கி.இளங்கோவன்

கி.இளங்கோவன்
இளங்கோ

வியாழன், 21 ஜனவரி, 2021

 

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம்.

ஆதி திருவரங்கம்ஜம்பை மரபு நடை- 4  நாள்- 30-12-2018


பெருமணம்:

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் நான்காம் மரபுநடையாக ஜம்பை, ஆதிதிருவரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு முதலில் பெருமணம் என்ற பழமையான ஊருக்கு சென்றோம். அந்த ஊரின் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பாக அந்த ஊரின் பள்ளி மாணவர்களும் மரபுநடைக்கு வந்தவர்களும் கூடியிருந்தனர். மரபு நடையைப்ற்றி அறிமுகம் செய்த பின் திரு செல்லங்குப்பம் சுப்பரமணி அவர்கள் வரலாற்று பாடலும், சமூக விழிப்புணர்வு பாடல்களையும் பாடினார். பின்னர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் முனைவர் திரு ஸ்தனிஸ்லாஸ் மரபு நடையில் பெருமணம் ஊரைப்பற்றி எடுத்து கூறினார்.   12ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஈசுவரன் கோயில், விஜயநகர காலத்து கல்வெட்டு, மகாவீரர் சமண தீர்த்தங்கர் சிற்பம் தத்தங்கிசாமி என்ற வழிபாட்டு முறை, செஞ்சி நாயக்கர் கால 16ஆம் நூற்றாண்டு வழிபோக்கர் மண்டபம், வீரன் நடுகல் ஆகியவை உள்ளன எனச் சொன்னார்


பின்னர் புனித வனத்து சின்னப்பர் ஆலய வளாகத்தின் முன் காலை உணவு அருந்தியபின் அங்குள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சென்றோம். எங்களுடன் அந்த ஊர்ப் பள்ளி மாணவர்களும் ஊர் சிறுவர்களும் வந்தனர். முன்னாள் தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் முனைவர் .பூங்குன்றன் அவர்கள் கோயில் கல்வெட்டு குறித்து சிறு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, “கல்வெட்டுகள் கல்லணை எப்படி கட்டினார்கள் என்பதைப் பற்றி கூறிகின்றது, எப்படி பஞ்சம் வந்தால் கோயில் சொத்துக்களை விற்று தீர்த்து வைத்தனர் என்பதைப் பற்றியும் கூறுகின்றது. சண்டை, சமாதானம் மணமுறிவு, வாழ்க்கையின் எல்லா அம்சங்களின் தன்மையினையும் கோயிலில் எழுதி வைத்த மரபு இருந்தது. தைப் போன்று இந்த பழமையான கோயில் 1000 ஆண்டு பழைமை வாய்ந்தது, சோழர்கள் கட்டியிருக்க வேண்டும். கோயில் கல்வெட்டுகள் அந்த காலத்துடைய வாழ்க்கை முறை, அந்த காலத்து தர்ம சிந்தனை, எப்படி ஒருவரோடு ஒருவர் உதவிக் கொண்டார்கள் என்பதை பற்றியச் செய்திகள் எல்லாம் கல்வெட்டில் வெட்டி வைத்துள்ளனர்.”




      “கொலை நடந்தால் இப்போது தூக்குத்தண்டனை வழங்கப்படுகிறது, ஆனால் கொலைக்குத் தூக்குத்தண்டனை தேவையில்லை என்று 1000 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்ததுப் பற்றி கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. நவீன சிந்தனைக் கொண்டு முன்பே இப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதைத்தான் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள லிங்கம் 1000 ஆண்டுகளாக வழிபட்டு வந்தவை, அதனால்தான் சுயம்பு லிங்கம், தானாக வந்தது என கூறுகின்றனர். நம் முன்னோர்களை கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு ஏற்ப சோழர்கள் ஒவ்வொரு ஊரிலும் கோயில் கட்டிச் செழுமைபடுத்தினார்கள். வேளாண்மையை வளர்த்தார்கள். அதற்கான செய்திகள் அனைத்து கோயிலிலும் இருக்கிறது. கோயில் நிலங்கள் வேளார்களுக்கு கொடுத்து பயிர் செய்ய வைத்தனர்.” இவ்வாறு உரையாற்றியப் பின் கோயிலை பார்த்துவிட்டு ஊருக்குள் வெளியில் கீழே படுக்கை வாட்டதில் உள்ள முகம் சிதைக்கப்பட்ட மகாவீரர் தனி சிற்பத்தை பார்த்தோம். அந்த சிற்பம் மகாவீரர் சமண தீர்த்தகங்கரர் சிலை 9 நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம் எனவும் சமணம் பற்றியும் தீர்த்தகங்கரர் பற்றியும் மிகவும் சுருக்கமாக ஒரு வீட்டின் வெளி திண்ணையில் பூங்குன்றன் அவர்கள் எடுத்துக் கூறினார். தத்தங்கி சாமி என மகாவீரர் சிற்பத்தை முன் காலத்தில் வழிபட்டதாகவும் இதற்காக மார்கழி மாதம் முடிந்து தைத்திருநாளில் மக்கள் நோன்பிருந்து தைமாதம் விழா கொண்டாடுவதை தைத்தங்கி என்பதை தத்தங்கி என மருவியதாகவும் தெரிவித்தார். (இதனைபற்றிய விளக்கம் மரபு நடை-4 சிறு கையேட்டில் உள்ளது) அனைவருக்கும் பெருமணம் வரலாற்று குறித்த கையேட்டை அளித்தனர். இதன்பின் ஊர் நடுவில் உள்ள அம்மன் கோயில் மண்டபத்தில் இருந்த நடுகல்லை பார்த்துவிட்டு ஆதி திருவரங்கம் புறப்பட்டோம்.

 



ஆதி திருவரங்கம்:

ஆதி திருவரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்குச் நடுப்பகல் 12 மணியளவில் சென்றோம். இக்கோயில் இடைக்கால சோழர்களால் கட்டபட்டு விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கபட்டது. இந்த கோயிலின் சிறப்பு கோயிலின் தென் கிழக்கு மூலையில் செங்கல்லால் கட்டப்பட்ட வரலாற்றுக் கால தானிய சேமிப்பு களஞ்சியம் உள்ளது. இது கோயிலுக்கு வேளாளர்கள் அளிக்கும் தானியங்களை சேமித்து வைக்க கட்டப்பட்டிருக்கிறது.




ஜம்பை (சம்பை):

பிற்பகல் உணவிற்கு பின் ஜம்பை சென்றோம். ஜம்பையில் உள்ள ஜம்புகேசுவரர் கோயில் என்ற தான்தோன்றி ஈசுவரர் கோயிலுக்கு சென்றோம். கோயிலின் முன்மண்டபத்தில் பூங்குன்றன் ஐயா அவர்கள் இந்த கோயிலின் வரலாறு, கல்வெட்டு குறித்து எடுத்துரைத்தார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் கட்டபட்டது, இக்கோயில் பெண்ணை வடகரை வாணகோபாடி பகுதியைச் சேர்ந்தது. நிறைய கல்வெட்டுகள் உள்ளன. பராந்தகன் காலத்தில் கொடுக்கப்பட்ட நிலக்கொடை, பொன் கொடை, காசுக்கொடை எல்லாவற்றையும் வெட்டி வைத்துள்ளனர். வாணகோபாடி, வேசாலிப்பாடி, முனைப்பாடி என்று பாடி பெயருடன் கூடிய நாடுகள் இப்பகுதியில் அதிகம், ஏனென்றால் குடி பெயராலேயே அந்த பகுதியை அழைத்தார்கள். வாணகோவரையர்கள் ஆட்சி செய்த பகுதி வாணகோபாடி, முனைதரையர்கள் ஆட்சி செய்த பகுதி முனைப்பாடி என்று அழைக்கப்பட்டது. பெண்ணை ஆற்றின் வடக்கே இருப்பதால் பெண்ணை வடகரை வாணகோபாடி என கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. பல்லவர்கள் ஆட்சி காலத்திற்குப் பிறகு சோழர்கள் காலத்தில் அவர்களே நேரடியாக ஆட்சி செய்த போது அந்தந்த ஊரில் உள்ள கோயில்களை புதுப்பித்து அழகான சிற்பங்களை வடித்து செப்புத் திருமேனிகளை செய்து கோயில்களுக்கு கொடுத்தார்கள். இது போன்று வழங்கப்பெற்ற கோயில்தான் சோழர் காலத்து கோயில் ஜம்பையாகும்.




      இந்த ஊரை கல்வெட்டுகளில் சம்பை என்று அழைக்கப்படுவதாக குறிக்கப்பட்டுள்ளது. சம்பை என்ற கோரை இப்பகுதியில் உண்டு, பாய் முடைய பயன்படுவது எனவே இந்தக் கோரைப்புல் பெயரால் வந்திருக்கலாம். ஜம்பு என்பது காவலையும் குறிக்கும், நாவல் தொடர்பான ஒரு மரத்தையும்  குறிக்கும். இதனால் ஊருக்கு இந்த பெயர் வந்திருக்கலாம். ஏதோ மரமோ, செடியோ அடிப்படையாக கொண்டு வழங்கி வந்திருக்கிறது. கோயிலுக்கு தான் தோன்றி ஈசுவரர் என்று பெயர். ஏற்கனவே காலம் காலமாக 2000 ஆண்டு காலமாக, ஊர் மக்களால் வழிபடப்பட்டு வந்திருக்க வேண்டும். தூண் வழிபாட்டின் எச்சம்தான் லிங்க வழிபாடு. இப்போது பார்க்கும் லிங்கம் ஒரு காலத்தில் மரத்தினாலோ, கல்லாலோ செய்யப்பட்ட தூண்கள் கொண்டு நடப்பட்ட வழிபாட்டு முறைதான் இருந்தது. அதைத்தான் கல்லில் லிங்கம் செய்து கோயில் கட்டி வழிபட ஆரம்பத்தார்கள். இந்தக் கோயில் கந்தூணை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என பல காலம் பலி கொடுத்தார்கள். தேவாரத்தில் ஏற்கனவே வழிபட்டது போன்று, எல்லாக் கோயிலும் பாடல் பாடும் போது எதுவும் சொல்லவில்லை, தீடிரென்று சிவன் கோயில் கட்டபட்டதாகவும், சிவன் இங்கு இருந்தது போலவும், அதனாலேயே சிவன் வழிபாடு சங்க காலத்தில் இருந்ததாக கூறுவர். அவர்கள் நினைப்பது போன்று தேவாரத்தில் பாடுவார்கள். ஆனால் அப்படி கிடையாது, தேவாரத்தில் பாடியிருப்பது அவர்கள் காலத்தில் அவர்கள் நினைத்ததை பாடி வைத்திருக்கிறார்கள். ஆனால் சில இடங்களில் உண்மையையும் சொல்கிறார்கள். இந்த சம்பைக்கு தேவாரப்பாடல் எதுவும் கிடையாது. இது ஒரு வாணிகத்தளம், நிறைய வணிகர்கள் இருந்தார்கள் என்று கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. என்னென்ன வணிகம் செய்தார்கள் என்பதைப் பற்றியும் கல்வெட்டு இருக்கிறது. அந்த வணிகர்கள் இந்த கோயிலுக்கு நகரத்தார் என்ற பெயரில் காசுக்கொடை, நிலக்கொடை கொடுத்திருக்கிறார்கள். இந்த கொடை கோயிலுக்கு வளமான நிலையை கொடுத்தது.




செழிப்பான ஊராக இருந்ததால் பல ஊர்களில் இருந்து வந்து மக்கள் இங்கு குடியேறினார்கள், ஊர் பெரியதாகி மக்களிடம் முரண்பாடு பெரியதாகி கொலைகளும் அதிகமாகியது. வேறு எந்தப் பகுதியிலும் இல்லாது 6 கொலை நடந்த ஊரே இங்குதான் பார்க்க முடிகிறது. மற்றப் பகுதிகளில் ஒன்று இரண்டு கொலைதான் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஆனால் இந்த ஊரில்தான் 50 ஆண்டுகளில் 6 கொலைகள் நடந்துள்ளது, ஏனென்றால் இந்த ஊர் மக்கள் ரத்த உறவுள்ள மக்கள், என் குடியை சேர்ந்தவரை கொன்றால் உன் உயிரை வாங்குவதுதான் என்னுடைய வேலை என்ற அடிப்படையில் இந்த கொலைகள் நடந்துள்ளன. இதற்கு அந்த காலத்திலேயே கொலைக்கு தூக்குத் தண்டனை கொடுக்கவில்லை என்பது தான் நம் நாட்டில் மரபாக இருந்துள்ளது. சோழர்கள் காலத்தில் உள்ள கல்வெட்டுகள் அனைத்திலும் கொலை நடந்தவுடன் விசாரணை நடக்கும், பின் இந்த கோயிலுக்கு விளக்கு ஏற்றினால் போதும் என்று தண்டனை கொடுத்திருக்கிறார்கள். பஞ்சமா பாதகத்திற்குள் ஒன்றாக் கருதி கோயிலுக்கு விளக்கு ஏற்றினால் இந்த பாதகம் நம்மை விட்டு விலகி விடும் என்ற அடிப்படையில்தான் இந்த தண்டனையை கொடுக்கிறார்கள். சித்திரமேழி பெரிய நாடு என்பது ஒரு சபை அதில் கொலையை நன்கு விசாரித்து என்ன பேசினார்களோ அதை அப்படியே கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள். பெரும்பாலான கொலைகள் திட்டமிட்டு நடைபெறவில்லை. வில்விடும் போது தவறி ஒருவர் மீது குத்தி விடுவதை, முறைப்படி என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதை வழங்கினர். உயிருக்கு உயிர் பல்லுக்குப் பல் என்பதெல்லாம் அக்காலத்தில் இல்லை. நாம் நினைப்பது தவறு இது நடந்தது நாயக்கர் காலம், விஜய நகர காலத்திலிருந்துதான் இது வருகிறது. சோழர்காலம் வரையும் உயிர் விட்டதற்கு உயிர் வாங்குவது என்பது கிடையாது என்ற சான்றுகள் இக்கோயிலில் இருக்கிறது.

இந்த ஊரில் வாணிகம் நடைபெற்றது, பெண்ணை ஆற்றங்கரை ஒரம் ஒரு பெருவழி இருந்தது. அந்த காலத்திலிருந்து பல்லவர், சோழர், விஜயநகர காலம் பல வாணிக வளம், வேளாண் வளம், தொழில் வளம் என செழிப்புற்றிருந்தது. இந்த கோயிலில் ஏறத்தாழ 60-65 கல்வெட்டுகள் வெட்டி வைத்துள்ளனர். ஏறத்தாழ 45-50 கல்வெட்டு சோழர் காலத்தியது சேர்ந்தவை. அதனால் சோழர் காலத்தில் இந்த ஊர் சிறப்புற்றிருந்தது, இந்த பகுதி சிற்றரசர்கள் ஆட்சி செய்து பின்னர் சோழர்களின் நேரடி ஆட்சிக்கு வந்தது. கொலை நடக்காத பகுதியாக அப்போது இந்த பகுதி இருந்துள்ளது. இந்தப் பகுதி சித்தரமேழி பெரியநாடு என்ற சபை எல்லா வரிகளையும் வாங்கி தேவைப்படும் கோயில்களுக்கு கொடுத்தது. அரசரிடம் யாரும் போய் கேட்கவில்லை, அந்தளவிற்கு சுதந்திரத்தை பெற்ற வளமிக்க வணிகர்கள், வேளார்களும் தங்கியிருந்த பகுதியாக இருந்ததால் இந்த ஊர் கோயில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் வளமாக இருந்தது. அதன் பிறகு வந்த அரசர்களால் கொஞ்சம் கொஞ்சமாக கோயில் ஒடுங்கி போனது. பின்னர் து கீழே போய்விட்டது. இதுதான் இந்த ஊரைப்பற்றிய வரலாறு. பராந்தகன், ராஜேந்திரன், விக்கரம சோழன், பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன என்று கூறி முடித்தார்.

               இதன் பிறகு இந்த கோயிலைப்பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர் தொடர்ந்து அவர் கண்டுபிடித்தப் பாறை தொல் ஓவியம் பற்றி எடுத்துக் கூறினார். அவர் கூறியதாவது, “சமணர் வாழ்ந்த இடமாக இருக்கிறது இந்த ஜம்பை குகை கல்வெட்டு, அதற்கு பக்கத்தில் எதிரே கல்வெட்டு இருக்கிறது. சமண முனிவர்கள் எப்போதும் நிர்வாணமாக இருப்பார்கள். எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்த கூடாது என்று இயற்கையாகவே வாழ்ந்தார்கள். பாறையை கூட குடைய கூடாது என இயற்கையாக இருக்கும் இடத்தில்தான் இருப்பார்கள். அவர்கள் வேலை மருத்துவம், மருந்து தயாரிப்பது, இதற்காக சிறு சிறு குழிகளைத் தோண்டி அரைத்திருக்கிறார்கள். அந்த காலத்தில் மருத்துவமனை இல்லை, அதனால் மக்கள் சாமியார்களை நம்பி செல்வர், அவர்களின் நோய் தீர ஏதேனும் மூலிகை கொடுப்பார்கள். இந்த குகைக்கு அடுத்த குகையில் வண்ண ஓவியங்கள் இருக்கிறது. தமிழ் பிராமி வடிவத்தில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. காவி, கருப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்து இயற்கையான முறையில் மூலிகை கொண்டு தயாரித்த கல்வெட்டில் செதுக்கி அதில் வண்ணமிட்டுருக்கிறார்கள். அதை குனிந்து படுத்து மேலே பார்த்தால்தான் தெரியும். 10 அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட பாறையில் கட்டம் போட்டு இரண்டாக பிரித்து அதில் நட்சத்திரம் போன்று நிறைய குறிகள் வரைந்துள்ளனர். சூரியன் போன்று கோள்கள், ஒன்பது வகையான கோள்கள் போன்று வடிவத்தையும் செய்து வரைந்துள்ளனர். அந்த 9 கோள்களில் 7வது கோளில் 3 துணைக்கோள்கள் இருப்பதை போன்று விதவிதமாக வரையப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக உள்ளது. இதே போன்று வண்ணங்களில் திருமலை கோயில் சமணர் படுக்கை மேல் காணப்படுகிறது. இந்த ஊர் வரலாற்று ஆதார அடிப்படையில் பராந்தகன் காலத்திலிருந்து சுயம்பு கேசவன் கோயில் உள்ளது. சுயம்பு என்பது இயற்கையாக தோன்றியது நாம் யாரும் பார்க்காத போது இந்த லிங்கம் இருந்ததால் நம்பித்தான் ஆக வேண்டியுள்ளது. ஆதாரமில்லாமல் மறுப்பு தெரிவிக்க இயலாது. இந்த கோயிலுக்கு புராணக்கதை ஒன்று சொல்கிறார்கள். இந்த ஊர் வடபெண்ணை ஆற்றங்கரையில் இருப்பதால் அக்காலத்தில் வெள்ளம் கோயிலுக்கு மேல் சென்றிருக்கும், அருகாமையில் ஒரு கோட்டை இருந்தது, அந்த கோட்டையிலிருந்து அரண்மனை யானை ஒரு நாள் யானை ஆற்றில் நீர் குடிக்க ந்தது, அந்த ஆற்றங்கரையில் இருந்த ஜம்பை புற்களுக்கு இடையில் ஒரு முனிவர் நீருக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தார். யானை நீர் குடித்த போது முனிவரின் தவத்திற்கு தடங்கல் ஏற்பட்டது, அதனால் யானையின் தும்பிக்கையை வேகமாக அடித்துவிட்டார். ரத்தம் சொட்ட அரசரிடம் சென்று முறையிட்டு அரசரை அழைத்து வந்தது. ஆற்றின் ஒரம் புல்லுக்கு இடையில் முனிவர் இல்லாமல் லிங்கம் இருந்ததால் தானே தோன்றியதாக கருதி கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். இது புராணக்கதை.”




      “இந்த ஜம்பை ஓவியம் இந்தியாவிலேயே புதுவிதமான செய்தியை தருகிறது. இது பழமையான ஊர் என்பதற்கு சான்றாக இந்த வண்ண ஓவியமும், சமண படுக்கையும், சமணக்குகை, சமணருக்கு படுக்கை வெட்டி கொடுத்த கல்வெட்டும் இருக்கிறது அந்த கல்வெட்டு ஸதிய புதோ அதியன் நெடுமான் அஞ்சி ஈத்த பாளிஎன்று வெட்டப்பட்டுள்ளது.



              
அதியமான் பரம்பரை, நெடுமான் பெயர். இந்த குகையில் படுக்கையை சமணருக்கு வெட்ட கொடுத்துள்ளார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழக வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த கல்வெட்டு.

      மலைக்குகையிலிருந்து இறங்கி ஏரியின் வழியாக வரும் போது ஒரு செக்கு கல்வெட்டு பார்வையிட்ட பின்னர் மரபு நடை வரலாற்று உண்மைகளை நேரடியாக பார்த்த இனிய நினைவுகளுடன் வீடு திரும்பினோம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Research Article -3 - Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796)

  Dubashes recorded in the Diary of Muthu Vijaya Thiruvengadam Pillai (1794-1796) (Monograph in Tamil by Jayaseela Stephen, Pondicherry, 1...