திருவண்ணாமலை மாவட்ட
வரலாற்று ஆய்வு நடுவத்தின்
திருமலை மரபு நடை
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்திருந்த
திருமலை சமணர் கோயில் முதல் மரபு நடை 30-09-2018 ஞாயிறன்று
நடைபெற்றது. நல்ல முறையில் அமைந்திருந்த இந்த பயணம் மற்ற மரபு நடையைவிட வரலாற்றை மாறுபட்ட
பார்வையில் மற்றும் சிந்திக்க வைக்கும் நோக்கத்தில் நடைபெற்றது குறித்து மன நிறைவு
அடைந்தேன்.
காலை 7 மணிக்கு திருவண்ணாமலை ஓட்டல் தமிழ்நாட்டில் கிட்டதட்ட
100 பேர் வரை கூடி ஒரு தனியார் கல்லூரி பேருந்திலும் ஓரு மூடுந்திலும் (Van) போளூர் வழியாக காலை 9.10 மணியளவில்
திருமலைக்கு சென்றடைந்தோம்.
மலையின் அடிவாரத்தில் உள்ள குந்தவை ஜினாலயம் மண்டபத்தில்
அனைவரும் காலை உணவு அருந்தியபின் 10 மணியளவில் மரபு நடை
பதாகையுடன் ஊருக்குள்ளிருந்து மலைக்கு சென்றோம். மலையின் உச்சிக்குக்கீழே 16 1/2 அடி உயரமுள்ள சமண தீர்த்தங்கரர் சிகாமணிநாதர் என்றழைக்கப்படும்
நேமிநாதரின் செங்குத்தான புடைப்பு சிற்பத்தை காண முடிந்தது.
கர்நாடகாவில் உள்ள சிரவணபெலகொளாவில்
உள்ள பாகுபலி என்ற கோமதேசுவரர் சிலையை நினைவுப்படுத்துகிறது. சமணத்தடங்களை பலருக்கும்
அறிமுகபடுத்தும் அகிம்சை நடையை தொடர்ந்து நடத்தும் விழுப்புரம் திரு ஸ்ரீதரன் அப்பண்டைராஜ்
அவர்களை சமணர்களின் பல் உயிர் ஒம்பும் வாழ்க்கை நெறிகளையும் இந்த இடத்தில் நான்கு விதமான
தானங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன, என்ற விளக்கத்தை அளித்தார். அடுத்து திரு விஜயன்,
தலைமை ஆசிரியர் அவர்கள் சமணர்களின் இரண்டு பிரிவுகளை பற்றியும் திகம்பரர் மற்றும் சுதேம்பரர்
என அழைக்கப்படுகிறார்கள் எனவும் திருமலை கோயிலை குந்தவை அவர்கள் ராசராசனின் நினைவாக
எழுப்பப்பட்டது எனவும், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஒவியங்கள் பற்றியும் சுருக்கமாக
எடுத்துக்கூறினார். இதற்கு மேல் மலையின் உச்சியில் சிறிய பார்சுவநாதர் ஆலயத்தை பார்த்தோம்.
அங்கேயே சற்று உயரத்தில் பாறைகளில் மூன்று பாத சிற்பங்கள் உள்ளதை கண்டோம். அங்கு அனைவரும்
அமர்ந்து சற்று இளைப்பாறினோம்.
திரு செல்லங்குப்பம் சுப்புரமணியின் நாட்டுப்புறப்பாடல்
ஒன்றை பாடி மகிழ்வூட்டினார். திரு பாலமுருகன் அவர்கள் இந்த மலை உச்சியின் மீதிருந்து
இன்று தெளிந்த வானம் இருப்பதால் இதை பல்குன்ற நாடு என்றழைக்கப்பட்டது, எனவும் இந்த
பகுதி இப்போது சுற்றித்தெரியும் கிழக்கு மலைத்தொடர்களை செஞ்சி, திருவண்ணாமலை, வேட்டவலம்,
தேவிகாபுரம், பர்வதமலை, செங்கம் என ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டினார். இது இயற்கையாக அமைந்த
மலைத்தொடர் பகுதியாகையால் தொடர்ச்சியாக மக்கள் வாழும் இடங்களாக 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
வருகிறது என்பதையும் கூறினார். பின்னர் மலையிலிருந்து கீழிறங்கி குந்தவை ஜினாலயம் சென்றைடைந்தோம்.
அனைவருக்கும் தேநீரும் சிமிலி என்ற கேழ்வரகில் செய்யப்பட்ட இனிப்பு உருண்டையும் வழங்கினர்.
இந்த திருமலை மரபு நடைப்பற்றி முதலில் வேலூர்
கணாதிபதி துளசிஸ் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு சேகர் அவர்கள்
ஆற்றிய உரையின் கருத்துக்கள் :
Ø இந்த மலையானது, 8 ஆம் நூற்றண்டுக்கு
பிறகு எழுப்பபட்டாலும், இதற்கு முன்னரே இங்கு மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.
Ø இதை Paleolithic Cite என்று சொல்லுவார்கள்,
சீவக சிந்தாமணி இந்த பகுதியில் தான் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு கூற்று உண்டு.
Ø இங்கிருந்த எடுக்கப்பட்ட பல பழங்கால சிலைகள் சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்டன
Ø இங்கு 23 கல்வெட்டுகள் உள்ளன அவை பராந்தக சோழன்
காலம் முதல் நாயக்கர் காலம் வரை உள்ளன. ஏரிக்குத்தானம் அளித்தது, மதகு கட்டியது ஆகியவை
அடங்கும். அக்கால அரசர்கள் அனைத்து மதங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததை இங்கு காணலாம்.
Ø இந்த கோயிலில் உள்ள ஒவியங்களை Fresco Technique என்ற முறையில் மாட்டு கொழுப்பாலும், செங்காவி மற்றும் இயற்கையான
நிறங்களாலும் வரையப்பட்டுள்ளது..
Ø குறிப்பாக சிற்பங்களுக்கு மூன்று வகையான கற்கள் பயன்படுத்துவர்
அவை கடினப்பாறை, மென்மையானப்பாறை, மண்பாறை இவற்றில் இப்பகுதி மென்மையான பாறைகளால் ஆனது.
அடுத்து
பேசிய பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் அவர்கள் கூறிய கருத்துக்கள் :
Ø இப்பகுதி பெருங்கற்காலத்தில் வாழ்ந்தவர்களின் பகுதியாகும்.
Ø மலைபடுகடாமில் குறிப்பிடுவதுபோல் இந்த மலைப்பகுதி வாழ்விடமாக
திகழ்ந்துள்ளது. மேலும் சுனைகள் அதிகம் உள்ளதால் சமணர்கள் வாழ்ந்துள்ளனர்
Ø 5, 6ஆம் நூற்றாண்டு வரையிலான சிற்பங்கள் செய்த காலம் வரையும்,
பிராமி கல்வெட்டுகளும் இங்கு கிடைக்காததால் முற்காலத்தைப்பற்றியும் அறிய முடியவில்லை.
Ø பல்லவர் இறுதிக்காலமான பொது ஆண்டு(கி.பி) 881 இல் பல்லவ அரசி
சின்னவையின் கல்வெட்டு கிடைக்கிறது.
Ø 8ஆம் நூற்றாண்டில் நடு நாட்டையும், தொண்டை மண்டலத்தையும்
ஆட்சி செய்த கன்னரத்தேவனின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
Ø ராசராச சோழன், ராசேந்திர சோழன் ஆகியோரின் மெய்கீர்த்தி அடங்கிய
கல்வெட்டும் உள்ளன.
Ø ராசராசனின் நினைவாக அவர் தமக்கை குந்தவை எழுப்பிய இந்த சமண
ஆலயம் பொது ஆண்டு(கி.பி) 1124 என தெரிகிறது.
Ø வீர நாரயண சம்புவராயர் மற்றும் விசயநகர ஆட்சியாளர் வரை கல்வெட்டுகள்
உள்ளன.
Ø ஆசிவகத்தின் அடுத்த நிலையில் உள்ள சமண சமயம் சுயக்கட்டுபாடு
அடங்கிய வாழ்வியலின் அடிப்படைகளை தாங்கி இவ்விடம் திகழ்கிறது.
இதற்கடுத்த
பேசிய திரு அண்ணாதுரை அவர்களின் கருத்துகள்
Ø இயற்கையான இந்த பகுதியை, மலையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை
சிந்திக்க வேண்டும். வானியியல் அறிவுதான் முக்கிய காரணம்.
Ø அக்கால மக்கள் பழங்குடியினர் வட்டாரத்தன்மை வாய்ந்த விளைப்பொருட்கள்,
விவசாய மரபு, வணிக மரபை பின்பற்றி வந்தனர்.
Ø உழவுப்பணிக்கு அடிப்படையான அறிவை சூரியனிடமிருந்து பெற்றனர்.
பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவை சந்திரனிடமிருந்து கணித்தனர்.
Ø இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் நோக்கம் என்ன, அதன் காரணமாக
ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும், இங்கு ஏன் வருகிறோம், இதை ஏன் இன்று பார்க்க வேண்டும்
என சிந்திக்க வேண்டும்.
Ø மேலும் சமணம் ஏன் வீழ்ச்சியடைந்தது, என்பதையும் சிந்திக்க
வேண்டும்.
இதன்
பின் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் பொருளாளர் திரு மு.கா.மணியரசன்
பேசியவை :
Ø முற்காலத்திலிருந்தே பல்வேறு மதங்களும், மத தத்துவங்களும்
இருந்துள்ளன. சிரவணபெலகொலாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இது இருந்துள்ளது, அதே போன்ற
பூகோள அமைப்பும் இங்கு உள்ளது.
Ø மலையிலிருந்து நிலம் சார்ந்த பல்சமய வாழ்க்கை சமணம் சார்ந்த
பல்வேறு உயிரனங்களும், தாவரங்களும், மனிதர்களும் வாழ்ந்த பகுதியாக திகழ்கிறது.
Ø இப்பகுதியில் நிலத்திற்கேற்றவாறு உள்ள உயிரனங்கள் உள்ளன குறிப்பாக
குள்ளரக மாடுகள் இப்பகுதியில் உண்டு அவை விவசாயத்திற்கு சிறந்தவை.
Ø பன்முகத்தன்மை வாய்ந்த இந்நாட்டில் தத்துவத்தை புரிந்து இயற்கையோடு
இயந்த வாழ்க்கை வாழ்ந்தனர். சமணமும் அதைத்தான் சொல்கிறது. இந்த மண்ணுக்கு ஏற்ப வாழ்ந்தும்
சென்றுள்ளனர்
Ø சமண மதத்தில் ஐந்து கோட்பாடுகள் உள்ளன அவற்றில் ஐந்தாவது
கோட்பாடான அகிம்சையை மகாவீரர் தருகிறார்.
Ø மதத்தலைவர்கள் தங்கள் கோட்பாடுகளை விளக்கி, பேசி பரப்புகின்றனர்
இதன் மூலமாக கலை, பண்பாடும் உருப்பெருகிறது. இது போன்ற தத்துவங்களை நம் பிள்ளைகளுக்கும்
அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
திரு வையவன் அவர்கள் பேசிய கருத்துகள் பின் வருமாறு :
Ø சமணம் வருவதற்கு என்ன இருந்தது, பௌத்தம், சமணம், சைவம், வைணவம்,
கிறிஸ்த்துவம், இசுலாம் போன்றவை எது சிறந்தது என்பது வேறு இதில் வரலாற்று ரீதியாக எது
சிறந்தது என்று பார்க்க வேண்டும்
Ø பழைய வரலாற்றை மாற்றி அமைக்கும் பல தடயங்கள் கிடைத்து மாறி
வருகின்றன. தொல் பழங்குடியினர் வாழ்ந்த மரபில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
Ø இப்பகுதி கண்டங்கள் நகர்ந்து ஏற்பட்ட காலம் முதல் கடலுள்
மூழ்காத தக்காண பகுதியாக இருப்பதாக அறியப்படுகிறது, ஜவ்வாது மலையில் வைனுபாபு வான்வெளி
ஆய்வு மையம் உள்ளது, இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாக விளங்குகிறது.
Ø மதுரையில் கூன் பாண்டியனை மதம் மாறிய பின் நின்ற சீர் நெடுமாறன்
என்ற மாற்றியது, மதம் அரசை கைப்பற்றி மனிதரை மாற்றியது.
Ø நம் உடல் இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது, மதங்கள் உள்ளே
புகுந்து நெருட வைக்கிறது, மாலை போட, நாமம் போட, குல்லா போட வைக்கிறது.
Ø நாம் தமிழ் இனத்தை, மொழியை, வரலாற்றை நாம் தேடுகிறோம், இப்படிப்பட்ட
மதம் சார்ந்தவை ஒரிடத்தில் நின்று விடும் ஆனால் நம் செம்மாந்த வரலாற்றைத்தான் தேடிச்
செல்ல வேண்டும்.
Ø பழங்கால, ஆதிகால உணவு அசைவம் தான் இருந்தது, சமணத்தின் உயிர்க்கொலை
என்ற உயரிய கோட்பாடுகளினால் இதிலிந்து விலகினர்.
Ø அறிவின் அடிப்படை, உயிர்க்கொலை, பஞ்சமா பாதகங்கள் என பின்னர்
ஊட்டப்பட்டது, நம் மரபில் இறைச்சிதான் உள்ளது அதன் எச்சமும் உள்ளது. அதனால் தான் இன்னமும்
அதை விடுவதில்லை.
Ø வரலாற்றிற்காக கல்வெட்டுகள், சின்னங்கள், அகழாய்வு என பார்த்து
படித்து தெரிந்து கொண்டாலும் நம் இரத்தத்தில், நம் அணுக்களில் இலட்சம் ஆண்டுகளாக ஒடிக்கொண்டிருக்கும்
வரலாறு என்பது வேறு அந்த வரலாற்றையும் நாம் தேட வேண்டும்.
இறுதியாக
பேராசிரியர் சு.பிரேம்குமார் பேசியதாவது :
Ø சமணர்களில் மதுரைக்கு சுவேதம்பரரும் இப்பகுதிக்கு திகம்பரரும்
வந்தனர். சுவேதம்பரர் பஞ்ச பூத கோட்பாட்டை ஒப்புக்கொள்பவர்கள். பஞ்ச பூத கோட்பாடு தமிழர்
கோட்பாடு.
Ø ஆகாயத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் சமணர்கள், ஒழுக்கத்தைப்பற்றி சொல்லப்படுகிறது, உயிர்க்கொலை
பற்றியும் தாவரங்கள் பற்றியும், உயிரனங்களின் மேன்மையும் சமணத்தில் சொல்லப்படுகிறது.
ஆனால் தொல்காப்பியத்தில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை சொல்லப்பட்டிருகிறது. நம் இலக்கியத்திலும்
இதைப்பற்றி நிறைய சொல்லப்பட்டிருகிறது. நாம் மறந்து போன விஷயங்களை வேறு சிலர் வந்து
ஞாபகபடுத்துகின்றனர்
Ø ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளில், கோட்பாடுகளின் மீது தான்
புதியவை வரும். இதற்கு நம் தமிழின் மூலம் தொல்காப்பியம்தான். இதற்கு பின் இலக்கிய மரபு
நீண்ட நெடிய தொடர்ச்சியான வரலாற்றை கொண்டுள்ளது. இதற்கு காரணம் இங்கு இருந்த தொடர்
வாழ்வியல் தான். இந்த சிறப்பு வேறு உலக இலக்கியங்களுக்கு இல்லை.
Ø ரோமானியர்கள் இங்கு வணிகத்திற்கு வந்திருக்கிறார்கள்,
Ø மதங்களுக்கு பின்னால் வணிகம் இருக்கிறது
Ø ஆங்கிலேயர் ரயில் பாதை போட்டது வணிகப்பொருள்களை கொண்டு செல்லத்தான்.
Ø இதைப்போன்றுதான் வரலாற்றில் வணிக வழிப்பாதைகள் இருந்துள்ளன.
இவை, தங்குவதற்கும், எடுத்துச்செல்வதற்கும், விற்பதற்கும் பயன்பட்டன.
Ø உயிர்க்கொலைப்பற்றி பேசுபவர்கள் 64 கலைகளை எப்படி ஏற்படுத்தினர், உயரை கொன்றால்தான் மருத்துவராக
முடியும் பின் எப்படி, கல்வி, மருத்துவம் கற்றுக்கொடுத்தனர்.
Ø விவசாயம் என்பது பல்லுயிர் பெருக்கமும் அழிவும் நிகழும்.
இப்பகுதி பல்லுயிர் பெருக்க நிறைந்தவை. குறிப்பாக வணிகர்கள் இங்கு விளைந்த பருத்திக்காகவே
வந்தனர். இந்த அடிப்படையில் தான் சிற்பம், கோயில், ஓவியம் போன்றவை வந்தன.
Ø வணிக வழியில் படையெடுக்களும், போர்களும் நிகழ்ந்துள்ளன இவை
நாட்டின் வளங்களை கைப்பற்ற நடந்தவை
Ø வரலாற்றை ஒரு சார்பாக சொல்லக்கூடாது, பிறரின் கோட்பாடுகள்,
கருத்துகளையும் மனதில் கொள்ளவேண்டும்.
Ø சைவத்தின் தேவாரம் கடவுளை, சிவனை மட்டும் பாடவில்லை, தளத்தின்
இருப்பிடம், வழிபட்டவர்கள், சூழல் என பல்வேறு தகவல்கள் உள்டக்கியுள்ளது. மதங்கள் ஏன்
வழிபாட்டை மட்டும் கூறிச்செல்கின்றன என்பதை சிந்திக்க வேண்டும்.
Ø தமிழ்ப்பாடல்களில் கருப்பொருள் என்பது 14 வகைகளை கொண்டது, இசை, உணவு, நீர், மரம், செடி, கொடி, பண்
அமைப்பு போன்றவை. இது வரலாறாக பண்பாடாக மாறாதா என்ற பார்வை நமக்கு வேண்டும். நம் வரலாற்றுப்பயணம்
உண்மையைத் தேடுவதற்கான பயணிக்கும் கூட்டமாக இருக்க வேண்டும்.
மரபு நடைக்கு வந்தவர்களுக்கு திருமலை சமணர் கோயில் என்ற 6 பக்க விளக்க அறிக்கை கோயிலை பற்றியும், சமண சிற்பங்களை குறித்து
ஒன்றும், திருமலைப்பற்றி திரு ர.விஜயன் எழுதிய சமணர் வரலாற்று நூலின் 36 பக்க நகல் ஒன்றும், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பற்றி
வரைபடம் மற்றும் சிறு நூல் (திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வெளியிட்டது)
ஆகியவை கொடுத்தனர். இந்த உரைகளின் கருத்துகளையும் கொடுத்த நூல், அறிக்கை மற்றும் வரைபடங்களை
பெற்றுக்கொண்டு அனைவரும் பிற்பகல் உணவிற்காக திருமலையில் உள்ள சமண மடமான ஆச்சார்ய அகளங்க
கல்வி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள உணவுக்கூடத்தில் உணவருந்திவிட்டு, அங்குள்ள அரங்கத்தில்
குழுப்படம் எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு திரும்பினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக