07-05-2025 ஆறாம் நாள்
14. தம்புள்ள மலை புத்தர் குடைவரை
இலங்கை மாத்தளை பிரதேசத்தில் சிகிரியா அருகே அமைந்துள்ள தம்புள்ள குடைவரை வட்டகாமனி அபயா என்ற மன்னனால் கி.மு.89-79 ஆண்டில் அமைக்கப்பட்டதாகவும் இதன் பின் நிசமங்கமல்லாவும்
(கி.பி.1187-1196) கண்டி அரசர்களும் புத்தர் சிலைகளுக்கு தங்க வண்ணம் பூசி மெருகேற்றினார் எனவும் கூறப்படுகிறது.
மலை மேல் 5 குடைவரைகள் உள்ளன, மொத்தம் 151 புத்தர் சிலைகள் உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, படுத்த நிலையில் உள்ளன. சில மன்னர்களின் சிலைகளும் உள்ளன.
15. ஆயுர் வேத பாரம்பரிய வைத்தியசாலை
இலங்கையில் ஆயுர் வேத மருத்துவம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது, இதை காணும் வகையில் பாரம்பரியம் என்ற மூலிகை தோட்டத்துடன் உள்ள ஆயர்வேத மருத்தவ சாலைக்கு சென்றோம். அங்கு மருத்துவர் குகனேஷ் எங்களை வரவேற்று அங்குள்ள முக்கியமான மூலிகைகள் மூலம் செய்யப்படும் மருந்துகளை பற்றியும், நோய் குணமாக்கும் மருந்துகளைப் பற்றியும் விளக்கினார். நம் நாட்டில் உள்ள ஆயுர் வேத மருத்துவத்தை போன்றே இங்கும் பிரபலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பிற்பகல் உணவிற்கு பின் இலங்கையின் மத்திய மாகாண தலைநகரமான கண்டி சென்றடைந்தோம். கண்டி ஆங்கிலேயர் உருவாக்கிய ஏரியின் கரையில் தலதா மாலிகவா என்ற புத்தரின் பல் வைக்கப்பட்டுள்ள கண்டி அரசரின் மாளிகையும் உள்ளது. கண்டி நடனம் பார்ப்பதற்கு ஏற்கனவே எங்களுக்காக மாலை 5 மணிக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் நடனம் நடக்கும் அரங்கிற்கு சென்றோம். ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சி 9 பிரிவுகளாக மிக அழகாகவும், நளினமாகவும், இலங்கையின் பராம்பரியம், கலைகளையும் எடுத்துக் காட்டி நிகழ்த்தினர்.
16. கண்டி
கண்டி பண்டைய அரசர்கள் ஆட்சி செய்த நகரமாகும் பல அரச பரம்பரையினர் ஆட்சி செய்த போது சிங்கள புத்த மதம் பரவியிருந்த காலத்தில் புத்தரின் பல் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற இடங்களில் வைக்கப்பட்டு இறுதியாக இப்போது சீரிதலதா மாலிகவா என்ற கண்டி அரசர் மாளிகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பல்லை கடந்த 2025, ஏப்ரல் மாதம் பார்வைக்கு வைத்துள்ளனர், 4,50,000 பேர் 17 நாட்களாக நீண்ட வரிசையில் நின்று பார்த்து சென்றதாக கூறினார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரியின் கரையில் இந்த தலதா மாலவிகா அமைந்துள்ளது. கண்டி அருங்காட்சியகம், கண்டி அரசமாளிகை தொல்பொருள் நூதன சாலை, உலக பௌத்த நூதன சாலை ஆகியவையும் உள்ளது. கண்டி 18 ஆம் நூற்றாண்டில் காலனிய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு பழமையான கட்டிடங்கள் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
![]() |
புத்தர் பல் இருக்கும் மாடம் |
![]() |
ராஜசிங்ஹ மன்னன் (1747-1781) |
![]() |
அக்கால காற்றாடி |
![]() |
புத்தரை வழிபட எடுத்து செல்லும் பூக்கள் |
17. நுவரேலியா
இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மலைப் பாங்கான குளிர் பிரதேசமாகும். நம் தமிழ்நாட்டின் ஊட்டி, கொடைக்கானல் போன்று காலனிய ஆட்சியாளர்களால் மேம்பட்டுத்தபட்ட நகரமாகும். கண்டியிலிருந்து 109 கி.மீ தூரத்தில் உள்ளது. முதலில் சீதையம்மன் கோயிலை பார்த்தோம். இராமயண புராண கதையின்படி இந்த கோயில் உள்ள பகுதி அசோகவனம் எனவும், சீதையிடம் அனுமன் கணையாழி பெற இங்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. சீதையம்மன் கோயில் புதியதாக கட்டி 2022 ஆண்டு குடமுழக்கு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு பின்னே மலை ஆறு ஒடுகிறது.
கோயிலை பார்த்து முடித்தவுடன் ஆராலியா ரெட் என்ற சொகுசு விடுதியில் தங்கினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக