ளன. அரிஞ்சயன் (கி.பி.956-957)
ஒர் ஆண்டு ஆட்சி செய்து மேல்பாடிக்கு அருகே நடைபெற்றப்போரில் இறந்ததால் ‘ஆற்றூர் துஞ்சிய
பெருமான்’ என்றும் முதலாம் ராஜராஜன் தன் முன்னோர்க்கு பள்ளிப்படை கட்டியதாகவும் இக்கோயிலில்
உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. சோழேந்திர சிம்மேஸ்வரம், அரிஞ்சிகை ஈசுவரம்
என்று அழைக்கப்பட்ட இவ்வூரை இப்போது மேல்பாடி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொர் ஆண்டும்
மார்ச் மாதம் மூன்று நாள் சூரிய ஒளி மூலவர் சிற்பத்தின் மீது படும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும்
இங்குள்ள இடது புற துவாரபாலகர் சிலையின் காது குண்டலத்தில் யாளி நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளதையும்,
சுற்றப்பிரகார சிலைகளிலும் பறவை, பாம்பு தவளையை கவ்வி பிடிப்பைதையும் மிக அழகாக நேர்த்தியாக
வடிக்கப்பட்டுள்ளதை திரு சரவணன் விளக்கினார். 1100 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளிப்படை
கோயிலில் கல்வெட்டு எழுத்து தெளிவாக இருந்ததை வாசித்துப்பார்த்து பரவசமடைந்தனர்.
5. இதன் பின் 1.00 மணியளவில் வள்ளிமலை விசுவகர்ம திருமண மண்டபத்திற்குச் சென்று மதிய உணவு அருந்தினோம். பின்னர் பிற்பகல் 2.45 மணியளவில் ராணிப்பேட்டையில் உள்ள ராஜா தேசிங்கு நினைவிடத்திற்கு சென்றோம். பாழடைந்த சிதிலமடைந்த நிலையில் தனியார் இடத்தில் உரிய பாரமரிப்பின்றி உள்ளது. ஆற்காடு நவாப் சதக்கதுல்லாகான் செஞ்சி மன்னன் ராஜா தேசிங்கை தோற்கடித்து இறந்த பின் அவர் மனைவி ராணிபாய் உடன் கட்டை ஏறினார். இதை அறிந்த நவாப் இவர் நினைவாக இம்மண்டபம் கி.பி.1714-15 ஆண்டுகளில் ஏழுப்பி ராணிப்பேட்டை என்ற ஊரையும் உருவாக்கினார் என்ற தகவலையும், வேலூர் கோட்டை எதிரே 1000 படை வீரர் தங்க ஆங்கிலேயர் இடம் ஏற்பாடு செய்தனர் அந்த இடம் கன்சால்பேட் (Consolepet-ஆறுதல் தரும் இடம் என்ற அர்த்தம்) என்று வழங்கபடுவதாகவும் திரு.அஷ்ரப் அலி மற்றொரு தகவலையும் சொன்னார்.
6. அடுத்து
ஆற்காடு நவாப்புடன் ஆங்கிலேயர் காலத்தில் ராபரட் கிளைவ் கி.பி.1751ல் நடத்திய போரில்
கோட்டை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதன் சிதலமடைந்த பகுதியும் கிளைவ் தங்கிய அறை
மேல் பகுதியும், டெல்லி வாயில் என்றழைக்கப்படும் இடத்தையும் பார்த்தோம். இதுவும் தொல்லியில்
துறையால் பரமாரிக்கப்படுகிறது.
7. இதன்
பின் ஆற்காட் நவாப் சதக்கதுல்லாகானின் பச்சைக்கல்லால் கட்டப்பட்ட நினைவிடத்தையும்,
சற்று தூரத்தில் தொல்லியில் துறையால் பரமாரிக்கப்படும் ஆலம்பானா கோட்டையின் பீரங்கி,
ராஜா குளிக்கும் குளம், தொழுகை மண்டபம், ராணி குளிக்கும் குளம் ஆகியவற்றை பார்த்து
விட்டு கடைசி இடமான
8. விளாப்பாக்கம்
சென்றடைந்தோம். மலை அடிவாரத்தில் நரசிம்ம பல்லவ கால முழுமையடையாத குடைவரையை கண்டுகளித்து
குழுப்படம் ஒன்று எடுத்துக்கொண்டபின் மலை மீதுள்ள சமணப்படுக்கை, ராஜராஜன் காலத்திய
கல்வெட்டு, சுனை, கற்பதுக்கைகள், பிற்காலத்திய இரானிய முஸ்லிம் துறவிகளின் குகை தொழுகை
இடம், சிறிய மண்டபம் ஆகியவற்றை பார்த்தோம். பின்னர் கிழ் இறங்கி, இறுதியாக மரபு நடை
ஏற்பாட்டாளரில் ஒருவரான திரு குமரன் நன்றியுரை கூறினார். அனைவருக்கும் வள்ளிமலை சமண
சிற்பத்தின் படம் ஒட்டிய கடிகாரம் வழங்கினார்கள். வந்திருந்த 55 பேரும் இந்த மரபு நடை
சிறப்பாக செய்திருந்ததாக ஏற்பாட்டளர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக